"மிரள வைத்த முத்திரைகள்: ஒரு உளவியல் நடவடிக்கை"


மேற்கு நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் மற்றும் தேசியத் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் பொறித்த முத்திரைகள் வெளியானது கடந்த இரண்டு வாரங்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பிரான்சில் தான் இந்த முத்திரை வெளியானது.  அதுபற்றிய செய்திகள் தமிழ் இணைய ஊடகங்கள் சிலவற்றில் தான் வெளியாகியது. அப்போது அதை எல்லோரும் ஒரு செய்தியாகவே பார்த்தனரே தவிர கணக்கில் எடுக்கவில்லை. 

சில நாட்கள் கழித்து இலங்கை அரசு இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு, இராஜதந்திர மட்டத்தில் பிணக்குப்படத் தொடங்கிய பின்னர் தான் என்ன நடந்தது என்று பலரும் விசாரிக்கத் தொடங்கினர். 

பிரான்சில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் முத்திரை வெளியான விடயத்தை பாரிசில் உள்ள இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலகவோ அல்லது அங்குள்ள தூதரகமோ கண்டுகொள்ளவில்லை. அதைப்பற்றி அவர்கள் அறிந்திருந்தனரா என்பதும் தெரியவில்லை. சிலவேளைகளில் அந்த முத்திரை விவகாரத்தை தயான் ஜெயதிலக பெரிதாக எடுத்துக் கொள்ளாதிருக்கலாம். ஏனென்றால் தயான் ஜெயதிலக ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இருந்தவர். ஈபிஆர்எல்எவ் 1988 இல் வடகிழக்கு மாகாணசபையில் ஆட்சிமைத்த போதுஇ திட்டமிடல் மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகப் பதவி வகித்தவர். அதே ஈபிஆர்எல்எவ் தான் முதன் முதலாக 1986ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஈழம் முத்திரை ஒன்றை வெளியிட்டது. அப்போது அதன் பெறுமதி 50 சதம். யாழ்ப்பாணக் குடாநாடு மட்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் அந்த முத்திரை வெளியானது. ஆனால் அது அதிகம் புழக்கத்துக்கு வரவில்லை. பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த விடயம்இ ஈபிஆர்எல்எவ் மீதான புலிகளின் தடையை அடுத்து முடிந்து போனது. பின்னர் புலிகள் தனியான நிர்வாக அலகுகளையெல்லாம் கொண்டு ஆட்சி நடத்திய போதும் முத்திரையை மட்டும் வெளியிடவில்லை. புலிகளிடம் தனி அரசுக்கான எல்லா நிர்வாக ஒழுங்குகளும் இருந்தன. ஆனால் அவர்கள் ஈழ அரசுக்கான முத்திரையையோ அல்லது நாணயத்தையோ அச்சிடவில்லை. 

ஒவ்வொரு தைப்பொங்கலுக்கும் முன்னர் தென்பகுதி ஊடகங்கள் புலிகள் பொங்கல் நாளன்று தனிநாட்டைப் பிரகடனம் செய்யப் போவதாக செய்திகள் வெளியிடுவது போன்றுஇ நாணயத்தாள்களையும் வெளியிடப் போவதாகவும் அவ்வப்போது செய்திகளை வெளியிடும். 

ஆனால் ஈழம் முத்திரை பற்றிய செய்திகள் ஏதும் பெரிதாக வருவதில்லை. 

இப்போது புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு- அவர்களின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்புகள் யாவும் சிதைக்கப்பட்டு விடட நிலையில் இந்த முத்திரை விவகாரம் அரசுக்குப் பெருந்தலைவலியாகியுள்ளது.பிரான்சில் முத்திரை வெளியான தகவல். தமிழ் ஊடகங்களில் வெளியானதுடன் விழித்துக் கொண்ட கொழும்பு, பாரிசில் உள்ள தூதரகத்தை தட்டி எழுப்பியது. உடனடியாக அதுபற்றி விசாரிக்குமாறும் பிரான்சிடம் விளக்கம் கோரும் படியும் கூறியது. அதற்கிடையில் அவசரப்பட்ட வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகத்துக்குச் சென்று தூதுவரை சந்தித்து தமது கண்டனத்தை வெளியிட்டார். 

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இலங்கையில் தடை உள்ளது, அது போலவே ஐரோப்பிய ஒன்றியமும் தடைவிதித்துள்ளது. இந்தநிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரினது படத்துடனும் சின்னங்களுடன் முத்திரை வெளியாவதை ஏற்க முடியாது என்றும்இ தீவிரவாத செயல்களுக்கு பிரான்ஸ் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்றும் கடிந்து கொண்டார் பிரீஸ்.  

அதற்கிடையில் பிரான்சின் லா- போஸ்ட் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்த இலங்கைத் தூதரகத்துக்கு தம்மால் அந்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.  ஆனால் பிரான்சில் வெளியிடப்பட்ட 1 1 வகையிலான முத்திரைகள் அங்கு கடிதங்களை அனுப்பப் பயன்படுத்த முடியும். இவற்றைத் தடைசெய்ய இலங்கை அரசு கோரினாலும், அவற்றைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தடைசெய்யும் முயற்சிகளில் இன்னும் பிரான்ஸ் ஈடுபடவில்லை. இந்தநிலையில் கனடா, பிரித்தானியாவிலும் இதே போன்று முத்திரைகள் வெளியாகின. அது இலங்கை அரசைப் பெரிதும் குழப்பமடைய வைத்துள்ளது. காரணம், முற்றாக அழிந்து போனதாக பிரகடனம் செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் தலைவருடைய படத்துடனும்இ அதன் சின்னங்களுடனும் முத்திரைகள் உலா வருவதை அரசினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

முத்திரை என்பது ஒரு வரலாறு. உலகெங்கும் இலட்சக்கணக்கானோர் முத்திரைகளை பொக்கிசமாக சேகரிக்கிறார்கள். புலிகளின் சின்னங்கள் முத்திரைகளில் இடம்பெற்று விட்டால், அது உலக வரலாறாகி விடும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு உள்ளது. இதனால் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள தூதரகங்களின் மூலம் அந்த முத்திரைகள் புழக்கத்துக்கு வருவதைத் தடுக்க அரசாங்கம் முனைந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடும் கண்டனம் தெரிவித்த பிறகு பிரான்சின் லா- போஸ்ட் நிறுவனம் ஒரு மன்னிப்பை வெளியிட்டதோடு நின்று கொண்டது. ஏனைய நாடுகளில் இருந்து அது கூட இல்லை. 

இத்தகைய முத்திரைகளுடன் கடிதங்கள், பொதிகளை அனுப்ப வேண்டாம் என்றும் இந்த விடத்தில் தாம் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்படப் போவதில்லை என்றும் அரசாங்கம் கூறியது. பின்னர், அந்த முத்திரைகளை நீக்கி விட்டு கடிதங்களை விநியோகிப்போம் என்று இறங்கி வந்தது. ஆனால் ஒன்று புலிகளின் முத்திரைகளுடன் எந்தவொரு கடிதமும் இலங்கைக்கு வரப் போவதில்லை. இது ஈமெயில் காலம். இப்போது கடிதங்களே வருவது குறைந்து போய் விட்டது. அப்படி வரும் கடிதங்களில் இந்த முத்திரைகள் ஒட்டப்பட்டால் என்ன நடக்கும்இ அந்தக் கடிதங்கள் உரிய இடத்தில் சென்று சேருமா என்ற கவலை அனுப்புபவருக்கு இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

அத்தகைய கடிதங்களை வைத்து அரசாங்கம் நிச்சயம் துருவி ஆராய்ந்து நெருக்கடி கொடுக்கும். எனவே வெளிநாடுகளில் உள்ள எவரும் இந்த முத்திரையுடன் கடிதத்தை இலங்கைக்கு அனுப்பப் போவதில்லை. இது அரசாங்கத்துக்கும் தெரியாத விடயமல்ல.  ஆனாலும் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் பிரான்சில் முத்திரை வெளியான தகவல் கிடைத்ததும் மிரண்டு போனது ஆச்சரியம் தான்.  ஏனென்றால் வெளிநாடுகளில் இதுபோன்று முத்திரைகளை யாரும் அச்சிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் தனக்குத் தேவைப்படும் முத்திரைகளின் அளவைக் குறிப்பிட்டு விண்ணப்பித்துஇ அதற்குரிய பணத்தைச் செலுத்தி விட்டால்இ தாம் விரும்பியவாறு முத்திரைகளை அச்சிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேற்கு நாடுகள் பலவற்றிலும் இந்த வசதி இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டுஇ தமது செல்லப் பிராணிகளின் படங்களுடன் முத்திரைகளை அச்சிடுவோரும் உள்ளனர். இந்த முத்திரைகளை பிரான்ஸ் அரசாங்கம் வெளியிடவில்லை. ஆனால் அதனை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசின் அங்கீகாரம் உள்ளது. 

உண்மையில் இது அரசுக்குப் பெரியதொரு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய விவகாரமல்ல. ஆனாலும் அரசாங்கம் இதனைப் பார்த்து மிரண்டு போனது தான் அச்சரியம். இது அரசுக்கு எதிரான ஒரு உளவியல் நடவடிக்கையாக அமைந்து விட்டது.  வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் விடயத்தில் அரசாங்கம் அதிகளவில் கவலை கொள்கிறது என்பதை இந்த உளவியல் நடவடிக்கை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

தொல்காப்பியன் - இன்போ தமிழ்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment