வைகாசி இரண்டாயிரத்தி ஒன்பதுடன் புலிப்போராளிகளின், அவர், மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கையும் சிதறிப்போயிற்று. அவர்கள் பட்ட துயரின் அளவு ஆராயமுடியாப் பெரியது. தம் இனத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுக்கும் அவா ஒன்றுடனேயே பலர் தானாக புலிகள் அமைப்பில் இணைந்தனர். மனிதரில் இருக்கும் அழுக்கான சுயநலத்தை சுருக்கிட்டு இனச்சுமையை சுமக்கப்போனவர் அவர். அவர்களில் பலர் இன்று மாவீரர் ஆகிவிட்டனர். பலர் இன்றும் வெளித்தெரியா சிறைகளில் அங்கங்கள் பிடுங்கப்பட்டு சித்திரவதையில் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் சிறைக்கூடங்களில் விசாரணை அற்று வதங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
புனர்வாழ்வு என்ற பெயரில் கழுத்தில் சுருக்குக் கயிற்றுடன் விடப்பட்டிருக்கிறார்கள். சிலர் தப்பிப்பிழைத்து பிறநாடுகளில் அகதியாய் அலைகின்றனர். சிலர் அபாய கடற்பயணங்களில் மீன்களுக்கு இரையாகினர். விடுதலைக்காய் உயிர் தந்த மாவீரர்களின் மக்களின் நினைவில் சிலர் முழு/ அரை மனநோயில் புழுங்கி வாழ்கின்றனர்.
புலிப்போராளிகளின், மாவீரர்களின் குடும்ப நிலையோ மிகப்பரிதாபமானது. பொருளாதாரச் சுமை ஒருபுறமும், அழகூட முடியாக்கொடுமை உடன், கல்வி ஊடாக சமூக கட்டமைப்பில் பின்தங்கியும், வாழ்வை வாழ்ந்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் சிங்கள புலனாய்வுக்குள் சிக்குப்பட்டுக்கிடக்கிறார்கள். எந்த உய்வும் இல்லை. பூகோளத்தின் எல்லை மட்டுமல்ல சோகத்தின் எல்லையும் பெரியது தான்.
புலிவேசம் போட்ட சிலர் சிங்களத்திற்கு துணை போய் அற்ப சலுகைகளுக்காய் காட்டிக்கொடுப்பதும் மறுப்பதற்கில்லை. இவர்களில் சிலரும், புலிகளில் ஒட்டி இருந்த சிலரும், புலிகளை அவர் வரலாறுகளை கொச்சைப்படுத்தி பிச்சை எடுப்பதும் உண்மை. எது எப்படி இருப்பினும் புலிகளின் ஈகத்தை, அவர் வீரத்தை தமிழராய் வாழ்பவர் மனதிலிருந்து என்றும் அகற்றிவிடமுடியாது.
- சுருதி-
http://leo-malar.blogspot.com/2012/01/blog-post.html
Blogger Comment
Facebook Comment