யுத்தத்தின் பின்னான சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மலை நாட்டுப் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், இந்நடவடிக்கையானது தற்போது அதிகரிக்கப்பட்டு, பரந்தளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக 'சமூக வடிவமைப்பாளர்கள்' அமைப்பால் [The Social Architects - TSA]* சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு, மலைநாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வின் பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமானது கடந்த பல பத்தாண்டுகளாக ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. அதாவது சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான இடங்களில் திட்டமிட்ட ரீதியில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருவதானது வரலாற்றுத் தொடர்ச்சியான விடயமாகும்.
ஆகவே சிங்களமயமாக்கல் என்பது சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய விடயமாக இல்லாதபோதிலும், கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில் கூட இது தொடர்ந்தும், தமிழ் மக்கள் காலாதி காலமாக வாழ்ந்து வரும் அவர்களது சொந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 'சமூக வடிவமைப்பாளர்கள்'அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தவர்கள் ஏனைய சமூகத்தவர்களுடன் நட்பாக, வெளிப்படையாக, சுதந்திரமாக தமது உறவைப் பேணிக் கொள்வதையும், அவர்கள் தமது உரிமைகளைப் பெற்று வாழ்கின்றார்கள் என்பதையும் காண்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பல நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற போதிலும் கூட, உண்மையில், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் வாழும் தனது சொந்த மக்கள் மீது அதாவது அனைத்து சமூகத்தவர்களினதும் குறிப்பாக தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதில் போதியளவு ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
சிறிலங்காவில் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களமயமாக்கலானது, திட்டமிட்ட அரச குடியேற்றங்கள், நில அபகரிப்பு, இராணுவத் தலையீடுகள், கிராமங்களுக்கிடையிலான எல்லைகளை மாற்றுதல், அவற்றின் பெயர்களை மாற்றுதல் போன்ற அடிப்படை விடயங்களை நோக்காகக் கொண்டுள்ளதாக 'சமூக வடிவமைப்பாளர்கள்'அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சிங்களமயமாக்கலானது, தமிழர்களின் கலாசார, பாரம்பரிய, மத வாழ்க்கை, பொருளாதார செயற்பாடுகள், பொதுத் துறைக்கான ஆட்களைத் தெரிவுசெய்தல், சிறிலங்காவின் கல்வி முறைமை போன்றவற்றில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
தமிழ்ச் சமூகமானது நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டுப் போரின் அழிவுகளிலிருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதுடன், சமூக வலைப்பின்னல்களை மற்றும் சமுதாயக் கட்டமைப்புக்கள் போன்றவற்றை மீளக் கட்டியெழுப்புதல், தமது வாழ்வின் சமூக மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து அவை சிதைந்து போகாது கட்டியெழுப்புதல், தமது பிரதேசங்களில் அழிவடைந்த ஆலயங்களைப் புனரமைத்தல், பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துதல் போன்ற பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறான முயற்சிகளில் தமிழ்ச் சமூகம் ஈடுபட்டு வரும் அதேவேளையில், சிங்கள மயமாக்கலின் தொடர்ச்சியாக இராணுவ மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பொது மக்களின் வாழ்வைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்த விடயமானது தேசியப் பிரச்சினையாக இருக்கின்ற அதேவேளையில், சிங்கள மயமாக்கல் மூலம் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் பிரதேசங்களே அதிகம் பாதிப்புக்களைச் சந்திக்கின்றன.
சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆதிக்கம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மலைநாட்டிலும் இவ்வாறான இராணுவமயமாக்கல் அமுல்படுத்துவதற்கான சாட்சியங்கள் தென்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வில் அதாவது பொது நிர்வாகம், பொருளாதார நடவடிக்கைகள், சமூக மட்டச் செயற்பாடுகள் போன்றவற்றில் சிறிலங்கா அரசாங்கமும், சிங்கள ஆதிக்கமும் ஒருசேர செல்வாக்குச் செலுத்தி தமிழ் மக்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான மிக சக்திமிக்க ஆயுதமாக, கருவியாக இராணுவமயமாக்கல் பயன்படுத்தப்படுகின்றது.
அத்துடன் தமிழ் சமூகத்தவர்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உருவாக்குவதற்கு இவ் இராணுவமயமாக்கல் என்பது பெரிதும் உதவிபுரிகின்றது.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், 'சமூக வடிவமைப்பாளர்கள்' அமைப்பால் ஆராயப்பட்டுள்ளவாறு, தமிழ் சமூகத்தவர்கள் மத்தியில் அச்சம், பீதி போன்றவற்றை ஆழ நிலைநிறுத்துவதிலும், சிறிலங்காவில் வாழும் எல்லா இனத்தவர்களின் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மேலும் அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஆகியவற்றை அதிகரிப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், இராணுவமயப்படுத்தல் மற்றும் சிங்கள மயப்படுத்தல் என்பன காலாக உள்ளன. இவ்வாறான விளைவுகள் மேலும் இனக்குழப்பத்தையும், இன முரண்பாட்டையும் தோற்றுவிக்கவே வழிவகுக்கும்.
மிகப் பலவீனமான, பிளவுபட்ட எதிர்க்கட்சியைக் கொண்ட, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட,யுத்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்த, தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது தான் நினைத்ததை சாதிக்க முடியும்.
இந்நிலையில், சிறிலங்காவில் சிங்கள தேசியவாதமானது அதிகரித்து வரும் நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் தமது குரல்களை ஓங்கி ஒலிக்க முடியாத கையறுநிலையில் உள்ளனர். இவர்கள் தமிழ் மக்களின் தேவைகள் அவர்களின் பிரச்சினைகள் பற்றிக் கூட தமது கருத்துக்களை, கோரிக்கைகளை முன்வைக்க முடியாதவர்களாக உள்ளனர்.
இந்த ஆய்வறிக்கையானது சிங்கள மயமாக்கல் அல்லது தீவிரவாத சிங்கள பௌத்த கருத்தியல் தொடர்பாக முழுமையான விளக்கத்தைத் தரவில்லை எனினும், யுத்தத்தின் பின்னான சிறிலங்காவில் தமிழ்மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களில் அரச ஆதரவுடனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆதரவுடனும் சிங்கள மயமாக்கல் அதிகரிக்கப்பட்டு வருவதை தெரியப்படுத்துகின்ற, அது தொடர்பான தகவல்களை வழங்குகின்ற, நம்பகமான சாட்சியங்களை வழங்குவதை நோக்காகக் கொண்டே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
*The Social Architects -TSA are comprised of a diverse group of writers, intellectuals and working professionals. While most of TSA’s members hail from the country’s North and East, the group also includes other scholars and activists who have been working on issues related to Sri Lanka.
புதினப்பலகை
புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment