ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவின் தீர்மானத்தின் கடுமையைக் குறைத்து சிறிலங்காவைக் காப்பாற்றிய இந்தியாவுக்கு அவர் எந்த நன்றியையும் தெரிவிக்கவில்லை.
ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து - சிறிலங்காவுக்கு ஆதரவாக நின்ற பங்களாதேஸ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, மொரிட்டானியா, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, ஆகிய நாடுகளுக்கும், நடுநிலை வகித்த அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினோ பாசோ, டிஜிபோட்டி, ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல் ஆகிய நாடுகளுக்குமே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இந்தியா கைவிட்ட பின்னர், தீர்மானத்தைத் தோற்கடித்து சிறிலங்காவைக் காப்பாற்றும் முயற்சியில் சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சி முக்கிய பங்கு வகித்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சீன வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேசியதை அடுத்தே சிறிலங்காவுக்கு ஆதரவு தேடும் தீவிர நடவடிக்கையில் சீனா இறங்கியது.
அத்துடன் அணிசேரா நாடுகள் அமைப்புக்குத் தலைமை தாங்கும் எகிப்து வெளிவிவகார அமைச்சர், இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் இணைப்புச் செயலராக உள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கர் ஆகியோருக்கும், கியூபா, ரஸ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கும் பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இருந்த கடுமையைக் குறைக்கும் திருத்தத்தை முன்வைத்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து சிறிலங்கா கடிதம் அனுப்பவில்லை.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி,“இந்தியாவின் திருத்தத்தை மதிக்கிறோம். இதன்மூலம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்த வாசகம், சிறிலங்கா அரசின் விருப்பதுடன் என்று மாற்றப்பட்டுள்ளது.
இறுதிநேரத்தில் இந்தியா கொண்டு வந்த திருத்த்த்தினால், சிறிலங்காவின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் போரில் பின்புலமாக இருந்து உதவிய இந்தியா, முக்கியமான தருணத்தில் சிறிலங்காவைக் கைவிட்டு விட்டது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்தியா உதவியதற்கு சிறிலங்கா இதுவரை நன்றி தெரிவித்து எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை.
அதேவேளை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது ஏன் என்று விளக்கமளித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதற்கும் சிறிலங்கா அதிபர் பதில் அனுப்பவில்லை.
இந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்ப வேண்டியதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment