சிங்கள பேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தி, எங்களின் ரத்த உறவுகளை சிதறடித்தபடியே முன்னேறிவந்த ஒரு பொழுது அது. மரணவலயத்தை நோக்கி எமது மக்கள் கூட்டம கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்த நேரம் அது. தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக அடக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனமொன்றின் உன்னதமான விடுதலைப்போராட்டம் உலகின் கண்களுக்கு முன்னாலேயே கருவறுக்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுதும் அதுதான்.
வன்னிப்பெருநிலத்தின் ஒரு சிறுநிலத்துண்டில் சின்னஞ் சிறுசுகளும் குழந்தைகளும் பெண்களும் முதியோரும் ஆக்கிரமிப்புப்படைகளின் குண்டுவீச்சுக்களால் உடல் சிதறி வீழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகளான கலைஞர் , ஜெயா, சண் தொலைக்காட்சிகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து எமது தொப்புக்கொடி உறவுகளுக்கு உண்மையை மூடிமறைத்துநின்ற ஒரு சதிப்பொழுது அது.
எப்போதும் போன்ற ஒரு இரைச்சல்நாள் அன்றும் சென்னையில். எல்லோருக்கும் ஏதேதோ அலுவல்கள் வேலைகள். யாரையும் பெரிதாக ஈழத்தின் படுகொலைகள் சுட்டதாய் தெரியவில்லை. மத்திய அரசின் நிர்வாக அலகு ஒன்றின் உயர் அலுவலகமான ‘சாஸ்திரிபவனுக்குள்’ நுழையும் அந்த இளைஞன் மிகப்பெரிய பெற்றோல்கான் ஒன்றை காவியம் படியும் கைகளில் சில காகிததுண்டுகளுடன் வருகிறான்.
யாருக்கும் யாரையும் நின்று நிதானித்தது கவனிக்க முடியாத அந்த இயந்திர நகர்வுப்பொழுதில் மிகநிதானமாக தன்மீது எரிபொருளை ஊற்றிவிட்டு தீமூட்டிக் கொள்கிறான். எரியும் எல்லோரும் பெற்றோலை தம்மீது தெளித்த பின்னரே தீ மூட்டிக்கொள்வதே வழமையாக இருந்தபோது இவன் பெற்றோலில் குளித்த பின்னரே தீ ஏற்றிக்கொள்கிறான்.தீயுடன் அவன் அந்த இடம் எங்கும் ஓடி ஓடி இறுதியில் தீ தின்ற உடலுடன் நிலத்தில் வீழ்ந்துபடுகிறான். அவனின் உடலைச் சுற்றி வரவும் ஏதேதோ எழுதப்பட்ட காகிதங்கள்.
மிகமோசமாக அறுபது வீதமான தீக்காயத்துக்கு உள்ளாகும் மனிதர்களே ஓரிரண்டு நாட்கள் உயிரோடு இருந்தே உயிர்துறக்கும் வழமைக்குமாறாக முத்துக்குமாரன் எரிந்த 45 நிமிடத்துக்குள் விழி மூடிப்போகின்றான்.
எல்லோருக்கும் அது வழமையானதொரு தீக்குளிப்பாகவே தெரிந்தது அவனின் கடைசிக்க டிதத்தை படிக்கும் வரைக்கும். அதைப்படித்த பொழுதில் தீ ஒரு அற்புதமான அறிவாளனை தின்று தீய்த்துவிட்டது என்று எல்லோரும் திகைத்து நின்றனர்.
எவ்வளவு நிதானமானவன் முத்துக்குமாரன். அவனின் கடிதத்தின் எந்த இடத்திலும் தனது தியாகத்தை ஏற்றிச்சொல்லும் வசனங்களோ தனது சுய தகனத்தின் வலிகளை சொல்லும் சொற்களோ இருந்திருக்கவில்லை.
அவனின் கடிதத்தின் தலைப்பே உலகத்தை நோக்கியும் ஆதிக்கசக்திகளை நோக்கியும் வீசிய நெருப்புக் கேள்வியாகவே இருந்தது. ‘விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை’ என்ற தலைப்பே அவனின் ஆதங்கத்தினதும், ஆத்திரத்தினதும் ஒட்டுமொத்தமாய் இருந்தது.
அவனது கடிதம் எல்லாத் தரப்பினரையும் நோக்கிய அறைகூவலாகவும் அவர்களுக்கான செய்திகளாகவும் அவர்களுக்கான வேண்டுகொள்களாகவும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அன்பார்ந்த ஏழைக்கும் தமிழ்மக்களே என்று கூவும்கடிதம் அதன் பின்னர்.
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே இன்று நீண்டு தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் வெளிமாநிலங்களை சேர்ந்த சகோதரர்களே..என்றும் தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் இளைஞர்களே..! என்று தொடர்கிறது.. அதன் பின்னர் எங்கள் மக்களை நோக்கிய அறைகூவலாக,
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே விடுதலைப்புலிகளே…என்றும் எழுதுகிறான். இறுதியான சர்வதேச சமூகத்தை விழித்து.. “அன்பிற்குரிய சர்தேச சமூகமே நம்பிக்கைகககுரிய ஒபாமாவே” என்று முடிக்கிறான்.
நம்பிக்கைக்குரிய ஒபாமா என்ற சொற்றொடர் மிக முதிர்ந்த ஒரு ராஜதந்திரியின் வாசகம் போலவே அமைத்திருந்த முத்துக்குமாரனின் ஆற்றல் வியப்புக்குரியது. ஒரு மௌனத்தின் மூலமே ஒரு பெரும் விடுதலைப்போராட்டமும் ஒரு தேசிய இனமும் படுகொலை செய்யப்படுகிறது .இந்த மௌனம் எங்கும் நிறைந்திருக்கிற து.இந்த மௌனத்தை உடைத்து உண்மையை வெளிக் கொண்டுவரும் கேள்வியே முத்துக்குமாரனின் கடிதத்தின் முதலாவது பந்தியில் எட்டிநிற்கிறது.
“சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.அதை தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால் ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் இல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்” என்ற முத்துக்குமாரனின் வாசகத்தில் ‘கள்ள மௌனம்’ என்ற வசனத்தின் பின்னால் உள்ள அர்த்தங்களை இனி வரும் ஏதோ ஒரு காலத்தில் உலகம் உணரத்தான் போகின்றது. எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டே அமைதிக்காக ஓடித்திரிவதுபோல சிவசங்கர்மேனனையும் பிரணாப்பையும் முன்னிறுத்தி நாடகமாடிக்கொண்டே இனப் படுகொலையை கண்டிக்காமல் காத்துவந்த ‘கள்ளமௌனம்’ ஒருநாளில் கிழியும்.
அத்துடன் அதே வரியில் முத்துக்குமாரன் “இந்திய ஏகாதிபத்தியம்” என்ற வசனத் தையும் மிக இயல்பாகவே புகுத்தி அவர்களின் மேலாதிக்க எண்ணத்தை உடைத்து எறிகின்றான் தன் கடிதத்தில். இந்திய வலல்லாதிக்கத்தின் தமிழ்நாட்டு ஏஜென்ட் கருணாநிதி மீது முத்துக்குமாரனின் கோபம் வலுவானது.
கலைஞரா? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் கருணாநிதி பற்றிய பத்தி அவரை ஒரு மிகமோசமான ஏமாற்று அரசியல்வாதியாக தோலுரித்துக்காட்டியது. ராஜினாமா, சட்டமன்றத்தில் தீர்மானம் என்றும் குறுகியநேர உண்ணாவிரதம் என்றும் ஏமாற்றிய கபடமான கருணாநிதியை பற்றிய முத்துக்குமாரனின் கணிப்பும் கருத்தும் ஆழமான உணர்வுகொண்ட தமிழன் ஒருவனின் ஆதங்கம். இன்னொரு விடயத்திலும் மிகவும் தெளிவாகவே முத்துக்குமாரன் தனது பார்வையை கொண்டிருந்தது தெரிகிறது. அதுதான் போராட்டத்தின் பலன்!
தமிழ்நாட்டு அரசியலில் போராட்டத்தின் பலன்கள் எப்போதும் ஆட்சி அதிகாரத்து அரசியல்வாதிகளால் திருடப்பட்டே வந்திருக்கினறது. அதையே முத்துக்குமாரனும் தனது கடிதத்தில் ‘உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக் கொள்ள விட்டுவிடாதீர்கள்’ என்று எழுதி போராடும் சக்திகளுக்கு உணர்வூட்டு கிறான்.உண்மையான போராட்டத்தை திசை திருப்புவதற்காகவே மகஜர் வழங்கல் “மனுக்கொடுத்தல்” என்று வழிகாட்டிய கலைஞர் கடிதம் எழுதுவதையும் ஒரு போராட்டமுறையாக சொல்வதை மறுதலித்து முத்துக்குமாரன் இன்னுமொரு இடத்தில் அக்கடிதத்தில் எழுதுகிறான் ‘ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது.
அந்த மரபை அடித்து உடையுங்கள். மனுக்கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும் அவனை நம்பாதீர்கள். உண்ணா விரதத்தை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள் என்று. அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தையும் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் காப்பாற்றும் மிக அவசரம் அவனது கடிதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் உள் உறைந்து நிற்கிறது. அதனால்தான் களம்காணும்படி எல்லோரையும் அழைத்தான் அந்த மாவீரன்.
இந்த இன அழிப்புக்கு எதிராக அனைத்து இந்திய மக்களையும் போராட்டத்தில் இறங்க கோரும் மரணசாசனமாகவே முத்துக்குமாரனின் கடிதம் இருக்கின்றது.
அசாமில் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கும் போர்வையில் அப்பாவிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்காக குரல்தரும் முத்துக்குமாரன் பிறிதொரு இடத்தில் இந்தியாவின் வட-கிழக்கு மாநில விடுதலைப் போராளிகள் மீதான ராணுவ வன்முறைக்காகவும் கவலை கொள்கிறது.
இப்படி எல்லாவற்றுக்குள்ளாகவும் நிதானமாகவும் ஆணித்தரமாகவும் புகுந்து செல்லும் முத்துக்குமாரனின் இறுதிக்கடிதம் இறுதியில் தமிழ்நாட்டில் அடைக்கலம் கோரியிருக்கும் சிங்கள தம்பதிகளுக்காகவும் கண்ணீர் விடுகிறது. எத்தனை முறை படித்தாலும் புதிது புதிதாக ஏதோ அர்த்தங்களும் அதனூடான செய்திகளும் எங்கள் ஆன்மத்தை கேள்விகளால் குடைகிறது.என்னைப் பொறுத்த வரையில் எங்களின் தேசிய தலைவரின் சிந்தனை மொழிகளுக்கு அடுத்ததாக தமிழினம் முழுவதும் தங்கள் இதயத்தில் செதுக்கிவைக்க வேண்டியதும் மனதினுள் உள்வாங்கியே தீரவேண்டியதுமான ஒரு சாசனம் அது.
முத்துக்குமாரன் வெறுமனே தனது ஆதங்கங்களையும் வெறுப்பையும் கோபத்தையும் எழுதிவைத்துச் சென்றவன் அல்ல. இனிவரும் காலங்களிலும் ஒரு போராட்டம் என்பது எப்படி தமிழ் நாட்டுத்தெருக்களில் நடாத்தப்படவேண்டும் என்றும் ஓய்வே இல்லாத முயற்சியாக தமிழ்இனம் போராடியே தீரவேண்டும் என்றும் தெளிவாகவே சொல்லிக்கொண்டே இருக்கும் பட்டயம்தான் முத்துக்குமாரனின் இறுதிக்கடிதம்.இது இறுதிக்கடிதம் என்பது அல்ல. இந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வசனத்துக்கும் இன்று இல்லாது விட்டாலும் என்றாவது ஒருநாள் தமிழ்நாட்டின்
மக்கள் புதுவிளக்கம் தருவார்கள்.
முத்துக்குமாரன் எரிந்து சாம்பலாகி முடிந்துவிட்டான்.ஆனால் அவனது கடிதம் மீண்டும் மீண்டும் எங்கள் மனதோடு பேசும். எல்லோரினதும் மனச்சாட்சியை அது தொட்டும் துருவியும் உலுப்பும். தமிழீழ விடுதலைக்கானதும் தமிழின விடுதலைக்கானதுமான ஒரு ஒப்பற்ற ஆயுதம்தான் முத்துக்குமாரனின் இறுதிக் கடிதம்.
எங்கள் எல்லோருடனும் தோழனாகவும் சகோதரனாகவும் உறவினனாகவும் வழி காட்டியாகவும் தோழமையுடன் பேசும் இந்தக்கடிதத்தின் எழுத்துக்களை எழுதியவன் இல்லாமல் போய்விட்டான். ஆனால் அந்த எழுத்துக்கள் எந்த நெருப்பிலும் எரியாதவை. அந்த எழுத்துக்களே நெருப்புக்கள்தான். காலம்பல கடந்தாலும் அவை ஆதிக்க முகமூடியை அறுத்தெறிந்து விடுதலைக்கான வழியை அமைக்க ஒளிகாட்டும் முத்துக்குமாரனை போலவே ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவென தீயுடன் சங்கமித்த அனைத்து ஈகியர்களையும் என்றென்றும் நினைவில் வைப்போம்.
ச.ச.முத்து
0 கருத்துரைகள் :
Post a Comment