ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணங்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் எந்தளவுக்கு அமுல்படுத்தப்படுகின்றது என்பதை கனடா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும்.ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குச் சர்வதேச ரீதியான அழுத்தங்களையும் கனடா கொடுக்கும்.இவ்வாறு யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது கனேடிய நாடாளு மன்ற உறுப்பினர்கள், சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான மக்கள் குழுவிடம் உறுதியளித்தனர்.
யாழ்.மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான கிரிஸ் அலெக்சாண்டர், செனட்டர் வேர்னன் வைற் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இதுவரையும் எந்தளவுக்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது என்ற விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் மிக ஆர்வமாகக் கேட்டறிந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையானது பாதுகாப்பு சபை அல்ல. எனவே ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகிறது என்பதை உன்னிப்பாக அவதானிப்போம். அதனை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை சர்வதேச ரீதியாக வழங்குவோம் எனக் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் போருக்குப் பின்னரான தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் அவர்கள் விரிவாகக் கேட்டறிந்துள்ளனர்.
போர் முடிவடைந்த பின்னரும் போருக்குக் காரணமான முரண்பாட்டுக் காரணிகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. அரசியல் தீர்வு காணப்படவில்லை. அரசியல் தீர்வு நோக்கி நகர்வதே காலத்தின் தேவையாக இருக்கிறது. இதையே கடந்த கால வரலாறுகள் கற்றுத்தந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தச் சந்திப்பின் போது சுட்டிக் காட்டப்பட்டது.
ஜனநாயகம், நல்லிணக்கம் தொடர்பாக மிகக்கடினமான பாதையிலேயே பயணிக்க வேண்டியுள்ளது. காந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசு, பிரதான எதிர்க்கட்சிகளும் தடையாக இருக்கின்றன.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாகத் தொழில் புரிய அனுமதிக்கப்பட வேண்டும். மக்களின் இழப்புகளுக்கு ஏற்ற நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். பாரபட்சமற்ற அபிவிருத்தி, அரசின் அறிக்கைகள் அனைத்தும் நடைமுறைக்க வரவேண்டும். சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள், காணமாற் போனவர்களுக்கு அரசு பதில் தர வேண்டும் என இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான மக்கள்குழுவின் பிரதிநிதிகள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினர்
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment