இந்தத் தாக்குதல் புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றியது. ஏற்கனவே தீவிரவாதப் பட்டியலில் வைத்திருந்த கனடாவும், அமெரிக்காவும் தமது நிலைப்பாட்டை மேலும் இறுக்கின. இவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள், அதற்கான நிதி கிடைக்கின்றன என்ற விடயத்தை தோண்டத் தொடங்கின. புலிகளின் இந்த அபரித வளர்ச்சியால் கதிகலங்கிய இந்தியா களத்தில் குதிக்கவே, போட்டிக்கு சீனாவும், பாகிஸ் தானும் இலங்கைக்கு உதவிக்கு வந்தன.
கடந்தகாலம் தமிழர்களிடமிருந்து மிக வேகமாக அரிக்கப்படுகின்றது. நம்மைக் கடந்து போகும் ஒவ்வொரு கணமும் வலிகளாலும், மனித சமூகம் எதிர்கொள்ளவே முடியாத துயரங்களாலும் நிரம்பியவை. ஆனால், அவை நம்மில் தங்குவதில்லை. முகாமிடுவதில்லை. மிகுகதியில் அழிந்துவிடுகின்றன. நினைவழிதலின் அரசியல் எனும் விடயம் இங்கு மட்டும் தான் விரைவான தன் செயற்றிறனைக் காட்டியிருக்கின்றது. உலகில் போராடித் தோற்ற வேறு எந்த இனங்களிடமும் காணப்படாத ஓர் அரிய,தவிர்க்கப்பட வேண்டிய பண்பாடாக நாம் வைத்திருக்கின்றோம்.
ஏன் கடந்தகாலம்?
நமது நாள்கள் குருதியால் நிரம்பியவை. இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தொடங்கிய இந்த இரத்தப் பெருக்கெடுக்கும் இலங்கைத் தமிழரின் வரலாறானது, 1983இலிருந்து வீரியம் பெற்றது. 2009 இல் ஒட்டுமொத்த வெறியையும் நம் மீது கட்டவிழ்த்தது. இந்த நாள்களில் கொப்பளித்து அடங்கி, நாறிப்போன குருதிக்குள்,குழந்தைகள், கருவில் இருந்த சிசுக்கள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள், ஆண்கள் என அனைவருமே மூழ்கினர்.
அவர்கள் அனைவரும் சிந்திய குருதியின் வண்ணத்தில் தான் நம் ஒவ்வொருவரின் காலைகளும் விடிந்தன. சாவு விழும் என்ற எதிர்பார்ப்புடனும், சாவை பற்றிய செய்தி வரும் என்ற எதிர்பார்ப்புடனேயுமே சனங்கள்,பக்கங்களையும், பத்திரிகைகளையும் பார்த்த காலம் இன்னும் ஆறவில்லை.
365 நாள்கள் நம் சாவுக்கு போதாது
உலகில் சிறியதொரு இனமாக இருந்து கொண்டு, எப்படி ஒவ்வொரு நாளும் சாவை வைத்துக் கொள்ள முடிகின்றது? இதற்கான விடை நாம் வேட்டையாடப்பட்டதிலும், வேட்டையாடப்பட்டதற்கான காரணாகாரியங்களிலுமே உள்ளது. தமிழர்கள் இந்தத் தீவில் வாழவே கூடாது என்ற எண்ணம் சாவுகளை நம் மீது அள்ளிவீசியது. பால், வயது வேறுபாடறுக்கப்பட்ட சாவுகள், தமிழர் நிலம் முழுவதும் விதைக்கப்பட்டன.
இந்த சாவு விதைப்புக்கும், அதன் அறுவடைக்கும் 365நாள்களும் போதாமலிருந்தன. ஒவ்வொரு குடிசையிலும்,ஒன்றுக்கு மேற்பட்ட சாவுச் செய்திகள் நாள் தோறும் இருந்தன. இருக்கின்றன. அதனால் தான் நம் மத்தியில் சாவுகளை நினைவு கொள்வதற்கு நாள்கள் போதாமலிருக்கின்றன. அதனாலேயும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியவைகளை மறந்தே போனோம்.
நினைவழிதலின் அரசியலை விளங்கிக் கொள்ளுதல்
இன்று உலகம் முழுவதும் அமெரிக்காவுக்குப் பயன்படாத தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் விரைவான தோல்வியை சந்தித்து வருகின்றன. அவை விரைவாகவே தீவிரவாத விளம்பரங்களைப் பெற்றும் விடுகின்றன. அத்தோடு இன விடுதலைக்காக வீழ்ந்த அத்தனை உயிர்களும் வீணான சாவுகளின் பட்டியலில் தம்மை இணைத்துக் கொள்கின்றன.
அந்த சாவுகள் பெறுமதியற்றவையாக, சிங்கள புத்தரின் மொழியில் வாழத் தகுதியற்றவனவாக வரலாற்றில் பதிவுசெய்து கொள்கின்றன. ஆனால் போராடும் இனங்களின் பக்கம் நின்று பார்த்தால், இந்தச் சாவுகள் நினைவில் வைக்கப்பட வேண்டியவை. ஆனால் இன விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கும் அரசுகள் அவ்வாறான நினைவுகளையும் அழிப்பதில் கனகச்சிதமாக செயற்படுகின்றன. அதற்கான செயற்பாடுகளையே நினைவழிக்கப்படுதலின் அரசியல் என அழைக்கின்றனர்.
எப்படி அழிக்கப்படுகின்றது நினைவு
இலங்கையில் புலிகள் தனி இராச்சியம் ஒன்றையே நிறுவியிருந்தார்கள். பல இடங்களில் அவரகளது போராட்ட நினைவுச் சின்னங்கள் இருந்தன. குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்கள் பார்க்கும் ஒவ்வொரு சந்ததிக்கும் விடுதலை வேட்கையையும், போராடும் குணத்தையும் கடத்தும் ஊடகங்களாக அமையப்பெற்றிருந்தன.
மக்கள் வணங்கிச் செல்லும் ஆலயநிலையை அவை எட்டியிருந்தன. அந்த இடங்களைக் கடக்கும்போது பேருந்துகளில் பாடல்கள் ஒலிப்பதில்லை. வாகனங்கள் அசைவொலி எழுப்புவதில்லை. அவ்வளவுக்கு மரியாதைக்குரிய நினைவுகளாக அவை பாதுகாக்கப்பட்டன. ஆனால், இன்று திட்டமிட்டவகையில் நினைவழிக்கும் அரசியல் படலம் அந்த புனித மையங்களிலெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றது.
அந்த இடங்களில் இப்போது எந்த நினைவும் இல்லை. அனைத்துமே கிளறப்பட்டாயிற்று. அண்ணனின் நினைவு மீது தம்பி கிரிக்கெட் விளையாடும் மைதானங்கள் உருவாக்கியளிக்கப்பட்டுள்ளன. போராட்டம் தோற்று 3வருடங்களுக்குள் நினைவுத் தரைகள், வெறும் கட்டாந்தரைகள் ஆகிவிட்டன. இப்படித்தான் ஒவ்வொரு நினைவிடமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
போராடிய மக்களுக்கு வேறொரு உலகில் வாழும் எண்ணத்தை வழங்கக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரம் பெற்றுவருகின்றன. அதில் முக்கால்வாசிக்கு மேல் வெற்றியும் அடைந்தாயிற்று. இன்று வன்னியில் போரில் காயம்பட்ட கட்டடங்களைக் கூட காணக்கிடைப்பதில்லை. அனைத்தும் ஐ.என்.ஜீ.ஓவும், அரசு சார்ந்த நிறுவனங்களாலும் பூசி மெழுகப்பட்டுள்ளன. ஆக போரில் காயப்பட்ட அப்பாவின் நினைவை மட்டும் அவரின் மகனும், அந்த மகனின் நண்பர்களும் சுமக்கின்றனர். அதுவும் இந்த அப்பா, அப்பப்பா ஆகும் போது மறக்கப்பட்டுவிடும்.
ஒரு நினைவு
இன்று 22ஆம் திகதி. 2007 ஆம் ஆண்டும் இதே போன்றதொரு 22 ஆம் திகதி வந்தது. ஆனால் அது இந்த முறை போன்று மௌனித்த பெருவெளிக்குள் இயங்கவில்லை. அந்த நாள் தொடங்கி மாதக்கணக்கில் பெரும் ஆரவாரம் இருந்தது. உலகம் இரண்டாவது தடவையாக தமிழர்பக்கம் திரும்பியது இந்த 22 இல் தான். அந்த ஆபத்தான பார்வையை இந்த 22 தான் தந்தது.
இந்த நாள் இது போன்றதொரு ஆச்சரிய செய்தியைத் தருமென்று சனங்கள் யாருமே நினைக்கவில்லை. அன்றும் வழமையாக புலிகளின் குரல் வானொலி 6.30 இற்கு ஆரம்பமாகியது. ஆனால் அன்று மட்டும் தொடக்கத்தில் வரும் அறிவிப்பாளர்கள் இருக்கவில்லை. தன் குரலினால் போர்க்களத்தையே கொண்டுவரும் தி.தவபாலன் (தி.இறைவன்) மைக்கை பொறுப்பெடுத்திருந்தார். அன்று முழுதும் அவரின் கையில் தான் அது இருக்கப் போகின்றது என்ற விடயம் ஆரம்பத்தில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அதிகாலை 3 மணியளவில் அனுராதபுரம் விமானப் படைத்தளத்துக்குள் நுழைந்த 21 பேர் கொண்ட விசேட கரும்புலிகள் அணி அந்த தளத்தையும், அங்கிருந்த விமானங்களையும் தாக்கியளித்தது என்ற செய்தி அனைத்து சனங்களையும் சுவாரஸ்யமாக்கியது.
வெற்றிப் பாடல்களுக்குள்ளும், தவபாலன் எப்போது வாயைத் திறப்பார் என்ற ஆவலுக்குள்ளும் வானொலிப் பெட்டியடியில் பலர் படுக்கை போட்டனர்.அவரும் சளைக்காமல் அந்தத் தாக்குதல் தொடர்பான நேரடி வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தார். எப்படிப் பயிற்சி பெற்றனர்? எப்படி நுழைந்தனர்? எப்படி தாக்கினர்?எவ்வளவு பெறுமதியிழப்பு போன்ற தகவல்களை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டேயிருந்தார்.கிளிநொச்சி இளைஞர்கள் பட்டாசுக் கொளுத்திக் கொண்டாடினர்.
அன்று காலை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையில் தாக்குதல் குறித்து எந்தச் செய்திகளும் இருக்கவில்லை.அதனால் மாலையில் விசேட பதிப்பொன்று வந்தது. அதில் தம் உயிரை இழந்த முகங்கள் கடைசிப் புன்னகையுடன் இருந்தன. அவர்களின் முகங்களைக் கண்டதிலிருந்து சனங்கள் மத்தியிலிருந்து வெற்றிக் கொண்டாட்டங்கள் அடங்கிப் போயிற்று.
அன்று தொடங்கிய தாக்குதல் பற்றிய கதைகளும், செய்திகளும் பல மாதங்கள் நீடித்தன. ஒவ்வொரு பத்திரிகையும் புலிகளின் பலத்தையும், இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையும், இழப்பையும், அதற்குப்பிறகு இலங்கையில் ஏற்படப் போகும் மாற்றத்தையும் பலவாறாக எழுதித் தொலைத்தன. ஆனால் 2009 இல் முடிந்த யதார்த்தம் அவை எழுதியதிலிருந்து முற்றாக மாறுபட்டிருந்தன.
முதல் கூட்டுத் தாக்குதல்
விடுதலைப்புலிகள் சமாதானகாலத்தின் முடிவில் அபரிதமான ஆயுத வளர்ச்சியைக் கண்டிருந்தார்கள் என்று எழுதப்பட்டு வந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதற்கேற்றாற் போலவே புலிகளும் மூன்று வழியிலான தாக்குதலை நடத்தியிருந்தனர். கரும்புலிகள் அணி நேரடியாகத் தாக்குதலில் ஈடுபட, புலிகளின் விமானப்படையும் சமநேரத்தில் தாக்குதல் நடத்தியது. பக்க பலத்திற்கு புலிகள் பக்கமிருந்து ஆட்லெறி எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.
ஆகவே அந்த அரசியல் ஆய்வாளர்கள் அனைவரினதும் கருத்துக்கள் நிஜப்பட்டதாகவே தொடர்ந்தும் புலிகளுக்கு உசுப்பேத்தினர். இதுவரை உலகில் வேறு எந்த விடுதலை இயக்கமும் இதுபோன்ற ஒருங்கிணைப்புத் தாக்குதலை நடத்தவில்லையெனவும், இது அதீத வளர்ச்சி எனவும் முழங்கினர்.
உலகின் பார்வை மாறியது
ஆனால் இந்தத் தாக்குதல் புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றியது. ஏற்கனவே தீவிரவாதப் பட்டியலில் வைத்திருந்த கனடாவும், அமெரிக்காவும் தமது நிலைப்பாட்டை மேலும் இறுக்கின. இவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள், அதற்கான நிதி கிடைக்கின்றன என்ற விடயத்தை தோண்டத் தொடங்கின. புலிகளின் இந்த அபரித வளர்ச்சியால் கதிகலங்கிய இந்தியா களத்தில் குதிக்கவே, போட்டிக்கு சீனாவும், பாகிஸ்தானும் உதவிக்கு வந்தன. புலிகளுக்கு எதிராகப் இலங்கை அரச படைகள் பயன்படுத்த இந்த நாடுகள் அனைத்துமே போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை வாரிக் கொட்டின.
2009 முடிவுவரை அந்த நிலை தான் தொடர்ந்தது. புலிகளை ஒடுக்குவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களாலேயே உருவாக்கிக் கொடுக்கப்பட்டதென உசுப்பேற்றிய பத்திரிகைகள் மறுபடியும் எழுதத் தொடங்கின. சீனாவும்,இந்தியாவும், பாகிஸ்தானும் இலங்கைக்குள் கால்வைப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்கு அனுராதபுரத்தாக்குதல் இப்படித்தான் உதவியது.
பிணங்களைக்கொண்டாடிய சிங்களவர்கள்
அன்று மாலையே சிங்களத் தொலைக்காட்சிகள் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. அனுராதபுரத் தாக்குதலில் மரணித்த போராளிகளின் நிர்வாண உடலங்கள் வாகனப் பெட்டிகளில் கட்டி தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டன. சிங்கள மக்கள் அதனைப் பார்வையிட்டு பெருமூச்செறிந்தனர். எதைக்கொடுத்தாவது இவர்களை அழித்தொழிக்க வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டனர்.
2009 முடிவுக்கு தம்மாலான அனைத்து உதவிகளையும் ஆட்சியாளர்களுக்கு சிங்கள மக்கள் வழங்கினர். இப்போதும் இந்த அரசு தாங்க முடியாத பொருளாதார சுமைகளை அந்த மக்கள் மீது சுமத்துகின்ற போதும் தமது ஆதரவை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு அந்த மக்களின் கனவை இந்த அரசு நிறைவேற்றி வைத்தது தான் பிரதான காரணி. அந்த வெற்றியின் நினைவே சிங்கள மக்கள் மத்தியில் இந்த அரசை கதாநாயகப்படுத்தியிருக்கின்றது. இப்படியான ஒரு கடந்த கால நினைவையும் நாம் வைத்திருக்கின்றோம்!
0 கருத்துரைகள் :
Post a Comment