சனல் 4 இயக்குநர் குற்றச்சாட்டு
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையோ, மேற்குலகமோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற ஆவணப்படத்தின் இயக்குநர் கல்லும் மக்ரே குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச சட்டங்களின் கீழ் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது முதன்மையான கடமையாக இருக்கின்ற போதிலும், அக்கடமையை நிறைவேற்றுவதில் சர்வதேச சமூகம் தவறிழைத்துவிட்டதாக அவர் பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச் செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்கள், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்காவின் இரகசிய தகவல் குறிப்புகள் மற்றும் ஐ.நாவின் முன்னாள் மூத்த அதிகாரி ஜோன் ஹோம்ஸின் செவ்வி ஆகிய இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தியுள்ளன.
சர்வதேச சமூகம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களை தடுக்கத் தவறியமைக்கு முக்கிய காரணங்கள் உள்ளன. தீவிரவாதத்துக்கு எதிராக அப்போது நடத்தப்பட்ட உலகளாவிய போர் என்ற மேற்குலகத்தின் நிகழ்ச்சிநிரலை, ராஜபக்ஷ அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யப்ப ட்டுள்ளதை சனல் தொலைக்காட்சி வெளியிடவுள்ள புதிய ஆவணப்படம் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளிகள் உரிய நிபுணர்களால் நுணுக்கமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உண்மையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலச்சந்திரன் மீதிருந்த காயத்தின் தன்மையின் மூலம் அவரின் மரணம் ஒரு மோசமான படுகொலை என்பதை உறுதி செய்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் போராளிகளும் திட்டமிட்ட வகையில் படைத் தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை இப் படுகொலை உறுதிப்படுத்துகிறது.
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அப்போதைய இரா ணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளின் கட்டளையே காரணம் என இப் புதிய ஆவணப்படம் சுட்டிக் காட்டுகின்றது.
படைத்துறை மிகவும் ஒழுக்கமானது எனவும், நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது எனவும், தமது கட்டுப்பாட்டின் கீழேயே போர் நடத்தப்பட்டதாகவும் ஜனாதிபதியும், படைத்துறைச் செயலாளரும் தொடர்ச்சியாக தெரிவித்திருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமா னப் பணியாளர்கள் பாதுகாப்புக் கருதி மறைந்திருந்த பதுங்குகுழிகள் மீதும், அதனைச் சுற்றியும் திட்டமிட்ட வகையில் படைத் தரப்பினரால் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் ஐ.நா. பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தது கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகாவுக்கும் நேரடியாகத் தெரியப்படுத்தப்பட்டது. இப்போர் தவிர்ப்பு வலயம் மீதான படைத் தரப்பினரின் தாக்குதல்களை இலங்கையின் ஆட்சிபீடம் நன்றாகவே அறிந்திருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இவர்களே நேரடியான பொறுப்புடையவர்கள் ஆவர். பொதுமக்களை கேடயங்களாக பாவித்தமை உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை எவரும் மறுக்கவில்லை. இவர்களின் போர் மீறல்களும் ஆதாரப்படுத்தப் பட்டுள்ளன என அவர் இச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.
வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment