ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு உடன்படாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மீண்டும் தெரிவித்துள்ளார். அந்தத் தீர்மானத்துக்குத் தமது அரசு ஒருபோதும் கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாள்களுக்கு முன்னர் கொழும்பில் அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலும் இதே கருத்தை அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அது அவரது "தனிப்பட்ட கருத்தே தவிர அரசின் கருத்து அல்ல" என்று அமைச்சரவைப் பதில் பேச்சாளரும் ஊடகத்துறை பதில் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.
அமைச்சர் யாப்பாவின் கருத்து வெளியாகி ஒருநாள் கடப்பதற்கிடையில், ஜெனிவா தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நிதிச் சட்டமூலங்கள் தொடர்பான விவாத்திற்குப் பதிலளித்துப் பேசிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஜெனிவாத் தீர்மானம் தொடர்பாக ஏப்ரல் 3,4ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் பீரிஸ் தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் சபை கள்வர்களின் குகை என்றும் அரசியல் நயவஞ்சகம் நிறைந்த ஒருதலைப்பட்சமான சபை என்றும் அங்கு நியாயம் கிடைக்காது என்றும் அமெரிக்கா மற்றும் ரஷ்ய ஆகியன ஏற்கனவே இந்தச் சபை பற்றித் தெரிவித்து இருக்கின்றன என்றும் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் பீரிஸ்.
"தீர்மானத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்தால் இணைந்து செயற்பட முன்வருவீர்களா என்று இந்தியாவும் அமெரிக்காவும் எம்மிடம் கேட்டன. ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு ஆரம்பம் முதலே நாம் கடும் எதிர்ப்பைக் காட்டி வந்த நிலையில் அதற்கு உடன்பட மறுத்துவிட்டோம். எந்த மாற்றத்தைச் செய்தாலும் உடன்பட மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டோம். அப்படி உடன்படுவது நாட்டுக்குச் செய்யும் துரோகம். அப்படிப்பட்ட எந்த அச்சுறுத்தலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்" என்றார் அமைச்சர் பீரிஸ்.
ஜெனிவாத் தீர்மானத்தை அரசு ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "ஏற்கனவே திட்டமிடப்பட்ட எமது நிகழ்ச்சி நிரலின்படி வேலைத் திட்டங்கள் தொடரும். இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசு உள்ளது. எமது நிர்வாகத்தை ஜெனிவாவிடம் ஒப்படைக்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெனிவாத் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று தெரிவித்த பீரிஸ், அதைப் பற்றித் அரசு அலட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறினார். "அந்நியத் தலையீட்டுக்கு இடமளிக்க முடியாது; அடிபணியவும் முடியாது" என்று அவர் மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment