முள்ளை முள்ளால்த்தான் எடுக்கவேண்டும் என்பது பழமொழி. சிறிலங்கா அரசு இப்பழமொழிக்கு உயிர் கொடுக்கிறதென்றால் மிகையாகாது. தமிழர் தரப்பினருடன் பேச்சுக்களை நடத்துகிறோம் என்று ஒரு புறத்தில் கூறிவிட்டு மறுபுறத்தில் அப்பேச்சுக்களைக் குழப்புவதிலேயே சிறிலங்கா அரசு ஆர்வம் காட்டுகிறது. இந்தியா மற்றும் பல மேற்கத்தைய நாடுகளின் வற்புறுத்தல்களையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது. இப் பேச்சுவார்தைகளினால் ஏதேனும் பலன் கிடைக்குமா என்றால் ‘இல்லை’ என்றுதான் கூற வேண்டும். பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் இரு தரப்பினரும் உலக நாடுகளின் வெறுப்புக்கு ஆளாகக்கூடாதென்கிறதில் கவனமாக இருக்கிறார்கள்.
நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர்கள் பலதரப்பட்ட இன்னல்களை சந்தித்தே வந்துள்ளார்கள். தமிழர்களுக்கு அரசியல் தீர்வை தாம் ஆட்சிப்பீடம் ஏறியவுடன் முன்வைப்போம் என்று கூறித்தான் தமிழர்களின் வாக்குகளை பெற்றார்கள் சிங்களக் கட்சிகள். ஆட்சி பீடம் ஏறியவுடன் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குவதே சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலை.
தந்தை செல்வாவைத் தவிர அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே பல்வேறுபட்ட வேடங்களைப் போட்டார்கள் என்பதே உண்மை. அரசியல் என்னவென்று கேட்டால் அரசியல் விஞ்ஜானிகள் கூறுவார்கள் “எதைச் சாதிக்க நினைக்கிறோமோ அதனை செய்து முடிப்பதுவே அரசியல் என்பார்கள்.” இக்கருத்திற்கு ஏற்றவாறே தமிழ் அரசியல் தலைமைகளும், சிங்கள ஆட்சியாளர்களும் நடந்தார்கள் என்பதே வரலாறு.
தமிழர் தேசத்தைக் கைப்பற்றி அவர்களை ஒடுக்கும் விதத்தில் பல்வேறுபட்ட அடக்குமுறைக் காரியங்களைச் செய்தனர் சிங்கள அரசுகள். நாம் தரும் எலும்புத்துண்டை வாங்கிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்க வேண்டும் என்கிற சட்டமே சிறிலங்காவில் இருக்கிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டக் காலத்தில் தாம் தமிழருக்கு அதிக அதிகாரங்களைக் கொண்ட தீர்வுப்பொதி வைத்திருப்பதாகவும், ஆனால் விடுதலைப்புலிகள்தான் அதனை விரும்புகிறார்கள் இல்லையென்று உலக அரங்கில் பிரச்சாரம் செய்தது சிங்கள அரசுகள்.
என்னதான் அந்தத் தீர்வுப்பொதி என்று கேட்டால் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போர் நின்ற பின்னர் காட்டுகிறோம் என்று கூறினார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். போர் நின்று இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது, சிங்கள அரசிற்கு வேண்டுமாம் இன்னும் சில கால அவகாசம். தீர்வுப் பொதியின் கதையை மறப்பிக்க தேவையான ஆயுதமே சிங்கள அரசு போடும் தமிழர் தரப்பினருடனான பேச்சுவார்த்தைகள்.
ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்
தொடர்ந்தும் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கலாமென்று கருதுகிறது சிங்கள அரசு. சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வந்த 1956-ஆம் ஆண்டு தொடக்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழரசுக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைளை நடத்தினர். வட்டமேசை மாநாடுகள், சர்வகட்சி மாநாடுகள் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்களென பல பூச்சாண்டி நாடகங்களை அரங்கேற்றினார்கள் சிங்கள அரசுகள். இவைகளினால் தமிழருக்கு கிடைத்த ஒரேயொரு பயன் என்னவென்றால் 150இ000-க்கும் அதிகமான தமது உடன்பிறப்புக்களை பலிகொடுத்தது மட்டுமின்றி, வார்த்தைகளினால் சொல்ல முடியாத சித்திரைவதைகளை நாள்தோறும் சந்தித்ததுதான்.
சிங்கள அரசு எவ்வகையான தீர்வுப் பொதியை வைத்துள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வண்ணம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்றவகையில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதுவே சாலச்சிறந்ததாக இருக்கும். தீர்வுப்பொதி தம்மிடம் உள்ளது என்று கூறிக்கொண்டே காலத்தை வீணடிப்பதனால் பிரச்சினைகள் இரட்டிப்பாக்குமே தவிர அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படமாட்டாது என்பதே காலம் தந்த படிப்பினை. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.
சிங்கள ஆட்சியாளர்கள் தமது ஆட்சிக்கட்டிலை தக்கவைக்க வேண்டுமென்பதற்காக பேச்சுக்களில் ஈடுபடலாம். அரசாங்கம் தீர்வை முவைத்தாலும், சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளோ, பௌத்த துறவிகளோ, வலதுசாரிச் சிங்களவர்களோ தமிழருக்கு ஒருபோதும் தீர்வை வழங்க அனுமதிக்கமாட்டார்கள் என்பதே காலம் தந்த பாடம். கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் மக்கள் அறிந்த விடயங்களே.
பண்டா – செல்வா உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன் மூலம் அதிகாரப் பகிர்வு வடக்கு, கிழக்கு இணைப்பு முன்வைக்கப்பட்டன. தெற்கின் எதிரப்;பலையால் பிரதமரே உடன்படிக்கையைக் கிழித்தெறிந்தார். டட்லி சேனாநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கை எழுதப்பட்டது. மாவட்ட சபை தீர்வாக முன்வைக்கப்பட்டது. மாவட்ட சபை சட்ட மூலம் வர்த்தமானியில் வெளிவந்தது. எதிர்ப்பலை ஓங்கி வீசியது. சட்ட மூலம் கைவிடப்பட்டது.
1977-ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு திட்டத்தை பிரஸ்தாபித்தது. கல்வி, காணி, தொழில், குடியேற்றம் போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆணைக்குழு அமைத்து தீர்வு காண்பதாகக் கூறப்பட்டது. அத்தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் பிரதம நீதியரசர் விக்டர் தென்னகோன் தலைமையில் ஆணைக்குழு அமைத்தது. மாவட்ட அபிவிருத்தி சபையை தீர்வாக முன்வைத்தது.
யாழ். மாவட்டத்திற்கு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் வைக்கப்பட்டது. அத் தேர்தல் காலத்தில்தான் யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கபட்டது. இச்செயல் மூலமாக சிங்கள அரசு எந்த வகையான தீர்வு தமிழருக்கு கிடைக்குமென்று மறைமுகமாக கூறியது. சிறிது காலத்தின் பின்னர் மாவட்ட அபிவிருத்தி என்கிற தீர்வு பிறப்பெடுத்தது. ஜே.ஆர். மாவட்ட அபிவிருத்தி சபைச் சட்டத்தை இரத்துச் செய்தார். ஆணைக்குழுவின் தீர்வு மெல்லெனத் தானாக மறைந்தது. 1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் பிரகாரம், 13-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு இணைப்பென பல நிகழ்வுகள் இடம்பெற்றன. வழங்கிய அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன.
ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற பழமொழி சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சாலப் பொருந்தும். தமிழர்களை அடக்கி அவர்களின் அரசியல் அபிலாசைகளை ஒடுக்கிவிடலாம் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டது சிங்கள அரசுகள். நிலைமை தலைகீழாக இப்போது மாறிவிட்டது. விடுதலைப்புலிகளின் ஆயுதவழிப் போராட்டம் உலக நாடுகளின் மனக்கதவை சற்றே உசுப்பிவிட்டுள்ளது.
உள்நாட்டுப் போரென்று கூறி பிரச்சாரத்தை மேற்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் இப்போது சந்திக்கும் பிரச்சினைகள் என்னவென்றால் உலகப் போர் விதிமுறைகளுக்கு முரணாக போரில் ஈடுபட்டதாக சிறிலங்கா அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணையின் அடிப்படையிலேயே தமிழரின் விடுதலைப் பயணத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
சிங்களக் கட்சிகள் அனைத்துமே தமிழர் விடயத்தில் ஒற்றுமையே
தமிழர் விடயத்தில் சிங்களக் கட்சிகள் அனைத்துமே எந்தவித முரண்பாடான கொள்கைகளிலும் இல்லை. யுத்தம் நடைபெற்ற வேளையில், 13-ஐத் தருவோம். அதற்கு மேலாகவும் தருவோமென்கிற வாக்குறதிகளைக் கொடுத்தார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கு நிரத்தரத் தீர்வை சிறிலங்கா அரசு வழங்குவதை ஒருபோதும் விரும்பவில்லையெனும் பிரச்சாரத்தை சிறிலங்கா அரசுகள் செய்து வந்தனர். யுத்தம் முடிந்தது தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வா அப்படியென்றால் என்ன என்கிற தொனியில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது கேட்கிறது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழர்களின் வீரமிகு போராட்டத்தை நசுக்கத் தேவைப்பட்ட ஆயுதமே பேச்சுவார்த்தைகள். பூட்டான், தாய்லாந்த், சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளில் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக ஒஸ்லோ பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. சமஷ்டி அரசியல் முறைப்படி தீர்வு, உள்ளக சுயநிர்ணய உரிமை, வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் இவை போன்ற பிரகடனங்களுக்கு விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் கைச்சாத்திட்டன. அரசாங்கம் முன்வைத்த தீர்வை விடுதலைப்புலிகள்தான் விரும்பவில்லையென்றும், தாம் அதனை எப்படியேனும் அமுல்ப்படுத்துவோம் என்று கொக்கரித்தார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். இவர்களின் பொய்ப் பிரச்சாரங்கள் என்னவென்று அனைவரும் அறிந்த ஒன்றே.
தமிழர்களின் பிரச்சினைகள், அதிகாரப்பகிர்வு பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கை தொடக்கம் ஒஸ்லோ பிரகடனம் வரையும் விலாவாரியாக எடுத்தியம்பப்பட்டுள்ளன. எல்லோருக்கும் அவை தெரிந்த பாடங்கள். புதிதாக தமிழர்கள் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கத் தேவையில்லை. அரசாங்கம்தான் தீர்வை முன் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டும். அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தால் அத்திட்டத்திலிருந்து தமிழர்கள் முன்னேற்றம் கண்டிருக்கலாம். அதைவிடுத்து, வடக்கு கிழக்கு இணைப்பு, காணி, காவல்துறை சம்பந்தமான அதிகாரங்கள் எங்களுக்கு தந்தாள் போதுமென்று சிங்கள அரசுகளிடம் கேட்டால் அவர்களின் பதில் வேறுவிதமாகவே இருக்கும்.
தீர்வுப்பொதியை தமிழர் தரப்பினருக்கு வழங்குவதற்கு முன்னர் சிறிலங்கா அரசு அனைத்து சிங்களக் கட்சிகள் மற்றும் பௌத்த துறவிகளைச் சந்தித்து அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் தமிழர் தரப்பினருக்கு குறித்த பொதியை வழங்க வேண்டும். ஓரிரு தமிழ்த்; தலைவர்கள் முடிவெடுக்காமல் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓன்றுகூட்டி குறித்த தீர்வுப் பொதியில் அடங்கியுள்ள விடயங்களை விவாதித்து விவேகமான ஒரு முடிவிற்கு வருவதே புத்திசாலித்தனம். அதைவிடுத்துஇ எடுத்தோம் கவிட்டோம் என்று முடிவு எடுக்காமல் விவேகமாகவும் வேகமாகவும் செயலாற்ற வேண்டும். தமிழர் பிரச்சினை விடயத்தில் அனைத்துச் சிங்களக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடையவேயே. அரசாங்கம் தீர்வை முன்வைப்பதும், பின்னர் எதிர்க்கட்சிகள் அதனை எதிர்ப்பதும் பின்னர் அதனைக் கைவிடுவதும் இன்று நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல.
எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்தின் காலில் விழுந்து அவர்கள் அளிக்கும் எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் தமிழர் தரப்பினர் இருக்கக்கூடாது. இதற்காகவா பல்லாயிரம் தமிழர்களின் உயிர்களை தமிழீழத்தில் விதைத்தோம் என்பதை சற்று தமிழ் அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். பேச்சுவார்த்தை என்கிற தோரணையில் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை இல்லாதொழிக்கவே பேச்சுவார்த்தைகளை சிங்கள அரசுகள் காலம் காலமாக மேற்கொள்கிறது என்றால் மிகையாகாது.
சிங்கள அரசுகளின் கபட நாடகங்கள் எப்படியிருக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சிங்கள அரசுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு தந்திரோபாயச் செயற்பாடுகளை இனம்கண்டு தமிழர்களின் விடுதலைப் பயணத்தை துரிதப்படுத்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகள் செய்வார்கள் என்று நம்புவோமாக.
அனலை நிதிஸ் ச. குமாரன்
0 கருத்துரைகள் :
Post a Comment