பொறுப்புக்கூறலை சுட்டிக்காட்டத் தவறிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் சாராம்சத்தை இங்கு தருகிறோம்.

1. யுத்தத்தினால் கடுமையான பாதிப்பிற்குள்ளான மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, பாதிக்கப்பட்ட மக்களுடைய உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பவற்றிற்கான உரிமைகளை உத்தரவாதம் செய்வதான ஒரு நம்பிக்கையான கணக்கொப்புவித்தல் முறையினை மையமாகக் கொண்ட நேர்மையான நல்லிணக்கத்தை எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதியன்று ஐனாதிபதி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் ஆணைக்குழுவை அமைத்து அக்குழுவானது கணக்கொப்புவித்தல் தொடர்பான விடயங்களை ஆராயுமென உலகிற்குக் கூறினார்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது படிமுறைகளும் நடைமுறைகளும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லத் தவறியது.

அதுமட்டுமன்றி, இவ் ஆணைக்குழுவானது கணக்கொப்புவித்தல் நடைமுறைகள் தொடர்பான சர்வதேச நியமங்களை முழுமையாகப் பின்பற்றி அமையவில்லை.

3. அங்கத்துவத்தில் காணப்படும் இன மற்றும் பாலியல் ரீதியிலான சமமின்மை, அங்கத்தவர்களிடையே காணப்படும் நலன்ரீதியிலான முரண்பாடும் காப்புரிமையற்ற சுதந்திரம், சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்டங்களில் அங்கத்தவர்களுக்குப் பொதுவாகக் காணப்படும் பாண்டித்தியமின்மை மற்றும் ஆணைக்குழுவின் பணிப்பாணை, படிமுறை, நடைமுறை ஆகியவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளுடனோ அல்லது பரந்துபட்ட தமிழ் சமூகத்துடனோ எந்தவிதமான கலந்தாலோசனையிலும் ஈடுபடாமை ஆகியவை இவ்வாணைக்குழுவின் சுதந்திரத்தன்மை மற்றும் நிபுணத்துவம்சார் சந்தேகத்தை
ஏற்படுத்துகின்றன.

4. மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது முறைமையானது ஒப்பீட்டளவில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு குறைந்தளவு முக்கியத்துவத்தையே வழங்கியது. இவ்வாணைக்குழுவானது யுத்த கடைசிக் கட்டங்களில் நிகழ்ந்த வன்முறைகளுக்கான உண்மையான கணக்கொப்புவித்தலைத் தொடர்ந்து செய்வதற்கான வளங்களையும் அலுவலகர்களையும் குறைவாகவே கொண்டிருந்தது. உதாரணமாக, இவ் ஆணைக்குழுவானது வடக்கு, கிழக்கில் சாட்சியங்களை திரட்டுவதற்கு செலவழித்த நேரமானது கொழும்பிலே செலவழித்த நேரத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகியதாகும். கொழும்பில் இடம்பெற்ற விசாரணைகளுக்காக 56 நாட்களை செலவிட்ட ஆணைக்குழு வடக்கிலும் கிழக்கிலும் மொத்தமாக 22 நாட்களை மாத்திரமே செலவிட்டது. அதுமட்டுமன்றி, நேரம் பற்றாக்குறையினைக் காரணம் காட்டி ஆணைக்குழு சாட்சியங்களிற்கு குறைவான கால அவகாசமே வழங்கப்பட்டது. பலசந்தர்ப்பங்களிலே எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சாட்சிகளுக்கு சாட்சியமளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படாததோடு அவர்கள் தமது பிரச்சினையினை எழுத்துவடிவில் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்கு மட்டுமே வேண்டப்பட்டனர்.

5. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானதுசாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு சரியான நிகழ்ச்சித்திட்டத்தையும் கொண்டிருக்க வில்லை. விடயங்களை மேலும் பாராதூரமாக்கும் வகையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நிறைவுற்ற பின்னரான காலப்பகுதியில் சாட்சிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட பயமுறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் மூடிய பாதுகாப்பான இரகசிய அறையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்து வதில் தோல்வி ஆகியவற்றினூடாக பிரதிபலித்த அங்கத்தவர்களின் மனப்பாங்கானது சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உறுதியான வழிகளில் மேலும் தீங்கை விளைவித்தது. உதாரணமாக, சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றி முறைப்பாடு செய்த கல்முனையைச் சேர்ந்த சாட்சியொருவர் பின்னர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நாலாம் மாடியிற்கு அழைக்கப்பட்டார். இது அரசு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் ஆணைக்குழுவின் செயல்முறைகளில் கண்காணித்ததையும் சாட்சிகளின் விபரங்கள் வெளியிடப்படுதல் தொடர்பில் ஏற்பட்ட மிக எளிதான இணக்கப்பாட்டையும் உறுதிசெய்கின்றது. அரசுக்கெதிராக போர்க்குற்றச்சாட்டுகளை எழுப்புபவர்களுக்கெதிராக இலங்கையில் காணப்படுகின்ற எதிர்ப்புத்தன்மையானது, குற்றங்களில் தொடர்புடைய மூத்த அரச தரப்பு அலுவலகர்களைச் சிக்கவைக்கும் தன்மைகொண்ட சாட்சியங்களை முன்வைக்கும் சாட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எதிரான பழிவாங்கல்கள் காணப்படமாட்டாது என்பது உறுதிசெய்யப்படும் வரை அரசுக்கெதிராக உள்ள போர்க் குற்றங்களை அணுகும் எந்தவொரு கணக்கொப்புவித்தல் முறையும் பிரயோசனமற்றதாகவே அமையும். மேலும் தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் சாட்சிகளின் வீடியோ சாட்சியங்களைப் பதிவு செய்யாமையானது, பழிவாங்கப்படுவோம் என்ற பயமற்ற சாட்சிகளின் சாட்சியங்களை இவ்வாணைக்குழு இழக்கச் செய்துள்ளது.

6. இவ்வாணைக் குழுவினால் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட இடைக்காலப் பரிந்துரைகள் பயனுள்ள வகையில் அமுலாக்கப்படவில்லை. அமுலாக்கத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட முகமையகங்களிடையேயான ஆலோசனைக் குழுவின் அமுலாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றிய அறிக்கையானது உண்மையான முன்னேற்றமின்மையை மட்டுமே எடுத்துக்காட்டியுள்ளது. உறுதிப்படுத்தாவிடினும், எளிமையான இவ்விடைக்காலப் பரிந்துரைகளை அமுலாக்குவதில் அரசாங்கத்தின் தோல்வியானது ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை அமுலாக்குவதில் அரசின் பொறுப்பின்மையை சமிக்கை செய்கின்றது.

7. 2011 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 16ம் திகதியன்று பாராளுமன்றத்திற் கூடாக வெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது இறுதி அறிக்கையானது மனிதாபிமான சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டியதாக காணப்படுகிறது. எனினும் இவ்வாணைக்குழுவானது அரசாங்கத்திற்கெதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் என்பவற்றை உள்ளடக்கியதான சர்வதேச மனிதநேயச் சட்டமீறல்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுக்களை புறக்கணிக்கின்றது. இக்குற்றச்சாட்டானது, உணவு மற்றும் மருந்து போன்றவற்றை இழக்கச்செய்வதற்காக வேண்டுமென்றே வன்னியிலிருந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டியமை, யுத்த சூனிய பிரதேசங்களிலே வேண்டுமென்றே மனிதாபிமானமற்றமுறையிலும் கவனமற்றமுறையிலும் தாக்குதல் நடத்தியமை, வைத்தியசாலைகள் உட்பட பொது மக்கள் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியமை, சரணடைந்தவர்களைக் காணாமற் போகச்செய்தமையும் அவர்கள் காணாமற் போவதற்கு காரணமாக இருந்தமையும் போன்றவற்றை உள்ளடக்கும்.

8. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது அணுகு முறையும் படிமுறையும் பின்வரும் இரு விடயங்கள் காரணமாக குறைபாடுடையதாக அமைந்தன:

    (1) தெரிந்தெடுக்கப்பட்ட சாட்சிப் பத்திரங்கள்
    (2) வழங்கப்பட்ட தகவல்களுக்கேற்ற சட்டங்களைப் பிரயோகிக்கத் தவறியமை.


9. இக் குழுவானது, வடக்கு கிழக்கில் பணியாற்றிய வைத்தியர்களின் சாட்சியங்களை  முக்கியத்துவப் படுத்தியிருந்த போதும் அவர்கள் சாட்சியங்களை வழங்கியபோது என்ன பின்னணியிலிருந்தார்கள் என்பதை குறிப்பிடத்தவறிவிட்டது. அதாவது அவர்கள் கைது செய்யப்பட்டதும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்திலே அவர்கள் விடுத்திருந்த அறிக்கையை பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக வாபஸ் பெற்றமை என்பவற்றைக் குறிப்பிடலாம். ஆகவே, இவ்வைத்தியர்களால் இவ்வாறாக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட சாட்சியங்களின் நம்பகத்தன்மை பெரிதும் சமரசம் செய்யப்பட்டன. குறிப்பாக, ஒவ்வொரு தாக்குதலும் வீடியோப்படம் பிடிக்கப்பட்டு மேலதிகாரிகளின் முறையான ஒப்புதலுடனேயே நிகழ்த்தப்பட்டன என இராணுவ சாட்சியங்கள் ஒப்புக்கொண்ட போது, கீழே தன்னியங்கி வானூர்தி வீடியோப் படங்கள், வான் வழித்தாக்குதல்களின் வீடியோப்படங்கள் மற்றும் இராணுவ ஆவணக்காப்பகம் போன்ற மிக முக்கியமான சாட்சியங்களைப் பெறுவதற்கு ஆணைக்குழு தவறிவிட்டது. மேலும் இந்த ஆணைக்குழுவானது முல்லைத்தீவின் அரச அதிபராக கடமையாற்றிய இமெல்டா சுகுமார் வழங்கியிருந்த சனத்தொகை மதிப்பீட்டு அறிக்கையையோ அல்லது வன்னியிலிருந்த அரச அதிபர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் சர்வதேச நிறுவனங்களிடம் உணவு வேண்டி விண்ணப்பிக்க வேண்டாமென அனுப்பிய கடிதத்தையோ கருத்தில் கொள்ளவும் முக்கியத்துவம் கொடுக்கவும் தவறியுள்ளது. பிரதானமாக, வன்னி சனத்தொகையைக் குறைத்து மதிப்பிட்டு 2009 ஆம் ஆண்டு மாசி மாத நடுப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையையும் கவனத்திற்கொள்ளவில்லை. இத்தகைய முக்கிய சாட்சியங்கள் உணவின்றித் தவித்த வன்னி மக்களை உணவு சென்றடைவதைத் தடுப்பதற்காக அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்ட மிட்ட முயற்சியினைச் சுட்டிக்காட்டுவதாக அமைவதுடன் அவை இவ்வாணைக் குழுவினால் நுணுக்கமாக பரிசீலிக்கப்பட வேண்டியவையாகவும் உள்ளன.

10. அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வழங்கப்பட்ட உண்மையான தகவல்களுக்கு ஏற்ப சட்டத்தை பிரயோகிக்க தவறியுள்ளது. இழைக்கப்பட்டதாக நம்பப்படும் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச மனிதநேய சட்டமீறல்கள் மற்றும் உள்நாட்டு சட்டமீறல்கள் போன்றவற்றை ஆராய்வதை இக்குழு புறக்கணித்துள்ளது.

11. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பொது மக்கள் மற்றும் பொது மக்கள் சனத்தொகை என்பவற்றிற்குத் தெளிவற்ற வரைவிலக்கணங்களே காணப்படுவதாக இவ்வாணைக்குழு தவறாக முடிவுறுத்துகின்றது. முதலில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பொது மக்கள் என்ற பதத்தின் வரைவிலக்கணத்தைத் தீர்மானிப்பதற்கு, சர்வதேச மனிதநேயச் சட்டத்திற்கமைய போரில் நேரடியான அல்லது தொடர்ச்சியாகப் பங்குபற்றுதல் மற்றும் வேறுபடுத்தல் கோட்பாட்டில் அவற்றின் விளைவுகள் போன்றவற்றை இன்னும் விரிவாக விபரித்திருக்க வேண்டும். ஏனெனில் போரில் நேரடியாகப் பங்குபற்றாத அனைவரும் பொதுமக்கள் எனவும் அவர்களை இலக்குவைக்க முடியாது எனவும் சட்டம் தெளிவாக கூறுகிறது. சட்டத்தினைக் கவனத்தில் கொள்ளாது இக்குழுவானது முன்னர் எப்போது நிகழாத இலங்கையின் அனுபவத்தின் பக்கம் கவனத்தைத் திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றது. ஆயினும், போரில் நேரடியாகப் பங்குபற்றுதல் என்பதனை தீர்மானிக்கின்ற விடயங்கள் ஏன் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களில் பிரயோகிக்கப்படக் கூடாது என்பதற்கு சரியான காரணங்கள் எவற்றையும் ஆணைக்குழு வழங்கவில்லை. மேலும், பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கெதிரான முழுமையான தடையானது ஒரு சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாக இருக்கும் சந்தர்ப்பங்களைக்கும் ஏற்புடையதாக இருப்பதுடன் அச்சனத்தொகையானது பொதுமக்கள் என்ற வரைவிலக்கணத்திற்குள் வராத தனிநபர்களைக் கொண்ட ஒரு குழுவினைக் (போராளிகளைக்) கொண்டிருப்பினும் அது இச்சனத்தொகையின் பொதுமக்கள் சனத்தொகை என்ற இயல்பினை நீக்காது என்ற தீர்மானத்தை ஏற்படுத்திய முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டவியலைப் பின்பற்றுவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

12. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது இராணுவத்தினர் யுத்த சூனிய பிதேசங்களிலே வேண்டுமென்று தாக்குதல் நடத்தவில்லையெனவும் கூறுக்கின்றது. ஆனால் யுத்த சூனிய பிதேசங்களிலேயிருந்து மக்களிடையே விடுதலைப்புலி உறுப்பினர்களும் காணப்பட்டார்கள் என்பதும் அவர்கள் வெளியேறிச் செல்ல விரும்பிய மக்களை அனுமதிக்கவில்லை என்பதற்கும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தபோதும், யுத்த சூனிய பிதேசங்களிலே இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் அங்கிருந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலை நடத்துவதைத் தவிர படையினருக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை என்ற உரைவடிவத்தை மட்டுமே ஆணைக்குழு ஏற்றுக்கொள்கின்றது. பல்வேறு காரணங்களினால் இப்பகுப்பாய்வானது பிழையானதாகும்.

13. முதலாவதாக, இது நியாயமான இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற போது நியாயமற்ற முறையில் பொது மக்கள் குறிவைக்கப்பட்டால் அத்தாக்குதலானது நியாயமற்றது எனக் கூறும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை புறக்கணிக்கின்றது.

14. இரண்டாவதாக, விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலை நடத்தியதாகக் கூறுகின்ற, இவ்வாணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட கதைவடிவமானது போரினால் பாதிக்கப்பட்ட பலரது குறிப்புக்கள், குறிப்பாக முதலாவது யுத்த சூனிய பிதேசத்தினுள்ளே சுதந்திரபுரம் சந்தியிலமைந்த ஐக்கிய நாடுகள் சபையின் மையத்தின் மீதான தாக்குதல் ஆகிய வடிவங்களுக்கு ஏற்றவாறு அமையாத நியாயமற்ற பொதுப்படுத்தலாகும்.

15. அத்துடன், மூன்றாவதாக இவ்வாணைக்குழுவானது பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் விகிதாசாரக் கோட்பாட்டிற்கிணங்கவே காணப்படுகின்றது என்ற முடிவிற்கு வந்துள்ளது. எதிர்பார்க்கின்ற இராணுவ ரீதியிலான அனுகூலத்திற்கும் மக்கள் இழப்பிற்குமிடையிலான சமநிலையினைப் பரீட்சிக்காது, தாக்குதல்கள் விகிதாசாரமானவை என்ற முடிவினை ஆணைக்குழு அடைகின்றது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஏற்பட்ட மக்கள் இழப்புக்களின் சரியான எண்ணிக்கை இல்லாமல் இந்தச் சோதனையை போதுமான அளவிற்கு செய்திருக்கமுடியாது. மேலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது யுத்த சூனிய பிதேசங்களிலே பொதுமக்களின் இழப்புகளைக் குறைக்கும் பொருட்டு இராணுவம் கனரக ஆயுதங்களுக்கு பதிலாக வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்க முடியுமா nஎன்பது பற்றி விபரமான எந்தவொரு விசாரணையையும் ஆணைக்குழு நடத்தவில்லை. ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த பகுதிகளில் எல்லாவிதமான நிபந்தனைகளின் மீள்கட்டுமானமும் சாத்தியமற்றது என்று முதலீட்டு பிணக்குகளை தீர்ப்பதற்கான சர்வதேச நிலையத்தினால் 1990ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட தெளிவற்ற, பொருத்தமற்ற மாதிரியை இக்குழு மேற்கோள் காட்டியுள்ளது. ஆனால் ஓரு இலக்கை நோக்கி தாக்குதல் நடத்துகின்ற போது எதிர்பார்த்த நிச்சயமானதும் நேரடியானதுமான இராணுவ அனுகூலத்தைக் காட்டிலும் மிக அதிகளவில் பொதுமக்களிற்கு உயிரிழப்பீடோ அல்லது காயங்களோ ஏற்படுமென்றோ அல்லது அவர்களின் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுமென்றோ அல்லது இவ்விருவிதமான பாதிப்புக்களும் ஏற்படுமென அறிந்தால் கட்டளை தளபதிகள் அவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டவியலை மேற்கோள் காட்டுவதற்கு இவ்வாணைக்குழு  தவறியுள்ளது. முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டவியலின்படி, இவ்வாறான இழப்புக்கள் பொதுமக்களுக்கு ஏற்படுமாக இருந்தால் அத்தாக்குதல் தொடரப்படக் கூடாது.

16. மேலும் இரண்டாவது மூன்றாவது யுத்த சூனிய பிரதேசங்கள் தொடர்பிலான ஒரு தலைப்பட்சமான பிரகடனத்தின் விளைவுகளை ஆராய்வதற்கு இந்த குழு தவறியுள்ளது. முதலாவது யுத்த சூனிய பிரதேசத்தில் அரசின் அனுபவம் மற்றும் மக்களிடையே கலந்து காணப்பட்ட விடுதலைப் புலிகளின் தந்திரோபாயம் என்பவற்றின் பின்னணியில் பொது மக்களுக்கு ஆபத்து உண்டென்பதை மிகநன்றாக அறிந்திருந்த போதும் அரசு இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்த சூனிய பிரதேசங்களையும் அறிவித்திருந்தது. தொடர்ச்சியாக புதிய யுத்த சூனியப் பிரதேசங்களைப் பிரகடனப்படுத்தும் அரசின் இந் நடவடிக்கையானது, இப்பிரதேசங்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மக்களிடையே கலந்து இருப்பார்கள் என்ற காரணத்திற்காகத் தாக்கப்படும் என்ற அறிவினை அரசு கொண்டிருந்த போதும் வேண்டு மென்றே பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்ப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து யுத்த சூனியப் பிரதேசங்களை அறிவித்தது என்ற குற்றச்சாட்டினை வலுப்படுத்துவதாக அமைகின்றது.

17. அரசிற்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவினது பகுப்பாய்வானது பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. ஒருபுறம் இராணுவத்தினர் நவீன கருவிகளின் உதவியுடன் யுத்த சூனிய பகுதியிலிருந்த பொதுமக்களை மிகக் கவனமாக இனங்கண்டு ஒவ்வொரு தாக்குதலையும் கவனமாகத் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறும் பாதுகாப்புப் படையினரின் அறிக்கையினை இவ்வாணைக்குழு எந்தவித வினாவுமின்றி ஏற்றுக்கொண்ட அதேவேளை ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்னரும் கடுமையான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன என்ற அரசின் நிலைப்பாட்டையும் இவ்வாணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால், ஒவ்வொரு இலக்கினது தன்மை மற்றும் சரியான அமைவிடம் என்பவற்றை இராணுவத்தலைமைத்துவம் மிகநன்றாக அறிந்திருந்தது. இதேவேளை, நிகழ்ந்த மக்கள் இழப்புக்கள், எந்தவிதமான நோக்கத்தின் பின்னணியிலும் இடம்பெறவில்லையெனவும் வேறு எந்த வழியும் சாத்தியமற்ற நிலையில் முன்னரெப்போதும் ஏற்படாத ஒரு நிலைமையின் விளைவாகவே ஏற்பட்டதாக இவ்வாணைக்குழு முடிவுறுத்தது. விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்களுக்குப் பதில்த்தாக்குதல் நடத்துதல் என்ற தீர்மானமானது களநிலவரங்களிற்கேற்ப களத்திலிருந்த கட்டளைத்தளபதிகளால் மேற்கொள்ளப்பட்டதெனவும் அதில் மீளயோசிப்பதற்கு எதுவும் இருக்கவில்லை எனவும் கூறியிருக்கின்றது. களநிலவரங்களுக்கேற்ப களத்திலிருந்த கட்டளைத் தளபதிகளின் தீர்மானத்தினடிப்படையிலேயே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற விபரிப்பானது பொதுமக்கள் நிலையங்கள் பற்றிய சரியான தகவல்களுடனும் கவனமான திட்டமிடலுடனுமே தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று இவ்வாணைக்குழு முன்னர் குறிப்பிட்ட விபரிப்பிற்கு முரணாக அமைகின்றது. கனரக ஆயுதங்களின் பாவனை அவசியமில்லை என்று யுத்த இறுதிக்கட்டத்தின் போது சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அரசின் நிலைப்பாட்டிற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளது. பொதுமக்கள் அமைவிடங்களை அவர்கள் அறிந்திருந்தார்களேயாயின் அம்மக்களின் இழப்புக்கள் வேண்டுமென்று நிகழ்த்தப்படவில்லை எனக்கூறி எந்தவிதமாகவும் நிராகரிக்க முடியாது. ஆகவே இவ்வாணைக்குழுவின் பகுப்பாய்வானது சுயமுரண்பாடு டையதாக இருப்பதுடன் அரசுக்கெதிரான
குற்றச்சாட்டுக்களை உண்மையாக விசாரணை செய்வதில் தயக்கத்தையும் வெளிக்காட்டுகின்றது.

18. படையினர் வைத்தியசாலைகள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடாத்தினர் என்ற குற்றச்சாட்டு பற்றிய ஆணைக்குழுவின் பகுப்பாய்வு தொடர்பில் இதேபோன்றதொரு விமர்சனம் காணப்படுகின்றது. வைத்தியசாலைகள் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாயின என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஆணைக்குழுவானது முதன்மை ஆதாரங்களற்ற நிலையில் எந்தசாராருடைய ஷெல் இவற்றைத் தாக்கியள்ளது என்பதனை அறுதியாகக் தெரிவிக்க முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் பொதுமக்கள் இழப்பீடுகளை தவிர்க்கும் முகமாக முன்னெச்சரிக்கையாக செயற்ப்பட்டனர் என்கின்ற அடிப்படையில் பார்க்கின்ற போது ஆணைக்குழுவின் இந்நிலைப்பாடானது தொடர்ந்து செயலாற்றுவதற்குக் கடினமான ஒன்றாகக் காணப்படுகின்றது.

மக்கள் இழப்பைக் குறைக்கக் கூடியவகையில் படையினர் தம்வசம் போர் இடம் பெற்ற பகுதிகளைக் கண்காணிப்பதற்கான கருவிகள் இருந்ததாக ஆணைக்குழுவின் முன் சாட்சியம் வழங்கியிருந்த போதும் ஆணைக்குழுவானது அவ் வீடியோ காட்சிகளை சாட்சியமாக கருத்தில் கொள்ளவோ அல்லது வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தியது யாரென்பதைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைக்கோ பரிந்துரை செய்யத்தவறியுள்ளது.

19. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த பின்னர் அல்லது கைது செய்யப்பட்டபின்னர் காணாமல் போனோர் தொடர்பிலான ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுக்களை ஆமோதிக்கிறது.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென ஒரு விசேட ஆணையாளர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் குற்றவியல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரிடம் விபரங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் பரிந்துரை செய்கின்றது.

அதுமட்டுமன்றி, காணாமல் போதல் சம்பவங்களை தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளாக கருதுவதாகவும் அவை ஒரு சில தனிநபர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களாக அது கருதுவதாகவும் தெரிவிக்கிறது. குறிப்பாக, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தான் திறனற்றது என்பதை ஆணைக்குழு ஒத்துக்கொள்ளாமல் இம்முடிவுக்கு வருகின்றது.

புத்தளத்தில் இடம்பெற்ற பகிரங்க விசாரணைகளின் போது விசாரணை செயற்பாடுகளை செய்யக்கூடிய தன்மையினை ஆணைக்குழு கொண்டுள்ளதை ஆணைக்குழுவின் தலைவர் ஆணைக் குழுவின் பணியாணையினை விளக்கமுறுத்தும் போது மறுத்துள்ளார்.

ஆணைக்குழுவானது தனது விசாரணை அதிகாரங்களை ஏற்றுக்கொள்ளாத போதும், 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17 ஆம் திகதிக்கும் 20 ஆம் திகதிக்குமிடையில் இடம்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போதல் சம்பவங்களை திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்டவை எனக் கூறாது, தனிமைப்படுத்தப்ட்ட நிகழ்வுகள் எனவும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை எனவும் முடிவாகத் தீர்மானித்திருந்தது.

இத்தகைய தவறான பண்புறுவர்ணனையானது எந்தவொரு எதிர்கால விசாரணையிற்கும் கேடுவிளைவிப்பதாக அமைவதுடன் குறிப்பாக காணாமல் போதல் மற்றும் சரணடைந்தவர்களைக் கொலை செய்தல் போன்ற திட்டமிட்ட நடைமுறைகளுடன் தொடர்புடைய போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்ப்பதனை நோக்காகக் கொண்டுள்ளது.

20. இவ்வாணைக்குழுவானது யுத்த இறுதிக்கட்டத்தின் போது ஏற்பட்ட மக்கள் இழப்பீட்டினை அளவிடுதல் என்ற விடயமானது தமது பணிப் பாணைக்கு முக்கியமானதாகவும் தமக்கு சவாலாகக் அமைகின்ற ஒரு கேள்வியாகவும் ஏற்றுக் கொண்டுள்ள போதும் அதுபற்றி போதுமான அளவிற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆணைக்குழுவானது அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட சூனிய வலயங்களில் அகப்பட்டிருந்த மக்களது எண்ணிக்கை தொடர்பில் குறிப்பாக இரண்டு பிரதான ஆதாரங்கங்களான மன்னார் ஆயர் அருட்தந்தை கலாநிதி இராயப்பு ஜோசப் மற்றும் முல்லைத்தீவிற்கான அப்போதைய அரசஅதிபரான திருமதி இமெல்டா சுகுமாரன் ஆகியோரிடமிருந்தே சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக் கச்சேரிகளிலிருந்து பெறப்பட்ட முறையான தரவுகளின்படி 2008 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத் தொடக்கப்பகுதியில் 429,059 பேர் வன்னிப்பகுதியில் வசித்தார்கள் என அருட்தந்தை இராயப்பு ஜோசப் அவர்களும் 2009 ஆம் ஆண்டு தை மாதப்பகுதியில் புதுமாத்தளன் பகுதியில் காணப்பட்ட பிரகடனப் படுத்தப்பட்ட சூனிய வலயத்தில் ஏறத்தாழ 360,000 பொதுமக்கள் மீதமாகக் காணப்பட்டனர் எனவும் குறிப்பிட்டனர். 282, 380 மக்கள் மட்டுமே வன்னிப்பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்தவர்களாவர்.

ஆகவே, இத்தரவுகளை வைத்துப் பார்க்கும் போது மீதமிருக்கும் 75,000 இலிருந்து 146, 679 பேர் பற்றிய விபரங்கள் எதுவுமில்லை. ஆணைக்குழுவின் முன்னால் இத்தகைய வலுவான சாட்சியங்கள் காணப்பட்ட போதும், மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் கணக்கில் வரவில்லை என்பதையோ அல்லது இவர்களில் பெரும்பாலானோர் இறுதிக்கட்டப் போரின்போது இறந்திருக்கக் கூடும் என்பதையோ ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை.

21. காணாமல் போனோர், காணாமல் போதல், ஆட்கடத்தல்; கைதிகளை நடத்தும் முறை; சட்டவிரோத ஆயுதக் குழுக்கள்; சிறுவர் கட்டாய ஆளெடுப்பு; இலகுவில் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் உள்ளூரிலே இடம்பெயர்ந்தோர்; வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் சமுகம்; பேச்சுச் சுதந்திரமும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையும்; தத்தமது சமயநெறியைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை, குழுமச்சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரம் ஆகிய குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியதான பல மனித உரிமை விடயங்களில் இவ்வாணைக்குழு ஈடுபடுகின்றது.

ஆயினும், இது பல சிக்கலான விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறியுள்ளது. அதனாலேயே தேர்ந்தெடுத்த விடயங்களில் மட்டுமே தான் செயற்படுகின்றது என்ற அணுகுமுறையினை வெளிப்படுத்தியுள்ளது.

உதாரணமாக, மனித உரிமைகள் மீறல்கள் குற்றச்சாட்டினைக் கொண்டுள்ள இனிய பாரதி என்ற ஒருவர் பற்றி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள மனித உரிமைகள் பற்றிய பாகத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கிழக்கில் இடம்பெற்ற பல காணாமல் போதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இந்நபரினுடைய ஈடுபாடு பற்றி குறிப்பிடுவதை விட்டுவிட்டு, ஆணைக்குழு தனது அறிக்கையிலுள்ள நல்லிணக்கம் பற்றிய அத்தியாயத்தில் இவர் பற்றி பொதுப்படையாகக் கூறியுள்ளது.

இக்குறிப்பிட்ட நபரிற்கெதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களை விபரமாக விசாரணை செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, இந்நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் அவரது தொடர்புகள் பற்றி எதையும் கோடிட்டுக் காட்டவில்லை.

22. இத்தகைய சூழ்நிலைகளில், இவ்வாணைக்குழுவானது தனது நடுவுநிலைமையையும் நம்பகத்தன்மையையும் இழந்துள்ளதுடன் குற்றமிழைத்தவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதனையும் மீள்வலியுறுத்தியுள்ளது.

23. காணமல் போதல், தடுப்புக்காவல், காணி அபகரிப்புக்கள், வன்முறை, துன்புறுத்தல்கள், அச்சுறுத்திப் பணம் பறித்தல் மற்றும் கொலை ஆகிய தனிநபர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் ஏதோ ஒருவகையில் தலையிடுவதாகவும் அதனூடாக இக்குற்றச்சாட்டுகள் பற்றிய தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இவ்வாணைக்குழு எண்ணற்ற சந்தர்ப்பங்களில் உறுதியளித்துள்ளது.

ஆயினும், ஆணைக்குழு அறிக்கையானது மேலே குறிப்பிடப்பட்ட தொடரப்படுகின்ற வேலைப்பாடு தொடர்பில் மிகக்குறுகிய ஒரு தரவுப் பகுப்பாய்வை மட்டுமே கொண்டுள்ளது.

இது சாட்சிகளுக்கு எந்தவிதமான பயனையும் வழங்கப்போவதில்லை. எவ்வாறு குறிப்பிட்ட முடிவு பற்றி குறிப்பிட்ட ஒரு சாட்சிக்கு அறிவிப்பது என்பது பற்றி ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது என்பது பற்றி அறிக்கையில் தெளிவின்மையுள்ளது.

இச்சாட்சிகளை அணுகக்கூடியதாக ஆணைக்குழு இருக்கும் என்று கருதினால் கூட பொது அமர்வுகளின்போது வழங்கப்பட்ட உறுதிகளுக்கு எந்தவிதமான பதிலும் அறிக்கையில் வழங்கப்படவில்லை என்பது வெளிப்படையாகும்.

24. அத்தோடு பால் நிலைசார் பிரச்சனைகளை கையாள்வதில் கொண்டிருந்த குறைபாடுகளை மீளாய்வு செய்யவும் ஆணைக்குழு தவறியிருக்கின்றது. ஆணைக்குழுவின் கட்டமைப்பு மற்றும் அணுகுமுறை என்பவை பெண்கள் உண்மையைக் கூறுவதற்கு எதிராகப் பலமான முட்டுக்கட்டைகளை உருவாக்கின.

அதுமட்டுமன்றி, பெண் சாட்சியங்களைச் சுருக்கமாக விசாரணை செய்ததுடன் அவர்களுடன் இவ்வாணைக்குழு நுனிப்புல் மேயும் தன்மையையும் நிராகரிப்புத்தன் மையையும் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, பெண்கள் அழுவது தொடர்பில் கடுமையான ஒழுக்கப்போக்கினை வலியுறுத்துவதாக அமைந்ததுடன் வாய்மொழி சாட்சியங்களுக்குப் பதிலாக அவர்களிடம் எழுத்துமொழி சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறும் கோரியது.

பொதுவாக பெண்கள் தமது அனுபவங்களை ஆணைக்குழுவின் முன் விபரிக்கின்ற போது தெளிவான ஒரு அனுதாபமின்மையை அவர்களால் ஆணைக்குழுவிடமிருந்து உணரமுடிந்தது.

25. ஆணைக்குழுவின் மனித உரிமை மீறல்கள் குறித்த பல பரிந்துரைகள், நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொது சேவைகள் ஆணைக்குழு ஆகிய முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையினை தொடர்பில் அனுமானங்களை மேற்கொள்வதாகவுள்ளது.

ஆகவே, 18 ஆம் திருத்தச்சட்டத்தின் தொடரும் பயன்பாடானது சுருக்கமாக அமைவதுடன் இவ்வாணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் பெரும்பாலாக சவால்களையும் தோற்றுவிக்கின்றன.

26. கணக்கொப்புவித்தலுடன் நேரடியாகத் தொடர்புபடாத சில விடயங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இப்பரிந்துரைகள் சில சாதகமான விடயங்களைக் கொண்டுள்ளன. ஆகவே, அவை அமுலாக்கப்படுமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவற்றை வரவேற்பதுடன் அவற்றிற்கு ஆதரவும் வழங்கும்.

இப்பரிந்துரைகளின் அமுலாக்கத்தினை கூர்ந்து கண்காணிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணியிருக்கின்றது. ஆயினும் இப்பரிந்துரைகள் கணக்கொப்புவிப்புடன் தொடர்புடைய விடயங்கள் எனக் குழப்பமடையக் கூடாது.

27. கணக்கொப்புவித்தலுடன் தொடர்பற்ற பரிந்துரைகள் நல்லிணக்கம் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் சார்ந்த பரிந்துரைகளாகும். இனப்பிரச்சினை மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுகின்றதும் அதிகாரப்பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதுமான அரசியல் தீர்வொன்றினைக் காணவேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்துகின்றது.

மக்களின் அடிமட்ட பங்குபற்றுதலை உறுதிசெய்யும் முகமாக உள்ர்மட்ட அரச நிறுவனங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதனையும் பரிந்துரைக்கின்றது. அதுமட்டுமன்றி, மாகாணசபை முறைமையின் செயற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது.

மாகாண மட்டத்திலுள்ள அரசியல் தலைமைத்துவங்கள் மற்றும் மக்களிடையே நம்பிக்கைத் தன்மையினை ஏற்படுத்துவதங்காக மாகாணமட்டப் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக நாடாளுமன்றத்தில் இரண்டாவது சபையொன்றினை உருவாக்குதல் போன்ற ஒரு யதார்த்தமான மாதிரியே இவ்வாணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஒரேயொரு ஆணித்தரமான ஆலோசனையாகும்.

அதிகாரப் பரவலாக்கம் பற்றிய இவ்வாறான உணர்ச்சிகரமான கருத்துக்கள் பெரும்பாலாக சொற் கவர்ச்சியுடையவை மட்டுமே. அவை 2006 ஆம் ஆண்டில் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் பெரும்பான்மை அறிக்கை உள்ளடங்கலான முன்னைய பரிந்துரைகளுடைய அளவிற்குக்கூட அமையாதவை.

13 ஆம் திருத்தச்சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி அவர்களின் சமீபத்தைய கருத்துக்களைப் பார்க்கும் போது, கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் ஆணைக்குழுவின் பணிவான பரிந்துரைகள் அமுலாக்கப்படுவதும் சந்தேகமே.

இவ்வாறான கருத்துக்கள், அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வொன்றினை வழங்குவதற்கு தற்போதைய அரசு உண்மையில் தயாரில்லை என்ற தமிழ் மக்களிடையே காணப்படும் வலுவான அச்சத்தினை உறுதிசெய்கின்றன.

28. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட, வடக்கில் இராணுவத்தினரின் தலையீடு என்ற விடயத்தையும் ஆணைக்குழு ஒருவாறாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அதனால், அனைத்து சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலிருந்தும் இராணுவத்தினர் தம்மை விலக்கிக் கொள்ளவேண்டியதன் தேவையை அங்கீகரிக்கின்றது.

இப்பரிந்துரையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதுடன் அடுத்து வரும் மாதங்களில் இப்பரிந்துரை எவ்வாறு அமுலாக்கப்படுகின்றது என்பதனை நுணுக்கமாகக் கண்காணிக்கவும் அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களை வெளியிடவும் எண்ணியுள்ளது.

29. இவ்வாறான சாதகமான பரிந்துரைகளைக் காட்டிலும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு போன்ற பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை வழங்குகின்ற சர்வதேச தரங்களுக்கு இயைவான கணக்கொப்புவிப்பு செய்முறையானது, தேவையானது மிக முக்கியமானதும் உடனடியானதுமான தேவையாகும்.

இத்தகைய தரமுடைய ஒரு செய்முறையினை அரசு நிறுவுவதற்குத் தவறுகின்ற பட்சத்தில் ஐ.நா செயலரினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கேற்ப, கணக்கொப்புவிப்பு விடயங்களை மேம் படுத்தக்கூடியவையும் இலங்கையில் நல்லிணக்கத்தினை ஊக்குவிக்கக் கூடியவையுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமுகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

நன்றி உதயன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment