ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா அளித்த வாக்கு, ஒரு 'கணிப்பீட்டு வாக்கு' என்று இந்திய தேசிய பாதுகாப்பு சபையின் இராணுவ ஆலோசகரான ஓய்வுபெற்ற லெப். ஜெனரல் பிரகாஸ் மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு, போர்க்கலைத் துறை மற்றும் தென் பிராந்திய இராணுவ தலைமையகம் சார்பில், '21ம் நூற்றாண்டின் தேசிய பாதுகாப்பில் இந்தியாவின் சவால்கள்' என்ற கருத்தரங்கங்கில் நேற்று பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
லெப்.ஜெனரல் ஜெனரல் சுப்ரட்டோ மித்ரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் லெப். ஜெனரல் பிரகாஸ் உரையாற்றியபோது,
"சிறிலங்கா போரில் வென்றிருந்தாலும், நிச்சயமாக நீண்டகாலநோக்கில் அமைதியை இழந்து வருகிறது என்றே நாம் நம்புகிறோம்.
ஏனென்றால் அவர்கள் போதியளவில் செய்யவில்லை அல்லது அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஜெனிவா தீர்மானத்தின் போது நிச்சயமான எமது குரல் அந்தக் கோணத்திலேயே இருந்தது.
மத்திய அரசாங்கத்தில் கூட்டணிக் கட்சிகள் செல்வாக்குச் செலுத்தியதாக நிச்சயமாக உங்களால் கூறமுடியும்.
ஆனால், முடிவு தேசிய விருப்பங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அளிக்கப்பட்டது ஒரு கணிப்பீட்டு வாக்கு.
சிறிலங்காவில் சீனாவின் தலையீட்டை அதிகரிக்கச் செய்து விட்டதாகவும் இந்தியா அந்நியப்பட்டுள்ளதாகவும் கூறமுடியாது.
எல்லா அண்டை நாடுகளுமே எம்முடன் விளையாடுகின்றன.
நேபாளம் விளையாடுகிறது. பங்களாதேஸ் விளையாடுகிறது. சிறிலங்காவும் விளையாடுகிறது.
ஆனால் சிறிய நாடுகள் அருகிலுள்ள பெரிய நாடுகளுடன இவ்வாறு இணங்கிப் போவது இயற்கை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்காக சிறிலங்காவின் புவியியலை மறந்து விட முடியும் என்று அர்த்தமல்ல.
ஆகவே, நாம் எங்கே நிற்கிறோம் என்று எமக்குத் தெரியும்.
ஜெனிவாவில் அளிக்கப்பட்ட எமது வாக்கு பெறுமதியின் அடிப்படையினலான வாக்கு.
இந்தியாவுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன.
இதற்கு புவியியல் அமைப்பும் ஒரு காரணம்.
நாட்டின் பாதுகாப்புக்கு வலிமையை விட திட்டமிடுதல் முக்கியமானது.
இந்தியா நட்புறவின் மீது நம்பிக்கை கொண்ட நாடு.
இந்த நட்புறவு என்பது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியாவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்திய முறைப்படி இந்தியாவில் தீர்வு காணவேண்டும்.
இந்தியா அணுசக்தி வாய்ந்த நாடு, மற்ற நாடுகள் இந்தியாவை சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு, மற்றும் போர்கலைத் துறைத்தலைவர் கோபால்ஜி மால்வியா உரையாற்றிய போது,
"சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமான பிரச்சினையாகவும், இந்திய அளவில் தேசிய அளவிலான பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறது.
சீனா, இந்தியாவை நேரடியாகவும், இராணுவ ரீதியாகவும் தாக்காது.
அதே நேரத்தில் சிறிலங்காவை ஒரு மறைமுக பொருளாக பயன்படுத்தி பொருளாதார, அரசியல் ரீதியாக தாக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment