ஏன் இந்த இராஜதந்திர சண்டப்பிரசண்டம்?


ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில்  இம்மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் பெரும் இராஜதந்திர சண்டப்பிரசண்டத்தில் இறங்கியிருக்கிறது.
தீர்மானத்தைத் தோற்கடிக்காமல் விட்டால் இலங்கையைப் பொறுத்தவரை சகலதுமே குடிமுழுகிப் போய்விடும் என்ற தோரணையிலேயே அரசாங்கத் தலைவர்கள் உலக நாடுகளின்  ஆதரவைத் தேடி பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியிருப்பதைக்  காணக்கூடியதாக இருக்கின்றது.
அத்தகையதொரு தீர்மானத்தைக் கொண்டுவருவதில் எந்த நோக்கத்திற்காக அமெரிக்கா முன்னணியில் நின்று செயற்படுகிறதென்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்கத் தீர்மானம் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்போவது என்ன?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் இராஜதந்திரிகள் மத்தியில் கடந்த வாரம் அமெரிக்கா விநியோகித்திருக்கும் தீர்மான நகல்வரைவை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2010 மேயில் முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கடந்த வருட இறுதியில் கையளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விதப்புரைகளில்  முக்கியமானவற்றை நடைமுறைப்படுத்துமாறே இலங்கையிடம் கேட்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில்  இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் பொறுப்புடைமையுடன் தொடர்புடைய விவகாரங்களில் நல்லிணக்க ஆணைக்குழு போதிய கவனத்தைச் செலுத்தத் தவறிவிட்டது என்பதை அமெரிக்கா சுட்டிக்காட்டியிருக்கின்ற போதிலும் முனைப்பாகத் தெரிகின்ற விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக சட்ட ரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வாஷிங்டன் கேட்கின்றது. சர்வதேச விசாரணைப் பொறிமுறை எதையும் பற்றி அமெரிக்கா தற்போது வலியுறுத்துவதாக இல்லை. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான செயற்திட்டமொன்றை மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னதாக கையளிக்க வேண்டுமென்றும் அமெரிக்கத் தீர்மானம் கோரவிருக்கிறது. அதைத் தவிர  அரசாங்கம் பூச்சாண்டி காட்டுவதைப் போன்று அதில் எதுவுமே இல்லை.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றைச் சர்வதேச நியமங்களுக்கு இசைவான முறையில் ஏற்படுத்துமாறு போரின் முடிவுக்குப் பின்னரான தருணத்திலிருந்து வலியுறுத்தி வந்திருக்கும் சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகள்இ ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிக்காட்டிவந்தன. தற்போது அந்த நாடுகள் போர்க்குற்றங்கள் பற்றிய பேச்சுக்களை எல்லாம் கைவிட்டு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு மாத்திரமே இலங்கையைக் கேட்கின்றன. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் இலங்கைக்கு இருக்கின்ற பொறுப்புடைமை குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக பான் கீமூன் நிபுணர்குழுவை நியமித்த பிறகுதான் ஜனாதிபதி ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான பதிலிறுப்புச் செயன்முறையாகவே நல்லிணக்க ஆணைக்குழு அமைகிறது என்ற ஒரு தோற்றப்பாடே பொதுவில் காட்டப்பட்டது. ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தானாகவே பிரசன்னமாகி அதை சமர்ப்பிக்கப் போவதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது இடை நடுவில் சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவே அறிக்கையைச் சமர்ப்பித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடந்த இரண்டரை மாதங்களுக்கும் கூடுதலான காலத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை கொண்டிருப்பதாக அரசாங்கம் எந்தவிதமான உருப்படியான சமிக்ஞையையும் காண்பித்திருக்கவில்லை. ஆணைக்குழுவின் விதப்புரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஜனாதிபதியோ அமைச்சர்களோ அறிவிக்கவும் இல்லை.
எதற்கெடுத்தாலும் உள்நாட்டில் வகுக்கப்படக்கூடிய செயன்முறைகளின் மூலமான தீர்வுகள் பற்றியே பல்லவி பாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டுச் செயன்முறையாக அமைந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் தயங்க வேண்டும்? அவற்றை நிராகரிப்பதோ அல்லது கிடப்பில் போடுவதோ ஜனாதிபதியினாலும் அரசாங்கத்தினாலும் உள்நாட்டுக்கு மாத்திரமல்ல சர்வதேச சமூகத்திற்கும் கூட அளிக்கப்பட்ட உறுதி மொழிகளை அலட்சியம் செய்வதாகும். தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய அரசாங்கத்தின் செயற்பாட்டை காண்பதற்கு சர்வதேச சமூகம் போரின் முடிவுக்குப் பிறகு சுமார் 3 வருடங்கள் காத்திருந்து விட்டது. தற்போது மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதைக் கண்டதும் பதறியடித்துக்கொண்டு இராஜதந்திர சண்டப்பிரசண்டத்தில் இறங்கியிருக்கும் அரசாங்கம் ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயன்முறைகளை ஆரம்பிப்பதற்கு வெறுமனே இரண்டரை மாதங்கள் போதுமானவை அல்ல என்று கூறி கால அவகாசத்தைக் கோரி நிற்கின்றது.
இலங்கையில் இதுவரையில் இனநெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவினதோ அல்லது பாராளுமன்றத் தெரிவுக்குழுவினதோ அறிக்கைகளின் விதப்புரைகளை அரசாங்கங்கள்  நடைமுறைப்படுத்துவதற்கு முன்வந்ததாக வரலாறே இல்லை. அதைத் தமிழ் மக்கள் தான் இதுவரையில் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார்கள்.
தற்போது சர்வதேச சமூகம் புரிந்து கொள்வதற்கு ஆரம்பித்திருக்கிறது  என்பதில் சந்தேகமில்லை. இதுதான் அரசாங்கத்திற்கு பெரியதொரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழு அதன் விசாரணைகளை நடத்திக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் 2010 செப்டெம்பர் 13 ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் இடைக்கால அறிக்கை ஒன்றைக் கையளித்திருந்தது. தடுப்புக் காவலில் உள்ளோரின் பிரச்சினைகள்இ காணிஇ சட்டம் ஒழுங்குஇ நிர்வாகம்இ அரச கரும மொழிகள் அமுலாக்கம்இ சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் சம்பந்தமாக அந்த இடைக்கால அறிக்கையின் விதப்புரைகளை ஜனாதிபதியும் அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கென்று இன்னொரு முன்னாள் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழுவின் செயற்பாடுகள் பற்றி பிறகு பெரிதாக எந்தச் சத்தமும் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையில் இடைக்கால அறிக்கையின் விதப்புரைகளின் நடைமுறைப்படுத்தலுக்கு நேர்ந்த கதி குறித்து கவலை வெளியிட்டிருந்தது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒரு அம்சமாகும்.
மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. வின் சகல உறுப்பு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற சர்வதேச மீளாய்வுக் கூட்டத்தொடர் எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கின்றது.அது வரை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறும் மனித உரிமைகள் பேரவையின் 20 ஆவது கூட்டத் தொடர்வரை நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடத்துவதற்கான பயணத்திட்டத்தை வரைவதற்கு கால அவகாசம் தருமாறும் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை வகுத்துவிட முடியுமென்று கூறுகின்ற அரசாங்கத்தினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு  இரண்டரை மாத காலம் ஏன் போதாமல் இருந்தது? காலத்தை இழுத்தடிப்பதில் சாதனை படைத்து வந்திருக்கும் இலங்கையிடம் சர்வதேச சமூகமும் தோல்வி காணப்போகிறது...?
நன்றி - தினக்குரல்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment