தமிழர் நிலங்களைப் பறிக்கும் சிறிலங்கா இராணுவம்


தமிழர் தாயகத்தில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் அராஜகங்கள் ஓய்ந்தபாடில்லை. முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டிய இராணுவத்தினர், மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் மக்களோடு மக்களாகக் கலந்து பல அட்டூழியங்களைச் செய்து வருகிறது. தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லையென்கிற காரணத்தினால் சிறிலங்காவின் அரச படையினரும், அதன் அடிவருடிகளும் தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில் அடாவடி வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் மற்றும் நிலம் பறிப்பு போன்ற பல குற்றவியல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்களாகவே நடக்கிறது. தட்டிக்கேட்டால் வெள்ளை வானை அனுப்பி கடத்திச் சென்று கொலை செய்யும் நிகழ்வுகள் அன்றாடம் நடக்கிறது. போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு சற்றும் குறையாமல் குற்றவியல் சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.
சிறிலங்கா அரசும் குற்றவாளிகளுக்கு உறுதுணையாகவே இருக்கிறது. “குற்றவியலில் பாண்டித்துவம் பெறவேண்டுமாயின் மகிந்த அரசுடன் இணைய வேண்டும்" என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சமீபத்தில் கூறியிருந்தார். இவருடைய கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை முன்னரிலும் விட தற்போது அதிகரித்துள்ளது. குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவதற்குப் பதில் குற்றவாளிகளைக் காப்பாற்றவே மகிந்த அரசு பிரயத்தனங்களை எடுத்து வருகிறது. 
நீதித்துறையும் மகிந்த அரசின் ஊது குழலாகவே செயற்படுகிறது. போர் முடிந்து விட்டதென்று சிறிலங்கா அரசு ஏறத்தாள மூன்று வருடங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டது. யுத்தம் முடிந்துவிட்டதால் எதற்காக இராணுவத்தை மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தங்க வைத்துள்ளது என்கிற வினா எழும்போது, விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள் சிறிலங்காவின் அரச தலைவர்கள்.
எதற்காக மக்களின் நிலங்களை அபகரிக்கும் வேலைகளைச் சிங்கள அரச படையினர் செய்கிறார்கள் என்று கேட்பதற்கு, பாதுகாப்பு உயர் வலயத்தை பெருக்குவதனால் மட்டுமே படையினருக்கு பாதுகாப்பென்று சொல்கிறார்கள் அரச தரப்பினர். யாரை ஏமாற்ற இப்படியான பொய்களைக் கூறுகிறது சிங்கள அரசு என்று கேட்டால், உலக நாடுகளையும் மற்றும் உலகத் தமிழர்களையும் ஏமாற்றப் போடப்படும் இப் பொய் வேடம் என்பது எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாமல் தெரிந்துவிடும். ஆயிரம் நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற பழமொழிக்கேற்ப, சிங்கள அரசின் பொய்களையும் உலக நாடுகள் வெகு சீக்கிரத்திலேயே அறிந்துவிடும்.
பொதுமக்கள் மீள் குடியேற்றமென்று கூறிவிட்டு இராணுவத்தை புனரமைக்கும் சிறிலங்கா
யாழ் வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி விமானப் படைத்தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வசாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை நிரந்தரத் தடுப்பு வேலிகளை சிங்கள இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். இதனால் வலிகாமம் வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களிலுள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 
நிரந்த தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது “கொங்கிறீட் போட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7,273 குடும்பங்களைச் சேர்ந்த 26,281 பேர் இப்பகுதிகளில் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.
1995-ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த வேளையில் அம் மக்களுடன் இணைந்து, வலி. வடக்கிலிருந்தும் மக்கள் இடம்பெயர்ந்தனர். போர் முடிந்த பின்னர் இந்தப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகளில் மட்டுமே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த வருட இறுதிக்குள் எஞ்சியவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அரச மற்றும் படை அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் 2011 மே மாதத்தின் பின்னர் எவ்வித மீள்குடியமர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டகப்புலம் கட்டுவன் வீதியின் இடையே உள்ள நான்கு கிலோ மீற்றர் தூரமும் இந்த பாதுகாப்பு எல்லை வேலிக்குள் அடங்குவதால் அதன் புனரமைப்பு வேலைகள் கைவிடப்பட்டன.
குறித்த நான்கு கிலோ மீற்றர் வீதியையும் தனியாரின் காணிகளுக்கு ஊடாகப் புதிதாக அமைக்குமாறு படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட துண்டு வீதியைப் புனரமைப்பதைத் தாம் நிறுத்திக் கொண்டு விட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். வலி வடக்குப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றும் மாறாக இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருப்பதாகவும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உப தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் பி.பி.சியின் தமிழோசை வானொலிக்கு சமீபத்தில் கூறியிருந்தார்.
சஜீவன் மேலும் கூறியதாவது, “சுமார் 15 அடி உயரமுள்ள கொங்கிரீட்டிலான தூண்கள் எழுப்பப்பட்டு வரிவரியாக முட் கம்பிகள் அடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு வருகின்றது. வசாவிளானில் இருந்து ஒட்டகப்புலம் வரையிலான இரண்டரை கிலோ மீற்றர் தொலைவிற்கு இத்தகைய வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலி வளலாய் பிரதேசத்தில் இருந்து கீரிமலை வரையும் தொடர்ந்து அமைக்கப்படும்இ" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சஜீவன் தெரிவித்தார். இவ்வாறாக தமிழர் நிலங்களை அபகரிக்கும் வேலைகளை சிறிலங்கா அரசு வேகமாக முன்னெடுத்து வருகிறது. தமிழ் பேசும் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக உலக நாடுகளினால் வழங்கப்படும் நிதியினை சிறிலங்கா அரசு கச்சிதமாக தனது இராணுவத்தைப் பலப்படுத்தவே பாவிக்கிறது. 
யாழ் மாதகல் பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் படையினர் தாம் அங்கிருந்து வெளியேறுவதாயின் கடற்கரையை அண்டியுள்ள விகாரைப் பகுதியை உள்ளடக்கியதாக பொதுமக்கள் காணிகளை தமக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறது. குறித்த பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் பாடசாலை ஆகியவற்றை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை விடுவித்து தமது நிலங்களை மீண்டும் வழங்கவேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
பொதுமக்களின் காணிகளிலிருந்து வெளியேற வேண்டுமாயின், கடற்கரையை அண்டியதாகவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை கடற்படைக்குத் தரவேண்டும், அதற்காக உரிய பணத்தையும் தாம் தந்து விடுகின்றோம் என கடற்படையினர் தெரிவித்ததாக ஒட்டுக்குழவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அப் பகுதி மக்களுடன் பேரம் பேசியுள்ளார். கடற்பகுதியை இராணுவத்தினருக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டால், எதிர்காலத்தில் யாருமே கடலில் இறங்க முடியாத நிலை ஏற்படும். எனவே தம்முடைய நிலங்களை யாருக்கும் கொடுக்க முடியாதென மக்கள் தெரிவித்து விட்டனர்.
இதைப் போன்றே கடற்படையினர் தமக்குத் தருமாறு கோரும் பகுதியில் விகாரையொன்றும், அதனோடு ஒட்டியதாக பழமையானது போன்ற கப்பல்கள், மரச் சிற்பங்கள் போன்றவற்றையும் அமைத்து வருகின்றனர். இதற்காக தினசரி பல நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் சென்று பார்வையிட்டுத் திரும்புகின்றனர். இப்படியாக தமிழர் நிலங்களை கையகப்படுத்தும் வேலைகளை சிங்கள அரசு செய்து வருகிறது. 
அரச படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பல இடங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றும் வேலைகளும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இராணுவத்தின் இருப்பை பாதுகாப்பாக தக்கவைத்துக் கொள்ளவேண்டுமாயின் சிங்கள மக்களை குறிப்பாக இராணுவத்தினரின் குடும்பத்தினரை குறித்த பிரதேசங்களில் குடியமர்த்துவதே புத்திசாலித்தனம் என்கிற நோக்கில் சிங்கள அரசு செயற்படுகிறது. தமிழ் அரசியல் தலைவர்கள் கூட வாய் மூடி மௌனிகளாகவே தொடர்ந்தும் இருக்கிறார்கள். தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.
விநாயகமூர்த்தியின் துணிச்சல் போற்றத்தக்கது
பொது மக்களது காணிகளை ஆக்கிரமித்து, இராணுவத்தினர் அமைத்துவரும் நிரந்தர முள்வேலியை தடுத்து நிறுத்தும் வகையில் நீதிமன்றம் செல்லவுள்ளதாக  தமிழர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி சமீபத்தில் தெரிவித்திருந்தார். குறித்த பகுதிகளுக்குச் சென்று, மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களைப் பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார். இச் சந்திப்பின் பின்னர் தனது கருத்தை இது தொடர்பில் தெரிவிக்கையில், “வலிகாமம் வடக்கில் ஒட்டகபுலம் முதல் வசாவிளான் பகுதியூடாக தெல்லிப்பளை வரையில் இராணுவத்தினர், நிரந்தர வேலிகளைத் துரிதமாக அமைத்து வருகின்றனர். அண்மையில் இப்பகுதியில் ஒரு தொகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட போதும் மக்களது காணிகளை ஊடறுத்து இவ்வேலிகள் இராணுவத்தினரால் அமைக்கப்படுகின்றன."
இவ்வேலிகளை அண்டி மக்கள் செல்ல முடியாதவாறும் மக்கள் வசிக்க முடியாதவாறும் இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, இப்பகுதியில் மக்களின் விவசாய நிலங்களில் ஒரு பகுதியே விடுவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மக்கள் வசிக்கும் பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. குறிப்பாக, 23 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மக்கள் குடியேற்றப்படாமல் அவர்களது இடங்களை ஆக்கிரமித்தே இராணுவத்தினர் இவ்வாறு வேலிகளை அமைக்கின்றனர்.”
இந்நாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்கள் எதுவும் இல்லை. நாட்டில் 98 சதவீதமான மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் ஜ.நாவில் கூறி வருகின்றது. ஆனால் உள்நாட்டில் எதிர்மறைவான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதோடு சட்டரீதியிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக," அவர் தெரிவித்தார்.
தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்று பயந்து ஒதுங்கும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் செயற்பாட்டை நிச்சயமாக அனைவரும் போற்றியே ஆகவேண்டும். நீதிமன்றம் செல்வதனால் தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று தமிழர்கள் கருதக்கூடாது.  கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சிறிலங்காவின் நீதி தேவதையை ஒளித்து வைத்துவிட்டே தமிழர் சம்பந்தமான விடயங்களுக்கு தீர்ப்புகளைக் கூறி வருகிறார்கள் நீதவான்கள்.
நீதித்துறை எப்போது சுயமாக செயற்பட அனுமதிக்கப்படுகிறதோ அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் நீதியினைப் பெற முடியும். அதுவரையில் நீதி கேட்டு வழக்காடுமன்றம் செல்வதென்பது பண விரயமே தவிர வேறு எந்தவித பலனும் கிடைக்கப் போவதில்லை.
மனிதாபிமானமுடைய பிற கட்சிகளையும் இணைத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தே, சிங்கள இராணுவத்தின் அடாவடித்தனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க முடியும். மக்களின் கிளர்ச்சியினாலேயே இராணுவத்தினரைத் தமிழர் பிரதேசங்களில் இருந்து விரட்டியடிக்க முடியும். மக்களின் காணிகளை அபகரிக்க எடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளையும் மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான் தடுத்து நிறுத்த முடியும்.
மக்களின் எழுச்சியைப் பார்த்தாவது உலக நாடுகள் சிறிலங்கா அரசிற்கு மேலும் அரசியல் அழுத்தங்களைக் கொடுப்பார்கள். ஏறத்தாள இரண்டு லட்சம் தமிழ் மக்களைப் பலி கொடுத்தது சிங்கள இராணுவத்திற்கு அடிமைகளாக பணியாற்றவா? இதனை உணர்ந்து மக்களை ஒன்று திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.
தமிழர் நிலங்களைக் கொள்ளையடித்து அவர்களை அவர்களின் தாயகத்திலேயே சிறுபான்மை இனமாக ஆக்குவதற்கு சிங்கள அரசு பல காரியங்களைச் செய்து வருகிறது. தமிழர்களின் பூர்வீகச் சொத்துக்களை அபகரித்து சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இனாமாக வழங்கும் செயற்பாடே தமிழர் நிலம் பறிக்கும் வேலைகள்.
தமிழர்களை மீள் குடியேற்றப் போவதாக கூறி பணங்களைப் பெற்றுக்கொண்டு சிங்கள இராணுவத்தை பலப்படுத்தும் நரித் தந்திர வேலையையே செய்கிறது மகிந்த அரசு. தமிழர் தரப்பினர் வெகுசனப் போராட்டங்களை முன்னெடுப்பதனாலேயே மிஞ்சியுள்ள தமிழர் நிலங்களையாவது காப்பாற்ற முடியும்.
அனலை நிதிஸ் ச. குமாரன் 
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment