அநேகமாக அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் தொடர்கின்றன.
தற்பொழுது கூட்டமைப்பின் ஒரே சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளோடு வெளியில் இருந்து ஆதரவை வழங்கிவரும் கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டமைப்பாகப் பதிவு செய்வதின் மூலம் கூட்டமைப்பை மேலும் உறுதியானதாக மாற்ற முடியும் என்று ஒருசாரார் வாதிடுகின்றனர்.
இல்லை, இல்லை தமிழரசுக் கட்சிதான் தாய்க் கட்சி; இப்படி ஒரு கூட்டமைப்பைப் பதிவு செய்வதின் மூலம் தாய்க் கட்சியின் தனித்துவம் மழுங்கடிக்கப்படலாம் என்கின்றனர் மறுசாரார்.
கடந்த 30ஆம் திகதி திருகோணமலையில் நடந்த தமிழரசுக் கட்சியின் கூட்டத்திலும் இந்த விவகாரம் ஆராயப்பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தனின் வீட்டு "வளவில்' கூட்டம் நடைபெற்றது.
கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெறுவதே வழமை. கூட்டம் முடிந்ததும் தீர்மானங்கள், ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து தலைவர்கள் பின்னர் செய்தியாளர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், தமிழரசுக் கட்சியின் கூட்டமோ பாலை மரத்தடியில், திறந்த வெளியில் நடைபெற்றது. தகவலறிந்து ஊடகவியலாளர்களும் அங்கு படையெடுத்தனர். அவர்களுக்கும் கூட்டத்தில் தடையேதும் இல்லை. பின் வரிசையில் அமர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தின் பின்னர்தான் நிலைமையப் புரிந்து கொண்ட தலைவர்கள் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர் அழைப்பதாகவும் கூறினர்.
பத்திரிகையாளர்கள் ஒதுங்கி நின்று கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டம் தொடர்ந்து நடந்தது. பத்திரிகையாளர்கள் கூட்டத்தில இல்லாதபோதும் காரசாரமான விவாதங்களின் போதும் சிலர் தமது குரலை உயர்த்திப் பேசும் போதும் விவரங்கள் தாமாகவே காதில் விழுந்தன.
ஒரு பெண் உறுப்பினர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார். "கூட்டமைப்பைப் பதிவு செய்ய ஏன் பயப்படுகிறீர்கள்? தெற்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிலைச் சின்னத்தில் பதிவு செய்யப்படவில்லையா? அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின்யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பதிவு செய்யப்படவில்லையா?'' என்றார் அவர். இப்படி எல்லாக் கூட்டணிகளும் பதிவு செய்யப்பட்டாலும் அவற்றில் பிரதான இடத்தை வகிக்கும் கட்சி தனது தனித்துவத்தைத் தொடர்ந்து பேணிக்கொண்டுதானே இருக்கிறது என்றும் அவர் விளக்கினார்.
இன்னும் ஒரு உறுப்பினர், "தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் ஓர் இடத்திலும் கூட்டணியின் சின்னத்தில் வேறு ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றனர். இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே கூட்டமைப்புக்கு என்று ஒரு சின்னம் அவசியம்'' என்றார்.
"மாறுபட்ட கருத்துக்கள், மாறுபட்ட கொள்கைகள் உள்ள ஒரு கூட்டணியைத் திடீரெனப் பதிவு செய்தால் பல சிக்கல்கள் வரும். தனிக் கட்சிகளின் தனித்துவம் இல்லாமல் போய்விடும்'' என்று வேறு சிலர் வாதிட்டனர்.
மற்றோர் இளம் உறுப்பினரோ, "கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் இப்போது இருப்பது போல் செயலாளர் நாயகம் என்ற பதவி தமிழரசுக் கட்சியிடமே இருக்கவேண்டும்'' என்றார். இந்தப் பிரச்சினையில் கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை. விவாதம் இப்படியே தொடர்ந்தது.
இவ்வாறான நிலைமையில் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலை தொடர்கின்றது என்று பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் மூத்த தலைவர் ஒருவர்.
"என்ற போதிலும் கூட்டமைப்பைப் பதிவு செய்யும்போது அதில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடனும் பொது யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சியின் தலைவர்களுடனும் பேசி அவர்களின் கருத்தையும் அறிந்துதான் ஒரு முடிவுக்கு வரமுடயும் அநேகமாக அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம்'' என்று தமிழரசுக் கட்சியின் சார்பில் கூறப்பட்டது.
வடமாகாணசபைத் தேர்தலைப் போன்றே இந்த விவகாரமும் பின்போடப்படுமா? மாகாண சபைத் தேர்தலின் முன்பாவது பதிவு இடம்பெற்றுவிடுமா என்று கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் கேட்கின்றனர்.
உதயன்
Blogger Comment
Facebook Comment