அரசாங்கம் இந்த 2012 ஆம் ஆண்டை மும்மொழி ஆண்டாக பிரகடனப்படுத்தி ஒரு பெரிய விழாவையும் நடத்த ஆரம்பித்துள்ளது. இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் வருகை தந்து வாழ்த்தி ஆரம்பித்துள்ளார். இது ஒரு வகையில் மகிழ்ச்சியான விடயம்தான். உண்மையிலேயே எமது நாடு பல்லின மக்கள் வாழும் நாடு என்ற வகையில் நீண்டகாலமாகவே மொழி ரீதியிலான பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் நாம் ஒருபோதும் மறக்கமுடியாது. அதிலும் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் பட்ட காயங்களின் வடுக்கள் இன்றும் கூட தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
சிறிலங்காவின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள மொழிக்குரிய அதே அந்தஸ்து தமிழ் மொழிக்கும் அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் இன்றளவும் கூட தமிழ் மொழி ஏதோவொரு வகையில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. அரசுகள் என்னதான் உத்தரவாதங்களையும் உறுதிமொழிகளையும் வழங்கினாலும் கூட தமிழ் மொழிக்கு உரிய இடம் இன்றளவும் வழங்கப்படவே இல்லை. அரச அலுவலகங்களுக்குச் சென்று தமிழ் மொழியில் காரியங்களைச் செய்துகொள்ள முற்படும் போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. சிலவேளைகளில் அரச அதிகாரிகள், ஊழியர்கள் தமிழ் பேசும் மக்களை சுட்டெரிப்பது போன்ற பார்வையை செலுத்தி கொல்லாமல் கொல்லும் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். சட்ட ரீதியான அரச கரும மொழிகளில் ஒன்றாக தமிழ் இருப்பதைக் கூட சிங்கள அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சிங்களம் மட்டும் தான் சட்டம் என்ற மனோபாவத்தில் தான் அவர்கள் நடந்து கொள்கின்றனர்.
இந்த மும்மொழி ஆண்டு விழாவில் டாக்டர் அப்துல் கலாம் உரையாற்றும் போது மேன்மையான தேசத்தைக் கட்டியெழுப்ப மகாத்மா காந்தியிடமும் தென்னாபிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவிடமிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களை நினைவூட்டினார். அவரது நீண்ட உரையின் போது புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சமத்துவம், சகோதரத்துவம் பற்றியெல்லாம் விளக்கிப் பேசினார். பல்வேறுபட்ட உதாரணங்களையும் வரலாறுகளையும் சுட்டிக்காட்டி நல்லதொரு அறிவுரையை அவர் இந்த நாட்டுக்கு வழங்கியுள்ளார். ஆனால் இந்த அறிவுரைகளை உள்வாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் எமது நாட்டு மக்களிடம் குறிப்பாக சிங்கள மக்களில் பெரும்பாலானோரிடம் காணப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெரும்பான்மை சிங்கள மக்களின் தலைவர்கள் பலரிடம் கூட இந்த மனப்பக்குவத்தை எதிர்பார்க்க முடியுமா?
ஜனாதிபதி உட்பட எமது பெரும்பான்மைச் சமூகத்தலைவர்கள் மக்கள் மத்தியில் பேசும்போது சகோதரத்துவம், இன ஒற்றுமை, சமாதான சக வாழ்வு என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனர். இனிக்கும் வார்த்தைகளையே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் யதார்த்தத்தில் எதிர்மறையான தன்மையையே காணமுடிகிறது. அமைச்சுக்கள், அலுவலகங்களில் சிங்கள மொழிக்கிருக்கும் இடம் தமிழ் மொழிக்கு இருக்கின்றதாவெனப் பார்த்தால் அது பூஜ்யமாகவே உள்ளது. தமிழ் பேசும் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நாட்டின் தலைவர்கள் தமிழ் மொழியை சிங்களத்தில் எழுதி வாசித்து கைதட்டல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனைச் செய்துவிட்டால் தமிழ் மொழிக்கு உரிய இடம் கிடைத்துவிட்டதாகக் கொள்ளமுடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது.
இன்று மும்மொழி ஆண்டைப் பிரகடனப்படுத்தியுள்ள இந்த அரசாங்கம் தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும்தான் பாடவேண்டுமென கட்டாயப்படுத்தியதை இந்திய முன்னாள் தலைவர் அப்துல் கலாம் அறிவாரா என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மொழியை ஆரம்பம் முதலே சிங்கள மொழியோடு சேர்த்து சமமான முறையில் நடைமுறைச் சாத்தியமாக்கி இருந்தால் இந்த நாடு இந்தளவுக்கு சீரழிவுகளை எதிர்கொண்டிருக்க முடியாது. நாம் எவ்வளவு தூரம் முன்னேற்றமடைந்திருக்கலாம். அந்தச் சட்டம் அப்படியே அரசியலமைப்பிலிருக்கும் நிலையில் ஏதோ சாதனை புரிவதாகக் கருதி மும்மொழி ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கூட நாம் வெற்றிகொள்ள முடியுமா? தமிழ் பேசும் மக்களுக்கு உரிய முறையில் தமிழ் மொழி உரிமை கிட்டுமா அப்துல் கலாமின் அறிவுரைகளை இந்த நாடு ஏற்றுக்கொண்டு புதிய பாதையில் பிரவேசிக்கப் போகின்றதா அல்லது இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுமா? இந்த முயற்சியையும் பொறுத்திருந்துதான் அவதானிக்க வேண்டியுள்ளது.
நன்றி தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment