ஈழப்போரில் கொல்லப்பட்டோரின் தொகை அதிகம்' - பிரான்செஸ் ஹரிசன்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவில் சமாதானத்தை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் யுத்த வெற்றி என அழைக்கப்படும் இந்தப் போரின் போது பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை விலையாகக் கொடுத்துள்ளதாக ஊடகவியலாளரான பிரான்செஸ் ஹரிசன் அண்மையில் எழுதி வெளியிட்ட 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

                        

"யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், மீனவர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அகப்பட்டனர். போரில் அகப்பட்ட தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்பாக வெளியுலகம் அறிந்துகொள்ளாத வகையில் சிறிலங்கா அரசாங்கம் ஊடகங்களின் ஊடாக இருட்டடிப்பைச் செய்தது" என ஹரிசன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 



தென்னாசியா, தென்கிழக்காசியா, ஈரான் போன்ற இடங்களில் செய்தியாளராகக் கடமையாற்றிய அனுபவம் மிக்க பி.பி.சி செய்தியாளரான ஹரிசன் 2000 தொடக்கம் 2004 வரை சிறிலங்காவில் பி.பி.சி செய்தியாளராக பணிபுரிந்தார். அத்துடன் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதான செய்தியாளராக கடமையாற்றிய அதேவேளையில், 'மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன' என்ற புத்தகத்தையும் எழுதிவெளியிட்டுள்ளார். இவற்றை விட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகவும் இவர் உள்ளார். 


                       


கேள்வி: தற்போது நீங்கள் எழுதிய புத்தகம் தொடர்பில் எவ்வாறான கருத்துக்களைப் பெற்றுள்ளீர்கள்? 


பதில்: யுத்தத்தில் பங்கு பற்றிய இரு தரப்புக்களிடமிருந்தும் இவ்வெளியீடு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்புத்தகத்தை வாசித்த உலகெங்கும் பரந்து வாழும் சாதாரண தமிழ் மக்கள் தமது சமூகம் சந்தித்த அனுபவங்களை வெளிப்படுத்தியதற்காக எனக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 



லண்டனில் இப்புத்தகத்தை வெளியிட்ட போது, அதில் கலந்து கொண்டிருந்த தமிழ் மகன் ஒருவர் என்னை நோக்கி ஒடி வந்தார். அவரது கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. அவர் என்னை ஆரத்தழுவியவாறு 'நன்றி' எனக் கூறிவிட்டு மீண்டும் அழுதபடி நடந்து சென்றார். 



விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலிகளின் மூத்த தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தவிர ஏனைய புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பில் நோர்வே 2009ன் ஆரம்பத்தில் திட்டம் ஒன்றைக் கொண்டிருந்தது. இது தொடர்பாக நான் எனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். 



சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகத்தால் வழங்கப்பட்ட அழுத்தமானது ஏப்ரல் மற்றும் மே 2009ம் ஆண்டைவிட ஜனவரி 2009ல் அதிகமாக இருந்தது. புலிகள் சமரச முயற்சிகளைத் தட்டிக்கழித்தனர். 



தக்க தருணத்தில் புலிகள் அமைப்பு சமரசத்தை ஏற்றுக் கொண்டு சரணடைந்திருந்தால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் அத்துடன் யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்ற யுத்த மீறல்களும் தடுக்கப்பட்டிருக்கும் என்பது எனது கருத்தாகும். பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் புரிவதை மட்டுமே புலிகள் தெரிவாகக் கொண்டிருந்ததால் மிகக் கசப்பான விளைவை அது ஏற்படுத்தியது. 



கேள்வி: தமிழ்ப் புலிகளுடனான யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவம் எல்லை மீறிச் சென்றது என நீங்கள் கருதுகிறீர்களா? 

பதில்: ஐ.நா வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில், சிறிலங்கா இராணுவமானது யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல்களைப் புரிந்ததுடன், அனைத்துலக போர்ச் சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலிகளை அழிக்கும் யுத்தத்தில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். 'பயங்கரவாதப் பிரச்சினை' முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் யுத்தம் தொடங்குவதற்கு அடிப்படையாக இருந்த பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. இதனை முதன்மைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்துள்ளது. 



கேள்வி: இவ்வாறான யுத்தக் குற்றங்களைத் தடுப்பதில் இந்தியா எத்தகைய பங்களிப்பை வழங்கியிருக்கும்? 

பதில்: சிறிலங்கா மீது இந்தியாவானது மிகப் பெரிய அரசியல் செல்வாக்கையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளது என்பது தொடர்பில் சிறிது சந்தேகம் நிலவுகிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட வேளையில், இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ்மக்களுக்கு யுத்தத்தின் பின்னான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். சிறிலங்காவின் யுத்த வலயத்தின் என்ன நடக்கின்றது என்பதை இந்தியா மிக நெருக்கமாக அவதானிக்கவில்லை என்பதையே இந்தச் செய்தி எடுத்துக் காட்டுகிறது. இதற்கு மாறாக விடுதலைப் புலிகளுக்கு பின்னான சிறிலங்காவின் எதிர்காலம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியது. 



சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் இந்தியா குருட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளது என்பதையே இது எனக்கு காண்பிக்கிறது. இந்தியா மட்டுமல்ல மேற்குலக நாடுகள் பல சிறிலங்காவில் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பில் கண்டுகொள்ளாது நடந்துள்ளன. சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாழ்வை முன்னேற்றி, நீதி வழங்குவதற்காக இந்தியாவானது சிறிலங்கா மீது அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன். 



கேள்வி: போரிலிருந்து மீண்டவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கமானது போதியளவு புனர்வாழ்வு அளிக்கிறதா? 

பதில்: 2009ல் சிறிலங்கா இராணுவம் யுத்தக் குற்றங்களைப் புரிந்ததை தென் சிறிலங்காவில் வாழும் பெரும்பாலான மக்கள் மறுக்கின்றனர். மறுபுறத்தில், விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்கள் மீது அதாவது யுத்தத்தில் தோல்வியைச் சந்திப்பது நிச்சயம் எனத் தெரிந்த போதிலும் பலாத்காரமாக இளையோரைப் படையில் இணைத்தமை போன்ற பல்வேறு மீறல்களைப் புரிந்தனர் என்பதை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர். 



சிறிலங்காவில் வாழும் சிங்கள, தமிழ் மக்களிடையே தத்தம் இனம் சார்ந்த உணர்வு நிலை அதிகம் காணப்படுவதால் இவ்வாறான பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பதென்பது மிகக் கடினமான ஒன்றாகும் என நான் கருதுகிறேன். யுத்தம் தொடர்பில் தமிழ் மற்றும் சிங்களவர்கள் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதால் பொதுவான நிலைப்பாடொன்றை இரு சமூகத்தவர்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதென்பது இலகுவானதன்று.


                    

சிறிலங்காவில் புனர்வாழ்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், யுத்தத்தில் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கானோர் தென்னிந்தியா மற்றம் தென்கிழக்காசியா ஆகியவற்றின் ஊடாக வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர். சிலர் ஐரோப்பா, அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர். இவ்வாறு செல்கின்றவர்களுக்கு வெளிநாடுகளில் எந்தவொரு புனர்வாழ்வுத் திட்டங்களும் உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவர்கள் அடிப்படையில் தேவையான உதவிகளைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். 


யுத்தத்தில் தப்பிப் பிழைத்த மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. யுத்தத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளைக் கூட வெளிப்படையாகச் செய்ய முடியாத நிலையில் சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் உள்ளனர். முள்ளிவாய்க்காலின் ஊடாகச் சென்ற மக்கள் அழிக்கப்பட்டனர். இதிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களால் இரவில் நித்திரை கூடக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தமது அன்புக்குரியவர்களை காப்பாற்ற முடியாமல் போனதால் குற்ற உணர்வில் தவிக்கின்றனர். இவர்களுக்கு உளஆற்றுப்படுத்தல் முக்கியமானது. அத்துடன் பாதுகாப்பு, தொழில் மற்றும் வீடுகள் போன்ற அடிப்படைத் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும். 



கேள்வி: சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஏதாவது பெறுபேற்றை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா? 



பதில்: 2011ல் ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான போர்க் குற்ற விசாரணை அறிக்கை சிறந்த ஆவணமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான வாக்களிப்பில் ஐ.நா விசாரணை அறிக்கை பங்களித்துள்ளது. பொதுவாக நோக்கில் ஐ.நா விசாரணை அறிக்கை போதுமான விளைவை ஏற்படுத்திய போதிலும், குறிப்பாக நோக்கில் இதன் பங்களிப்பு போதியதாக இல்லை என்பது வெளிப்படையானது. 



சிறிலங்கா மீது மேலும் அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும். இந்த நூற்றாண்டில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட இடங்களில் ஒன்றாக முள்ளிவாய்க்கால் உள்ளது. ஆனால் இது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இன்னமும் பொறுப்பளிக்க முன்வரவில்லை.


               

கேள்வி: தங்களது கருத்துப் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை என்ன? 


பதில்: கொல்லப்பட்டவர்கள் தொடர்பான துல்லியமான எண்ணிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. செய்மதி மூலமாக கிடைக்கப் பெற்ற ஒளிப்படங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தடயவியல் மூலம் சிறிலங்காவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓரளவு மதிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் 2009ல் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 75,000 வரை இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வெள்ளியன்று இடம்பெற்ற எனது புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட ஐ.நா வல்லுனர்களில் ஒருவரான ஜஸ்மின் சூக்கா தெரிவித்திருந்தார். 



ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படாத 147,000 மக்களுக்கும் என்ன நடந்தது என மன்னார் மறை மாவட்ட ஆயர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆகவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைகளுக்குள் மிகப் பெரிய வேறுபாடு காணப்படுகின்றது. சிறேபிறேனிக்காவில் (1995ல் பொஸ்னியாவில் இடம்பெற்ற யுத்தம்) இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போது சிரியாவில் இடம்பெறும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை விட சிறிலங்காப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது நிரூபணமாகிறது. 



கேள்வி: இந்த விடயமானது பூகோளத்தின் கவனத்தை போதியளவில் ஈர்த்துள்ளதா? இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக அனைத்துலக சமூகம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? 



பதில்: அனைத்துலக ரீதியில் மறக்கப்பட்ட ஒரு விடயமாக சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் காணப்படுகிறது. ஐரோப்பாவில் மட்டும் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். புலம்பெயர் தமிழர் சமூகமானது பரந்த இறையாண்மை அமைப்பொன்றைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. இங்கு என்ன நடந்தது என்பது அனைத்துலக சமூகம் உற்று அவதானிக்க வேண்டும். ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை, எனது புத்தகம் போன்றவற்றை வாசிப்பதுடன், கொலைக் களங்கள் என்ற சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட சிறிலங்காப் போர் தொடர்பான காணொலியையும் அனைவரும் பார்க்க வேண்டும். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை போன்றவற்றை வாசித்து சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் தொடர்பில் நீங்கள் தெளிவுபெறவேண்டும். 



சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா வல்லுனர் குழுவால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தனிப்பட்ட ரீதியாக நான் ஏற்றுக் கொள்கிறேன். இதுவே சிறிலங்காவில் உண்மையைக் கண்டறிந்து சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வழியாக உள்ளது. 



கேள்வி: ராஜபக்ச ஆட்சிக்கெதிராக தமிழ்நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவுடன் வர்த்தக சார் உறவுகளைப் பேணக்கூடாது என தமிழ்நாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் சிறிலங்காத் தமிழர் விடயத்தில் உதவும் என நீங்கள் நினைக்கிறீர்களா? 

பதில்: நான் ஊடகவியலாளரே தவிர அரசியல்வாதி அல்ல. இது அரசியல்வாதி ஒருவரின் கொள்கை தொடர்பில் கேட்கப்பட வேண்டிய வினாவாகும். 



கேள்வி: சிறிலங்காவில் மீண்டும் தமிழர் போராட்டம் வெடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா? 

பதில்: ஆம், ஆனால் உடனடியாக இல்லை. நான் எனது புத்தகத்திற்காக நேர்காணல் மேற்கொண்ட எந்தவொரு புலி உறுப்பினர்களும் உடனடியாகப் போர் தொடங்க வேண்டும் எனக் கூறவில்லை. 



தமிழ் மக்களின் அவாக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்று அவற்றை நிறைவேற்றாவிட்டால், இது அடுத்த தலைமுறையினர் ஆயுதப் போராட்டம் ஒன்றை மீண்டும் தொடங்க காலாக அமையலாம். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காவிட்டால், அடுத்த தலைமுறை மிக மோசமாக எழுச்சி கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 



பிரபாகரன் சிறுவனாக இருந்த போது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலகங்களைக் கேள்விப்பட்டார். இதுவே பிரபாகரன் ஆயுதம் தூக்க தூண்டுதலாக இருந்தது. இதேபோன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறார்கள் கேள்விப்பட்டால் என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? சுற்றுவட்டம் போன்று இடம்பெறும் பழிவாங்கல்களும், வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும். 



கேள்வி: தமிழர்களும் சிங்களவர்களும் தமது பிடிவாதப் போக்கை கைவிட்டு இரு தரப்பும் தமக்கிடையே மீளிணக்கப்பாட்டை உருவாக்க முடியுமா? 

பதில்: முதலில் உண்மை என்பது மதிக்கப்படாதவிடத்து மீளிணக்கப்பாடு சாத்தியமில்லை. ஏதாவது பிழைகள் நடந்திருந்தால் தவறைச் செய்தவர்கள் தமது தவறுகளை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும். ஆனால் தற்போது இதற்கு எதிர்மாறான செயற்பாடுகளே நடைபெறுகின்றன. பிளவுகள் இருக்கும் வரை மீளிணக்கப்பாடு சாத்தியப்படமாட்டது.


பிரான்செஸ் ஹரிசனுடன் இந்தியாவை தளமாகக்கொண்ட Rediff.comஇணையத்தளத்தின் விக்கி நஞ்சப்பாவின் நேர்காணல் 
நன்றி - 'புதினப்பலகை'
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment