தோற்றால் அவர்கள் தப்புவார்கள் வென்றால் இவர்கள் வாழ்வார்கள்


இலங்கை அரசிற்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் வருகின்றதோ இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சனீஸ்வரன் அட்டமத்தில் என்றாகிவிட்டது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனிதவுரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்ததைத் தொடர்ந்து கூட்டமைப்புக்கு காலம் பகைத்துக் கொண்டது. சம்பந்தன் விடுத்த அறிக்கையைக்கூட தமிழ் மக்கள் பெரிதாக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. மூத்த அரசியல்வாதி, அனுபவம் வாய்ந்தவர், தீர ஆராய்ந்துதான் அந்தாள் இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்று தமிழ் மக்கள் நினைத்தது உண்டு. எனினும் கெடுகாலம் எரிகின்ற நெருப்பை தணிப்பதற்கு தண்ணீர் ஊற்றுவதாக நினைத்து மண்ணெண்ணெயை ஊற்றி விட்டார்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்குச் செல்லாததற்கான காரணங்களை கூட்டமைப்பின் எம்.பிகள் கூறியதைப் பார்த்தபோது, கொப்பில் இருந்து மரத்தை வெட்டிய செயல் போன்றே இருந்தது. காரணங்களையாவது பொருத்தமாக-எல்லோரும் ஒருமித்துக் கூறியிருக்கலாம்.

ஆனால் சுமந்திரன் கூறிய காரணம், சம்பந்தர் தெரிவித்த விளக்கம், மாவை சேனாதிராசா சொன்ன கதை; இவற்றையயல்லாம் பார்க்கும் போது கூட்டமைப்பு ஜெனிவாவுக்குப் போகாமல் விட்டதில் உள்நோக்கம் உண்டென்று உணர முடிகின்றது. எதுவாயினும், இலங்கை அரசிற்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தைப் பொறுத்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் தங்கியுள்ளது.

இலங்கை அரசிற்கு எதிராக ஜெனிவா கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அந்தத் தீர்மானம் வெற்றியடையுமாக இருந்தால், கூட்டமைப்பின் அட்டமத்து சனி அகன்று விடும். தீர்மானம் வென்றால் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டே கூட்டமைப்பு ஜெனிவாவிற்கு செல்லாமல் இருந்தது. இதுதான் எங்கள் இராஜதந்திரம். இதனை ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்தன. இப்போது தெரிகிறதா? என்று கூட்டமைப்புக் கேட்டுக்கொள்ளும். மக்களும் அதனை ஏற்றுக் கொள்வர்.

மாறாக, ஜெனிவா தீர்மானம் தோற்றால் கூட்டமைப்பிற்கு அதுவே மாரகத்து சனியாகவும் மாறிக் கொள்ளும். ஆக, இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் வென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தப்பித்துக் கொள்ளும்.அரசு அவமானப்பட்டுப்போகும். மாறாக, தீர்மானம் தோற்றால் அரசு பிழைத்துக் கொள்ளும். கூட்டமைப்பு மேற்றிசைச் கதிரவனாய் மாறிக் கொள்ளும். அவ்வளவுதான்.

நன்றி வலம்புரி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

    http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

    ReplyDelete