சிறிலங்காவில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது தமது கணவன்மார் மற்றும் மகன்மாரை இழந்த பெண்கள் பலவந்தமாக பாலியல்தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர், வடக்கு கிழக்கில் 85,000 இற்கும் மேற்பட்டோர் தமது கணவன்மாரை இழந்து வாழ்வதாக உலக மீனவசமூக ஒற்றுமை இயக்கத்தை [World Fisherfolk Solidarity Movement] சேர்ந்த கீதா லக்மினி தெரிவித்துள்ளார்.
"மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வாழும் பெண்களின் குடும்பங்களில் ஆண்கள் இல்லாததால் அவர்கள் தமது வாழ்வைக் கொண்டு நடாத்துவதற்காக, தமது பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக தமது உடலை விற்று, பாலியல்தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்" என கீதா லக்மினி மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு உதவிக் கொடுப்பனவுகளையும் மன்னார் மாவட்டத்தில் வாழும் கணவனை இழந்த பெண்கள் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான பெண்கள் தற்போது தலைவலி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்ற உளவியல் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளதாக, போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல உலக நாடுகள் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதானது பிரதானமாக உளவியல் ரீதியாகப் பாதிப்படைந்த பெண்களை ஆற்றுப்படுத்தும் ஒரு முயற்சியாக இருப்பதாக, மனித வள அபிவிருத்தி மையமான 'விழுது' நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனரான சாந்தினி சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
"நாட்டில் மீளிணக்கப்பாட்டைக் கொண்டு வருவதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதாக கூறப்படுகின்றது. உண்மையில் இதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார், மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு உண்மையில் என்ன நடந்ததென்பது அறியப்பட வேண்டும்" எனவும் சாந்தினி சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் மனித உயிரினங்களாக இருப்பதால், பொறுப்புக் கூறல் என்பது உலகிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கருத்தரங்கானது, சமூக நீதிக்கான பெண்கள் அமைப்பால் ஒழுங்குபடுத்தி நடாத்தப்பட்டது.
செய்திவழிமூலம்: பிபிசி
0 கருத்துரைகள் :
Post a Comment