ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் தீர்ப்பு எவ்வாறாக அமைந்தாலும் அதற்கு முகம் கொடுத்துச் செயற்பட உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும் நாம் எமது நிகழ்ச்சி நிரலுக்கமய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதாகவும் சுட்டிக்காட்டியது.
ஐ.நா.வினூடாக கண்காணிப்புக் குழு அமைத்து காலக்கெடு விதிக்கப்பட்டாலும் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் அரசு குறிப்பிட்டிருக்கிறது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது பதில் அமைச்சரவைப் பேச்சாளரும் பிரதிப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜெனீவா விவகாரம் தொடர்பாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
எமது நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது. முக்கியமாக அமெரிக்கா ,ஆபிரிக்க நாடுகள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. பெரும்பான்மையான மேற்குலக நாடுகள் அமெரிக்க பக்கமே இருக்கின்றன. தருஸ்மன் ஆணைக்குழுவின் தலைவர் தருஸ்மன், ஐ.நா.மனித உரிமைகள் முன்னாள் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆபர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஜெனீவாவில் முகாமிட்டு அமெரிக்காவுக்கு ஆதரவு திரட்டுவதில் ஈடுபாடுகாட்டி வருகின்றனர். உள்நாட்டிலும் அரசுக்கு எதிரான சக்திகள் அமெரிக்கா வெற்றி பெறுவதையே பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு நாம் ஒன்றை முக்கியமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்கள் இன, மத, மொழி பேதங்களை மறந்து தாய் நாட்டுக்காக ஒன்றுபட்டு குரல் எழுப்பமுன்வந்தனர்.சிலர் குறுகிய மனப்பாங்குடன் செயற்பட்ட போதிலும் பெரும்பான்மையான மக்கள் தாய் நாட்டைப்பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டை கொண்டு உலகிற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம் இனிமேல் மிக அவதானமாக அடுத்த கட்டத்துக்குள் பிரவேசிக்கும் எத்தகைய தடைகள், அழுத்தங்கள் வந்த போதிலும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம். அது பெரும்பான்மை சமூகங்களின் ஒத்துழைப்பு, ஆதரவுடனேயே நடக்கும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் படியே முன்னெடுப்போம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் என்ன நடை முறைகளைப் பின்பற்றினாலும் அதுபற்றி நாம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை . ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு நாம்பதிலளிக்க வேண்டிய காலம், இவ்வருடம் அக்டோபர் மாதமாகும். அதற்கிடையில் எமது பணியை துரிதமாக முன்னெடுத்துச் செல்வோமெனவும் அவர் தெரிவித்தார்.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment