இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு இருப்பதை சமகால சூழமைவுகள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதில் இருந்து அரசு விலக முடியாத அளவில் சர்வதேச சமூகம் எல்லையிட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் ஐ.நா.சபையின் செயலாளர் பான் கீ மூன் தவிர்ந்த இதர அதிகாரிகளும் இது விடயத்தில் இறுக்கமாக உள்ளனர். இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை அவசியம் என்பதை ஆதரிக்காத நாடுகள் கூட இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.
யார் எந்தப் பக்கம் நின்றாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்தி நிற்பதால்இ இலங்கை அரசு இம்மியும் விலகமுடியாது என்பது தெட்டத்தெளிவு. தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்குவது போல அரசு நடிக்குமாக இருந்தால் அமெரிக்காவிடம் அதிகமாகப் பாடம் படிக்க வேண்டி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது ஒருபுறமிருக்க; அரசுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை தமிழர் தரப்பு தகுந்த முறையில் பயன்படுத்த தயாராகி விட்டதா? என்பதுதான் இப்போதிருக்கக்கூடிய கேள்வி. ஈழத் தமிழர்களின் நீண்ட கால அவல நிலைக்கு எங்களிடம் ஒற்றுமை இன்மை, திட்டமிடாமை, எதனையும் எழுத்துருவில் தயாரிக்காமை, உடனுக்குடன் கருமங்களை செய்யாமை, அரசியலில் பொதுநலத்திற்கு முன்னுரிமை அளிக்காமை, குறுகிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு சிந்தித்தல், புத்திஜீவிகளின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு விரும்பாமைஇ தமிழ் மக்களின் பிரச்சினை என்பதால் ஒவ்வொரு நகர்வையும் ஒவ்வொரு தமிழ் மகனும் அறிய வேண்டும் என்ற நினைப்போடு அதற்கான ஏற்பாடுகளை செய்யாமை என்பன முக்கிய காரணங்களாக இனங்காண முடியும்.
எனவே, எங்களிடம் இருக்கக்கூடிய பலம், பலவீனங்கள் தொடர்பில் நாம் சிந்தியாதவர்களாக இருக்கும்போது, தற்போது கிடைத்தற்கரிய அருமையான சந்தர்ப்பங்களும் எங்களை விட்டு நழுவிச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலை உருவாகும். எனவே தமிழ் அரசியல் தலைமை, தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் பிரிந்து நின்று போட்டு டைக்காமல் தமிழ், தமிழ் இனம் என்பதன் அடிப்படையில் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். இதற்காக தமிழ் புத்திஜீவிகளை அழைத்து ஆலோசனை நடத்திஇ இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை எழுத்துருவில் ஆக்குவது அவசியம்.
யார் யாருடன் பேச்சு நடத்தினாலும் எங்களால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டமே மூல நூலாக இருக்கும். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுடன் பேச்சு நடத்தினால் என்ன? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் பேச்சு நடத்தினால் என்ன? தீர்வு தமிழ்த் தரப்புகளால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். இதைவிடுத்து ஆளுக்கொரு பாதையால் பயணித்தால் இலங்கை அரசு அதனைப் பயன் படுத்தி சர்வதேச அழுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் அதன் பின்னர் தமிழ் அரசியல் தலைமை என்பது வெற்றிடமானதாகவே இருக்கும். கவனம்.
நன்றி வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment