ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்

பெயரிடாத நட்சத்திரங்கள் என்கிற பெயரில் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன என்று அறிந்தபோது, அந்தப் புத்தகம் என் கைக்கு கிட்டும் முன்னர் அந்தப் புத்தகம் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். புலி எதிர்ப்பு எதிர் புலி ஆதரவு என்கிற தீர்மாணிக்கப்பட்ட பார்வைகளோடே பிரதிகள் அணுகப்படும் இன்றைய சூழலில் இப்புத்தகம் முழுக்க முழுக்க புலிகளின் பெண் போராளிகளின் கவிதைகளுடன் வெளிவந்திருப்பது எவ்வாறு அணுகப்படும் என்ற சந்தேகமே எனது யோசனைக்குக் காரணம். இன்றைய தினம்இ நவம்பர் 13 இந்நிகழ்வு நடைபெறுவது கூட ஒரு எதிர்பாராத அனுகூலத்தைத் தந்திருக்கின்றது. இரண்டு நாட்களின் முன்னர் கனடாவில் “நினைவு தினம்” (remembrance day) கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் ரொரன்றோ ஸ்ரார் பத்திரிகையில் வெளியான Rick Salutin  என்பவர் எழுதிய   at the tomb of unknown soldier(1) என்கிற பத்தி இவ்வாறு கூறுகின்றது,

“நினைவு தினங்கள் என்பவை நினைவு செய்வதற்காக மாத்திரமே. அவை வேறெதற்காகவும் அல்ல. மல்வர்ன் கல்லூரியில் இருந்த ஞாபகார்த்த பொருட்கள் தாக்கப்பட்டவை போன்ற செயல்கள் குழப்பகரமானவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும். முதலாம் உலகபோரின் முடிவிற்குப் பின்னர் நினைவுதினங்கள் கடைப்பிடிக்கபப்டுகின்றன. இந்தப் போரை விமர்சித்த போருக்கு எதிரான கவிஞர்கள் காரசாரமாக எழுதியிருக்கின்றனர். ஆனால் இன்றைய தினம் இறப்புகளைப் பற்றிய தினம். போரைப் பற்றிதல்ல. இவர்கள் அப்பாவிகள், இவர்களைப் போருக்கு அனுப்பியவர்கள் அப்பாவிகளில்லாமல் இருக்கலாம். இந்த நாள் இவர்களுக்குரியது.“


இந்த மனநிலையுடன் நாம் போராளிகளைப் பார்க்கவேண்டும். இங்கே நான் போராளிகள் என்று கூறுகின்றபோது விடுதலைப் புலிகளை மாத்திரம் கூறவில்லை. ஈழ விடுதலையை முன்வைத்துப் பேசுகின்றபோது தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடிய அத்தனை போராளிகளும் மதிக்கப்படவேண்டியவர்களே. அதிலும் குறிப்பாக தமிழ் சமூகத்தில் இருக்கின்ற ஆணாதிக்க மனப்பாங்கைத் தாண்டி தமக்கான தளைகளை அறுத்து பெண்கள் ஈழப் போரில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதை நாம் எல்லாருமே அறிந்திருக்கின்றோம். இன்று தொடர்ச்சியாக தீவிர புலி ஆதரவாளர்களால் போராளிகள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் போன்று சித்தரிக்கப்பட்டு கூறப்பட்டு வருகின்ற அதே நேரத்தில் புலி எதிர்ப்பாளர்களால் அவர்கள் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்தனர் என்றும், பெண்களும், குழந்தைகளும் அவர்களது மரபான இயல்புகள் அழிக்கப்பட்டு வந்தனர் என்றுமே கூறப்பட்டு வருகின்றது, ஆனால் உண்மையாகவே அப்படியா பெண் போராளிகள் இருந்தனர்?

இந்தத் தொகுப்பில் அம்புலி எழுதிய மீண்டும் துளிர்க்கும் வசந்தம் என்கிற கவிதையில் கூறுகிறார்,

எனக்காய் இரங்குமாறும்
கண்ணீர் வடுக்குமாறும்
யாரையும் கேட்கப் போவதில்லை,
பாவப்பட்ட உயிரென்றெனக்குப்
பிச்சையளிக்க முன்வராதீர்
வீண் கழிவிரக்கத்தில் என்னை
புரிந்துகொள்ள முயலாதீர்
எனது சுயத்தை அறிக.

வற்றாத வளத்துடன்
எனக்கென்றோர் வாழ்வு இவ்
வையகத்தில் இருந்தது
யாரையும் பற்றியிருக்காச்
சீவியச் செழிப்பில் வாழ்ந்த
தடயங்கள் இப்போதும் உண்டு.
மானம் பெரிதென மதித்த
மாண்பு எனது மரபு
உமைப்போல தலை நிமிர்த்தி
மீண்டும் இங்கு
வாழ்வதற்காய் எழுகின்றேன்.

இந்தப் பெண்கள் போரில் தம்மை ஈடுபடுத்திகொண்டிருந்தபோதும், போராளிகளாக இருந்த போதும் அவர்கள் தமக்குரிய அடையாளங்களோடும், சுயத்தோடும், வாழ்ந்தார்கள். தவிர, மிகுந்த மனோவலிமையும், தைரியமும், தாம் எந்த விதத்திலும் ஆணாதிக்கத்துக்கு உட்பட்டிருக்கவேண்டியதில்லை என்பதை முழுமையாக உணர்ந்தும் வாழ்ந்து வந்தார்கள். இன்று பெண்விடுதலை பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றபோது பெண் விடுதலை, பெண்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு என்பன கடைப்பிடிக்கப்பட்ட அமைப்பாக புலிகள் இருந்திருக்கின்றனர் என்பதை இந்தப் புத்தகம் உள்ளிட்ட பெண் போராளிகளின் எழுத்துக்களின் ஊடாகவும், அவர்களது கள மற்றும் அரசியல் பணிகள் ஊடாகவும் அறியமுடிகின்றது. அதே நேரம், புலிகளில் கட்டுப்பாட்டில் இருந்த பெண்விடுதலையை மேற்கு நாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளோடு நேரடியாக ஒப்பிட்டு விவாதிப்பது பொருத்தமற்றதுமாகும். நுநெஅல டுiநௌ என்கிற ஆயசபயசநவ வுசயறiஉம எழுதிய புத்தகத்தீல் புசைடள in வாந டுவுவுநு என்றொரு அத்தியாயம் வருகின்றது. அதை வாசிக்கும்போது நாம் பெண்போராளிகள் பற்றி வைத்திருந்த விம்பங்களுக்கு மாற்றாக எப்படி அவர்கள் குழந்தைத்தன்மையுடனும், சினேக பாவத்துடனும்இ வயதை மீறிய மன முதிர்ச்சியுடனும் அதே நேரம் இயல்பான கூச்ச சுபாவத்துடனும் இருந்தனர் என்று அறிய முடியும், அதே அபிப்பிராயத்தை இந்தத் தொகுப்பில் இருக்கின்ற கவிதைகளும் உறுதி செய்கின்றன.

“எந்த மகனுக்காய்
என் கால்களை நகர்த்த?
நேற்று விதையுண்டு போன
மூத்தவனுக்கா? இல்லை
இப்போதுதான் விதைக்கப்பட்ட என்
இளைய குஞ்சுக்கா”

என்கிற அ.காந்தாவின் கவிதை போன்றவை புறநானூற்று வீரத்தாய் மரபில் இருந்தாலும், ஆதிலட்சுமி, அம்புலி, கஸ்தூரி, மலைமகள் போன்றவர்கள் எழுதிய கவிதைகள் மிகவும் இயல்பாகவும் மிகைப்படுத்தலின்றியும் இருக்கின்றன. குறிப்பாக “அந்தத் தீபாவளியும் அழகிய என் கிராமமும்” என்கிற கவிதை 1987 தீபாவளி அன்று இந்திய இராணுவம் ஈழத்தில் அரங்கேற்றிய படுகொலைகளை பேசுகின்றது (2). தொகுப்பின் பதிப்பாளர்கள் “கவிதைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சொற்களில் கூட (அதற்கான உரிமை படைப்பாளர்களைத் தவிர யாருக்குமே கிடையாது)” என்று குறிப்பிட்டிருந்தபோதும், 1987 ம் ஆண்டு தீபாவளி ஒக்ரோபர் 21ம் திகதியே வந்தது என்பதும் அன்று இந்திய ராணுவம் தனது கொடூரமான கொண்டாட்டத்தை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அரங்கேற்றியது என்பதுமே உண்மை. ஆனால் இந்தக் கவிதையின் ஆரம்பத்தில் 1987 நவம்பர் 22 என்று தொடங்குகின்றது. இது திருத்தப்பட/ குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய தவறென்றே கருதுகின்றேன். இந்தக் கவிதையிலும், நிழல் விரிக்கும் நினைவுகள் என்ற கவிதையிலும் இந்திய ராணுவத்தின் காலத்தினைப் பதிவுசெய்யும் ஆதிலட்சுமி, அதன் பின்னர் பாரதிக்கு என்ற கவிதையில் ஆணாதிக்க சமூகம் ஒன்றில் தன் அடிமைத்தனத்தை உதற முற்படும் பெண் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்களையும், பின்னர் உங்களுக்காய் நன் உருகித்துடிக்கின்றேன் என்ற கவிதையில் ருவாண்டா நாட்டுச் சிறுவர்களை நோக்கியும் தன் அக்கறைகளை பதிவுசெய்கின்றார்.

அதுபோல எழுதாத கவிதை என்ற தனது இறுதிக் கவிதையில் கப்டன் வானதி இவ்வாறு குறிப்பிடுகின்றார்,

“எழுதுங்களேன் !
நான் எழுதாது செல்லும் என்
கவிதையை
எழுதுங்களேன்

ஏராளம் எண்ணங்களை எழுத
எழுந்து வர முடியவில்லை
எல்லையில் என்
துப்பாக்கி எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால் முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்”

1991 ஆனையிறவுச் சமரின் போது இந்தக் கவிதையை கப்டன் வானதி எழுதிக்கொண்டிருந்தபோது அவர் அருகில் இருந்த போராளி நாதினி, 2000ல் ஆனையிறவு மீட்கப்பட்டபின்னர் தனது முதலாவது கவிதையை

“எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன் எனும்
உன் கவிதை
எழுதப்பட்டுவிட்டது.
உப்பு வெளியில்
உருகிய உங்கள்
உடல்கள் மீது
எமது வீரர்கள்
எழுதாத உன் கவிதையை
எழுதி முடித்தனர்”

என்று எழுதி ஆரம்பிக்கின்றார். வானதியின் கவிதை எழுதப்பட்டு, பின்னர் 2000ல் ஆனையிறவு மீட்கப்படும் வரை 9 ஆண்டுகளும் இந்தக் கவிதை வைராக்கியமாக நாதினியின் மனதில் சூலிரிந்திருக்கின்றது போலும்.

எதைத்தான் பாடுவது என்ற மலைமகளின் கவிதையில் வருவது போல

“ஊர்ந்து போன கதை
ஊர் கலைத்த எதிரிகளை
உளவறிந்த கதை
கொல்லவந்த பகைவருக்கு
குண்டெறிந்த கதை
அலையலையாய் நாம் புகுந்து
ஆட்டி அடித்த கதை என
ஆயிரம் கரு எமக்கு
கவிதை எழுத”

என்று போர்ச்சூழலில் வாழ்ந்த பெண்களால், போரியல் மாத்திரமன்றி பல பரப்பிலும் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. போராளிகளைத் தவிர வேறு யாருக்கும் கிட்டாத

“உன் சாதனை உன்னதம்
உயிலும் மேலான உன் தோழிக்கும்
தெரியாமல் நீ சென்றாய்
உயிரைத் துறந்த அக்கணம்
உடல் சிதறிய அந்நேரம்
அறியேன் தோழி”

என்ற நகுலாவின் கவிதை வரிகளாகட்டும், அல்லது எல்லாரும் கண்ட, ஆனால் இத்தனை அழகியலுடன் பெரும்பாலும் சிந்தித்திராத

“கிழிந்த காற்சட்டை ஒன்றை
தைத்தவாறிருந்தாள் ஒருத்தி
ஊசியில் நூல் கோர்த்தவாறு
அவள் மெல்லச் சொன்னாள்
வானமும் பீத்தலாப் போச்சிது
இது முடிய அதையும் நான்
பொத்தித் தைக்கப் போறேன்”

என்ற கவிதையும் சரிஇஇந்தப் போராளிகளின் கவிதைகள் மிகப் புதிய அனுபவத்தைத் தருகின்றன. இந்தக் கவிதைகளை இசங்களோடும், கவிதைக்கான இலக்கண, இலக்கியங்களோடும் சேர்த்துப் பாராமல், போராட்ட சூழ்நிலையில், போரின் மத்தியில் இருந்துகொண்டு எழுதப்பட்ட கவிதைகள் என்ற உணர்வோடு படிப்பது முக்கியம்..

//ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான
என் காவலிருப்பு
நாளையும் நான் வாழவேண்டும்// (அம்புலி, பக்கம் 15)

என்ற வரிகளோ,

//எப்பொழுதும்
யுத்தம் எனக்குப் பிடிப்பதில்லை
ஆயினும் அதன் முழக்கத்தினிடையே
எனது கோலம் மாற்றமடைந்தது,
கால நிர்ப்பந்தத்தில்.//(அம்புலி பக்கம் 16)

என்ற வரிகளோ

//ஆயினும்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாக
தாலாட்டவும்
என்னால் முடியும்,
குளத்தடி மர நிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதைபேச
நான் தயார்.
நிம்மதியான பூமியில் நித்திரைகொள்ள
எனக்கும் விருப்புண்டு// (அம்புலி – பக்கம் 17)

என்ற வரிகளோ ஏற்படுத்தும் தாக்கம் அதன் வார்த்தைகளில் மாத்திரம் தங்கிவிடவில்லை. மாறாக இந்தக் கவிதைகள் எம் ஆழ்மனதுடன் நேரடியாக பேசுகின்றன.

பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்தத் தொகுப்பை ஈழவிடுதலை பற்றிய அக்கறையை முன்வைத்து நான் பார்க்கின்ற பார்வைக்கும், பெண்ணிய வாசிப்பொன்றை மேற்கொள்ளுகின்ற ஒருவருக்கும் முரண்படுகின்ற புள்ளிகள் இருக்கலாம். ஆயினும், வறட்டுத்தனமாக மேற்கத்தின் பெண்ணியக் கோட்பாடுகளையோ அல்லது இந்தியாவின் பாலசந்தர் திரைப்படப் பாணி பெண்ணியத்தையோ முன்வையாமல் எமது இன, மத, தேசிய, பண்பாட்டு, நடைமுறை, மானுடவியல் சார்ந்த பெண்ணிய நோக்கில் இந்தப் பிரதியை அணுகுவதே சரியானதாயிருக்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கவிதைகள் வாசிப்பதை கடந்த 3 ஆண்டுகளாக ஏறக்குறைய நிறுத்தியே வந்திருந்த நான், இந்தக் கவிதைத் தொகுப்பை ஆர்வத்துடன் அணுகக் காரணம் ஈழப் போராட்டம், போராளிகள் வரலாறு, குறிப்பாக புலிகள் தொடர்பாக அறிவுசீவிகள், மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் கட்டியெழுப்பிய, இன்னமும் எழுப்பிக்கொண்டிருக்கின்ற கருத்தியல்களை மீள் பரிசீலனை செய்யும் நோக்குடனான என் வாசிப்புச் சார்ந்து எழுந்தது எனலாம். ஈழம் பற்றிய பேச்சுக்கள் வரும்போதெல்லாம் எம்மால் எதையும் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம் என்று சொல்லப்படுவதை அண்மைக்காலமாக நான் கவனித்தும் எதிர்கொண்டும் இருக்கின்றேன். இந்த மண்டபத்தில் இருப்பவர்கள் மிகப் பெரும்பான்மையானவர்கள் எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகள் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்கள். எம்மால் உண்மையாகவே ஏதும் செய்யமுடியாதா?

இன்று இணையத்தளங்களில் தேடிப்பாருங்கள், குறிப்பாக ஆங்கிலத்தில். தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கெதிரான கருத்துக்களே அதிகம் குவிந்து கிடக்கின்றன. ஏன் இது விடுதலைப் போராட்டமேயல்ல என்றம் கூட இன்று சொல்லப்படுகின்றது. அறிவுசீவிகள் என்ற பெயரில் ஈழப் போரில் தமிழர் தரப்புக்கெதிராக செய்யப்பட்ட பரப்புரைகளை இணையவெளி எங்கும் குவிந்திருக்கக் காணலாம். குறைந்த பட்சம் இந்த திட்டமுறையில் செய்யப்படும் பரப்புரைகளை கருத்தியல் ரீதியாக நாம் எதிர்கொள்ள முடியாதா? இங்கே நான் தெளிவாக ஒன்றைக் குறிப்பிடவிரும்புகின்றேன். தமிழர் விடுதலை என்று பேசியவுடனேயே நான் புலிகளை நியாயப்படுத்துகின்றேன் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளாதீர்கள். புலிகள் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு, அவை பெரிதும் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கை விமர்சிப்பவை. அதை விடுத்து புலிகள் தலித் விடுதலையை முன்னெடுக்கவில்லை, பெண் விடுதலையை முன்னெடுக்கவில்லை, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று சொல்லி ஒட்டுமொத்தமாக புலிகளை நிராகரிப்பது சரியானதல்ல.

ஈழத்தில் இனரீதியான ஒடுக்குமுறை தமிழர் மீது பிரயோகிக்கப்பட்டபோது அதற்கெதிராக இனவிடுதலைப் போராட்டம் தொடங்கியது. அதன் கூறுகளாகவே சமூகவிடுதலைக்கான சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்றவை பார்க்கப்படவேண்டும் என்பதே எனது கருத்து. மிக அண்மையில் புலிகள் ஆணாதிக்கவாதிகள் என்ற சொல்லாடலை கேட்க நேர்ந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும் பெண்கள் அங்கு எவ்வளவு மதிக்கப்பட்டார்கள் என்பதும், எத்தனை சமத்துவத்துடன் பார்க்கப்பட்டார்கள் என்பதும். குறிப்பாக தமிழீழச் சட்டக் கோவையின் பிரகாரம் முன்னர் வழமையில் இருந்த தேசவழமைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு பெண்களுக்கு சொத்துரிமை, கருக்கலைப்பு தொடர்பான உரிமைகள், பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் விசேட சட்டங்கள் கொண்டுவரப்பட்டதுடன், சொத்துக்களை ஆண்களைப் போலவே சுதந்திரமாக விற்பதற்கான உரிமையும் இருந்தது. இது குறித்து பரா வழங்கிய நேர்காணல் ஒன்றின் சிறுபகுதி,

“We made special laws for women regarding their property rights, rape, abortion etc. Under our laws women are totally free and on par with men in property transactions. As you know, this is not the case under Jaffna’s traditional law, Thesawalamai. Our civil code has done away with the stipulation in Thesawalamai that a woman should obtain her husband’s consent to sell her property. We made caste discrimination a crime. These could be considered some of the milestones of the Thamil Eelam judicial system. ” (3)

ஈழப் போராட்டம் எனது எழுத்துக்களில் முக்கிய புள்ளி என்று தீர்மானித்தபின்னர் அதற்கான தீவிர வாசிப்பில் ஈடுபட்டேன், கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 25 புத்தகங்களை ஈழப்போராட்டம் பற்றி வாசித்தேன். அவை எனக்கு நிறைய விடயங்களில் தெளிவைத் தந்தன. நிறைய விடயங்களில் மிகப் பிழையான புரிதல்களுடன் இருந்திருக்கின்றேன் என்பதையும் உணர்ந்துகொண்டேன். இது போல இயன்றவரை எல்லாரும் ஈழப்போராட்டம் பற்றிய முக்கிய புத்தகங்களை தொடந்து வாசிப்பது அது பற்றி கலந்துரையாடுவதும் முக்கியம் என்று எனது கருத்தாக முன்வைக்கின்றேன். அது மாத்திரமன்றி ஒரு தார்மீகக் கடமையாக ஈழத்தில் இருந்து வெளிவரும் டெய்லி மிரரையோ, உதயனையோ அவற்றின் குறைகளைத் தாண்டி அங்கிருந்து வெளிவரும் நாளிழ்களில் சிறப்பாக வெளிபருவவை என்றளவிலாவது தொடர்ந்து வாசிக்கும்படியும் கேட்டுக்கொள்ளுகின்றேன், மாற்று அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் வெறும் காழ்ப்பை மாத்திரம் முன்வைப்பவர்களையும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்திரிகைகள், இணையங்களையும், இலங்கை அரச பின்னணியுடன் இயங்குகின்ற ஊடகங்களையும் வாசித்து அதன் அடிப்படையில் ஈழப் போராட்டம் பற்றியும், புலிகள் அமைப்புப் பற்றியும் தீர்மானங்களை மேற்கொள்ளுவது சேகுவரா பற்றி அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையங்களூடாக அணுகுவதைப்போல முட்டாள்தனமானது என்றும் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்,

 அண்மையில் குழந்தைப் போராளிகள் பற்றி தொடர்ச்சியாக சில புத்தகங்களை வாசித்தேன். அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு முக்கிய விடயம், சியரா லியோன், கொங்கோ, கம்போடியா என்று குழந்தைப் போராளிகள் போரில் ஈடுபடுத்தப்பட்ட நாடுகளில் எல்லாம் பெண்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலியல் சுரண்டல்களுக்குள்ளானதாகவும், அதே நேரம் புலிகள் இயக்கத்தில் பெண்கள் எந்தவிதமான பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாக்கப்படவில்லை என்றும், எல்லா விதங்களிலும் ஆண்களுக்கு சமமாகவே மதிக்கப்பட்டார்கள் என்றும், ஆண்கள் ஈடுபட்டிருந்த அனைத்துத் துறைகளிலும் பெண்களும் ஈடுபட்டிருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதே நேரத்தில் Margaret Trawick Enymy ன் Linesல் கூறுகிறார்

 “நான் அங்கே இருந்த காலங்களில் போராளிகளின் நிறைய திருமணங்கள் நடைபெற்றன. நான் கேள்விப்பட்டவை எல்லாமே ஆண் போராளிகளுக்கும் சாதாரண பெண்களுக்குமானவையாகவே இருந்தன. இதே போல சாதாரண ஆண்கள் போராளிப் பெண்களை திருமணம் செய்வார்களா அல்லது செய்ய முடியுமா என்று அறிவதில் ஆர்வமாக இருந்தேன். அதன் பின்னர் சில நாட்களில் பிரபாகரன் ஆண் போராளிகள் பெண் போராளிகளை மாத்திரமே திருமணம் செய்யலாம் என்று கட்டளையிட்டதாகவும் அறிந்தேன். ஆனாலும் இந்தச் செய்தியை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை”

என்று. போரின் பின்னால், குறிப்பாக போரில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பெண் போராளிகள் அடைந்திருக்கின்ற கையறு நிலை பேசப்படவேண்டியதே. அதே நேரம், போரின் பின்னரான பெண்போராளிகளின் நிலையச் சுட்டிக்காட்டி, புலிகள் பெண்களின் விடுதலையையும், உள்ளொளியை உணரவும் கற்றுத்தரவில்லை என்றும் சொல்லபடுகின்ற வாதம் அபத்தமானது என்பதையும் கூறிக்கொள்ளுகின்றேன். சில மாதங்களிற்குப் முன்னர் நான் இலங்கை சென்றிருந்தபோது அங்கே தமிழ்ப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தெரிந்துகொண்டேன். கற்பென்றும், புனிதமென்றும் கட்டியெழுப்பிய கற்பனைகளிலேயே குளிர்காயும் எமது சமூகம் இதையும் கலாசாரச் சீரழிவென்றே ஒப்பாரி வைக்கும். இந்த மடத்தனத்தை துறந்து, இது Post war விளைவுகளில் (Post என்பதற்கு பரவலாகப் பாவிக்கப்படும் பின் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் ஆங்கிலத்திலேயே போஸ்ட் என்கிற வார்த்தையை பிரயோகிக்கின்றேன்) ஒன்று என்பதை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாற நாம் என்ன செய்யலாம் என்று பேசுவதே நேர்மையான செயல். இங்கிருந்து பெண்ணியம், பெண் விடுதலை, மாற்றுக்கருத்து, புதிய அரசியல் என்று பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, இது குறித்து ஆக்கபூர்வமாக செயற்படுவது முக்கியம். அப்படி யார் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டாலும் அவர்களுடன் இணைந்து உதவ நான் எப்போது தயாராக உள்ளேன் என்று கூறிக்கொள்வதுடன், இதற்குக் காரணமும் புலிகள் என்று யாராவது அரற்ற ஆரம்பித்தால் அவர்களுக்குப் பதிலேதும் எனக்கு இல்லை என்றும் கூறிக்கொள்ளுகின்றேன். அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.

அருண்மொழிவர்மன் ( amvarman25@gmail.com)




Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment