சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானமும் அதன் எதிர்வினைகளும்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்மொழியப்பட்டுள்ள இத்தீர்மானம் சிறிலங்கா மீது ஏற்படுத்தும் தாக்கமானது ஒரு குறியீடாக இருக்கும் என சிறிலங்காவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு IPS இணையத்தளத்திற்காக Amantha Perera எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். 

வியாழனன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துமாறு கோரும் முன்மொழிவுக்கான வாக்களிப்பு மேற்கொள்ளப்பட்ட அதேவேளையில், சிறிலங்காத் தலைநகர் பூராகவும் பௌத்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். 

"சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் முன்மொழிவானது அந்நாட்டு அரசாங்கத்தை தூண்டுகின்றது. அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்கப்படுவதானது அந்நாட்டின் மீளிணக்கப்பாட்டை மிகப் பயனுள்ள வகையில் நடாத்திச் செல்ல உறுதுணையாக இருக்கும்" என மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதர் Eileen Chamberlain Donahoe ஜெனீவாவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்தது போன்று, சிறிலங்காத் தலைவர்கள் இம்முன்மொழிவை நிராகரித்துள்ளனர். இம் முன்மொழிவானது நாட்டுக்கு தீங்கிழைப்பதாகவும், தேவையற்ற ஒன்றெனவும், காலத்திற்கு உகந்ததல்ல எனவும், ஜெனீவாவிலுள்ள சிறிலங்கா பிரதிநிதிகளின் தலைவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். "எமக்கு மேலும் கால அவகாசத்தையும், இடைவெளியையும் வழங்கியிருக்கக் கூடாதா?" என அவர் வினவியுள்ளார். 

ஆனால், சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு இரு ஆண்டுகளும் 10 மாதங்களும் ஆகிய நிலையில் தற்போது இம் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கான உரிமைகளை அந்நாட்டு அரசாங்கம் வழங்குவதற்கான காலம் நெருங்கிவிட்டது என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்தனர். 

சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழ்ப் புலிகள் அமைப்புக்கும் இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த யுத்தமானது சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் 2009ல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட போது பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

தற்போது சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான முன்மொழிவுக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகள் ஆதரவாகவும், 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளன. 

"அதிகரித்த அழுத்தங்கள் மற்றும் பலவிதமான நெருக்கடிகள் வழங்கப்பட்ட போதிலும் 15 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்தமையானது சிறிலங்காவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

"இது வரை காலமும் சிறிலங்கா அரசாங்கத்தால் கவனத்திற் கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாகவே, எமது கொள்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதுடன், நாட்டு மக்களின் நலன்களும் கவனத்திற் கொள்ளப்படும். பிற அழுத்தங்களால் இவ்வாறான நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது" எனவும் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, சிறிலங்காவின் அயல்நாடும், சிறிலங்காவின் நட்பு நாடாகவும் விளங்குகின்ற இந்தியாவானது அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளது. 2009ல் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நகர்வுகளை மேற்கொண்ட போது இந்தியாவானது சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மார்ச் 19 அன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். 

"சிறிலங்காவில் உள்ள அனைத்து இனங்களும் மதங்களும் மதிக்கப்படத் தக்கவகையில் அரசியற் தீர்வொன்றை உருவாக்கி நாட்டில் மீளிணக்கப்பாட்டை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் 2009ல் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத் தொடரின் போது தெரிவிக்கப்பட்டதாக இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

"யுத்தத்தின் இறுதி மாதங்களில் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு" சிறிலங்காவை இந்தியா வலியுறுத்தி நின்றது. 

தமிழ் மக்கள் உட்பட சிறிலங்காவில் வாழும் அனைத்து சமூகத்தவர்களுக்கு இடையில் உண்மையான, நேர்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான சில முன் நடவடிக்கைகளையே நாம் பேரவையில் முன்வைத்திருந்தோம்' என இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"இந்தியாவானது சிறிலங்காவின் அயல்நாடாக இருப்பதால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இறுக்கமான நட்பு பேணப்பட்டு வருகின்றது. அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஆத்மார்த்தமான, கலாசார ரீதியான உறவு பேணப்பட்டு வருகிறது" எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்மொழியப்பட்டுள்ள இத்தீர்மானம் சிறிலங்கா மீது ஏற்படுத்தும் தாக்கமானது ஒரு குறியீடாக இருக்கும் என சிறிலங்காவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

"அதாவது சிறிலங்கா அனைத்துலக மனிதஉரிமை நடைமுறைகளுக்கு அமைவாக செயற்படவில்லை என்பதை பெரும்பாலான நாடுகள் வெளிப்படுத்தி நிற்பதே இதன் அடையாளமாகும்" என மனித உரிமை விவகாரத்திலுள்ள முரண்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் ஆய்வு அமைப்பான சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பின் தலைவரான றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

"சிறிலங்கா அரசாங்கமானது கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகச் செயற்பட்டு, பேரவையின் முன்மொழிவின் மூன்றாவது பரிந்துரையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை நிறைவேற்றுவதில் பேரவையுடன் இணைந்து செயற்படுமா அல்லது இல்லையா" என்பதிலேயே சிறிலங்காவின் அடுத்த கட்ட நகர்வு தங்கியுள்ளதாக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

2002 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற உண்மைகளைக் கண்டறிவதற்காக அதிபர் மகிந்த ராஜபக்சவால் 2010ல் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது பரிந்துரைகள் அடங்கிய தனது இறுதி அறிக்கையை கடந்த நவம்பரில் கையளித்திருந்தது. 

ஜெனீவாவில் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு 24 மணிநேரம் முன்பாக சிறிலங்காவின் வடமேற்கில் உள்ள புத்தளத்தில் அதிபர் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட பொது மக்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் "எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" எனத் தெரிவித்திருந்தார். 

"விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த பின்னர், இது இரண்டாவது சோதனைக் களமாக உள்ளது" என மார்ச் 13 அன்று கொழும்பில் நடாத்தப்பட்ட பொதுக் கருத்தரங்கு ஒன்றில் சிறிலங்காவின் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். 

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தமது தலையீடுகளைக் காண்பிக்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து வீரவன்ச ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளார். இவர் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் முன்பு கடந்த 2010 நடுப்பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். அதிபரின் தலையீட்டால் இவ் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. 

சிறிலங்கா மற்றும் ராஜபக்ச அரசாங்கம் என்பன சுயாதீன கோட்பாடுகள் மற்றும் சீனா, ரஸ்யா, இந்தியா போன்ற வல்லரசு நாடுகளின் நிலைப்பாடுகளை வெற்றி கொள்வதற்காக மேற்குலக நாடுகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளதை காரணங் காட்டியே சிறிலங்காவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஐ.நா முன்மொழிவை தமிழ் அரசியற் தலைவர்கள் ஆதரிப்பதற்கு வேறுபட்ட காரணம் உண்டு. சிறிலங்காவின் தமிழர் பிரதேசங்களில் அதிகாரப் பகிர்வை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்பதாலும், இதற்கான தீர்வை அனைத்துலக சமூகம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் இவ்வாறான முன்மொழிவு அவசியமான ஒன்று என தமிழ் சிறுபான்மை மக்களை சிறிலங்கா நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

"தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான தீர்வை எட்டுவதில் சிறிலங்கா அரசாங்கம் எதனையும் உருப்படியாக செய்யவில்லை. அது தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகின்றது. இதனால் இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைக் கோருவதைத் தவிர வேறு தெரிவு எதனையும் கொண்டிருக்கவில்லை" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

"கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்த அரசாங்கம் இவ் ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகளைக் கூட இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆகவே அனைத்துலகின் பங்களிப்பின்றி இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நாம் ஆழமாக நம்புகிறோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

"இவ்வாறான முன்மொழிவின் மூலம் மேற்குலக நாடுகள் சிறிலங்காவில் தமது நிர்வாகத்தை நடாத்த முடியும் எனக் கருதுகின்றனர். அத்துடன் எமது நாட்டில் செல்வாக்குச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் கருவியாகவும் இது உள்ளது" என மார்ச் 19 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட உரையாற்றிய புத்தபிக்குவான வரகொட பிறேமரத்ன தெரிவித்துள்ளார். 

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment