ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடர் அமர்வுகள் இடம்பெற்று வரும் வேளையில் இலங்கை அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது எனலாம். குறிப்பாக அமெரிக்காவின் பிரேரணை தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரிதும் விசனம் அடைந்துள்ளது. அது இலங்கைக்கு எதிரான சதி எனச் சித்திரித்து சென்ற மாதம் 27 ஆம் திகதி கொழும்பிலும் நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருந்தது. அன்று வடக்கு, கிழக்கிலும் குறிப்பாக யுத்த பூமியாக இருந்த வன்னியிலும் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கியிருந்தனர் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ மகிழ்ச்சி தெரிவித்தது பெரியளவில் பிரசாரம் செய்யப்பட்டது. யுத்த காலத்தில் குறிப்பாக இறுதிக் கட்டங்களில் வன்னி மக்கள் சந்தித்த இமாலய அவலங்கள் மற்றும் வரலாறு காணாத உயிர் , உடைமை அழிப்புகளை அடுத்து ஆயிரம் ஆயிரம் பெண்கள் கதறியழுத வண்ணம் நடைப்பிணங்கள் போலுள்ள நிலையில் அத்தகையோரும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர் என்று சொன்னால் அது எவ்வாறு நடந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் அரச ஊழியர்கள் மற்றும் மாணவ சமூகத்தினர் ஆங்காங்கே பலவந்தமாகவே ஈடுபடுத்தப்பட்டனர்.
அரசாங்கத்தின் பகீரதப் பிரயத்தனம்
அடுத்ததாக மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவரும் பெருந் தோட்டத் துறை அமைச்சருமான மகிந்த சமர சிங்க தலைமையில் வெளிநாட்டு அமைச்சர், போராசியர் ஜீ.எல்.பீரிஸ் அடங்கலாக 52 அமைச்சர் பிரதானிகள் ஜெனீவா படை எடுத்தனர். அங்கிருந்து வேறு பல நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக குறிப்பாக அமைச்சர் பீரிஸ் தென்னாபிரிக்கா, உகண்டா போன்ற நாடுகளுக்கு விரைந்தார். இவ்வாறாக அமெரிக்காவின் பிரேரணையைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடுவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்து வருவதைக் காணலாம்.உண்மையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்தச் செய்வதே அமெரிக்காவின் நோக்கம் என அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளராகிய ரோனர் என்பவர் தெரிவித்துள்ளார். அதாவது தற்போது நடவடிக்கைத் திட்டம் எதுவும் இல்லை என்பதைக் கருத்திற் கொண்டே இராஜாங்கத் திணைக்களம் செயற்படுவதாக ரோனர் கூறியுள்ளதைக் காணலாம். உண்மையில் அமெரிக்காவின் பிரேரணையானது பதில் கூறும் கடப்பாடு மற்றும் போர்க் குற்றங்கள் சம்பந்தமாக எதுவுமே உள்ளடக்கப்படாத நிலையில் வலுவற்றதாயிருப்பதால் அது திருத்தப்பட வேண்டும் என குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் நிலைப்பாடு எடுத்திருந்ததாகவும் சில அறிக்கைகள் தெரிவித்தன.
2010 மே மாதம் முன்னாள் சட்ட மா அதிபர் சீ. ஆர்.டி. சில்வா தலைமையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நியமிக்கப்பட்ட போது அதற்கு இட்ட ஆணையும் அதன் நம்பகத் தன்மையும் கேள்விக் குறியாகியிருந்தன. அவ்வாறான ஐயப்பாடுகளை ஆணைக்குழு நிச்சயமாக உள் வாங்கியிருக்கும் எனலாம். அந்த வகையில் அரசாங்கத்தையும் சங்கடங்களுக்கு உட்படுத்தாமல் தமது நம்பகத்தன்மையையும் நிலை நாட்டுவதற்காகவும் சில வரவேற்கத்தக்க பரிந்துரைகளையும் செய்துள்ளது. குறிப்பாகச் சொன்னால் அவை தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவ தரப்பினரது தலையீட்டினை நீக்குவதாகும். அதேவேளை பதில் கூறும் கடப்பாடு மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்களைப் பொறுத்து ஆணைக் குழு நழுவியுள்ளது தெளிவு.
நிற்க, அமெரிக்க பிரதிநிதி மரியா ஒட்டேரோ அமெரிக்காவின் பொது மக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ஆவார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சென்ற வாரம் தோன்றி உரையாற்றுகையில் நல்லிணக்கம் மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு இன்றி சமாதானத்தை வென்றெடுக்க முடியாது என்று முதற்கண் கூறினார். விடுதலைப் புலிகளை அழித் தொழித்தல் என்ற பேரில் தமிழர் சொல்லும் தரமற்ற அழிப்புகளுக்கு ஆளாக்கப்படுவதற்கு அன்று அமெரிக்கா வெகு இலாவகமாகக் கை கொடுத்ததை நோக்குகையில் இது சாத்தான் ஓதும் வேதம் போல் இருக்கிறதல்லவா? மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வரும் பல நாடுகளை மேற்கோள் காட்டி சிரியா தொடர்பாகவும் ஒட்டேரோ விசேடமாகக் குறிப்பிட்டிருந்தார். சிரிய மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒன்று பட்டு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வாரம் அந்த நாட்டின் நிர்வாகம் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை இப் பேரவை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கண்டித்துள்ளனர் என்று அவர் கூறிவைத்தார். உண்மையில் சிரியாவில் இடம்பெறுவதைக் காட்டிலும் அதிகப் பன்மடங்கு துன்ப துயரங்களுக்கு இலங்கையில் குறிப்பாக வன்னி மக்கள் ஆளாக்கப்பட்டது நிதர்சனம்.
ஆக, ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் இடத்து இலங்கை அரசாங்கமானது சீனா,ரஷ்யாவின் ஆதரவை நாடாதிருப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகஸ்தாபனம் ஆகிய மும்மூர்த்திகள் மூலம் தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கே ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அமெரிக்கா சற்று உளைச்சலைக் கொடுக்கிறதே ஒழிய தமிழர் நலன் கருதிய செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது என்பதல்ல.
அமைச்சர் சமர சிங்க உரையின் வீச்சு
மேலும், அமைச்சர் சமர சிங்க தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் 27.02.2012 ஆம் திகதி ஆற்றிய உரையில் இலங்கை அரச தரப்பினர் அடிக்கடி கூறிவருவது போலவே ஐ.நா. மனித உரிமைகள் சபையோ, சர்வதேச சமூகமோ விடுதலைப் புலிகளின் எச்ச சொச்சங்கள் வெளி நாடுகளில் மேற்கொண்டு வரும் பிரசாரங்களை விழுங்கி விடக் கூடாது என்று எச்சரித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் மேற்குறித்த பிரசாரங்களுக்கும் வேறு சில நிர்ப்பந்தங்களுக்கும் குறிப்பாக பல நாடுகளில் வதியும் புலம் பெயர் தமிழரின் வாக்குப் பலத்துக்கும் வளைந்து கொடுத்து வருவதாகவும் சமர சிங்க சாடியுள்ளார். தனித் தமிழ் நாடொன்றினை உருவாக்குவதற்கு அவர்கள் பாடுபடுவதாகவும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிக்குப் பங்கம் விளைவிப்பதற்குக் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என்றும் சமர சிங்க கூறியுள்ளார்.
தமிழர் தரப்பிலான தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு சிங்கள பேரினவாத மேலாதிக்க அடக்கு முறையும் அரச பயங்கரவாதமும் தான் அடிப்படைக் காரணம் என்பதை வெகு நய வஞ்சகமாக மூடி மறைத்து சமர சிங்கவின் வாதம் அமைகிறது. அவர் சொரிந்து விட்ட இன்னொரு முத்து என்ன என்பதையும் பார்த்து விடுவோம். அதாவது இலங்கைக்குப் புத்துயிரளித்துக் கட்டியெழுப்புவதற்காக ஆக்கபூர்வமான பங்குதாரர்களாக முன் வருமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக இப் போராட்டங்கள் மூலம் தமது தாய் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு தமது நேர காலத்தையும் வளங்களையும் பயன்படுத்துவதோடு எல்லா இலங்கை மக்களினதும் சமாதானம், அபிவிருத்தி மற்றும் சுபிட்சத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற் கொண்டு வரும் நேர்மையான முயற்சிக்க மாசு கற்பிக்கும் விதத்தில் செயற்படுவது கவலைக் குரியதாகும் என்று சமர சிங்க கூறியுள்ளார். மாறாக தமிழர் இந்த நாட்டின் அபிவிருத்தியில் சமாதானத்தில் மற்றும் இறைமையில் பங்குதாரர்கள் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ இதய சுத்தியாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதற்கில்லை.
நிற்க , அமைச்சர் சமர சிங்க தனதுரையின் உள்ளடக்கத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளதாக எண்ணுவாராயின் அவருக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்யலாம்? ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு அறிக்கையைத் தூக்கியெறிந்து விட்டு நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையானது காத்திரமானதும் முழுமையானதும் என சமர சிங்க வர்ணித்துள்ளார். ஒரு புறத்தில் ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை, எதிர்வரும் ஒக்டோபர் வரை பொறுத்திருங்கள் என்று அமைச்சர் பீரிஸ் ஏற்கனவே அறிக்கை விடுத்திருக்கிறார். மறு புறத்தில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே உருப்படியான நடவடிக்கைகள் எடுத்துள்ள படியால் அமெரிக்கா முன் வைக்கும் பிரேரணைக் கு அவசியமோ, அவசரமோ இல்லை என்பது சமர சிங்க முன்வைத்துள்ள வாதமாகும். கடந்த 6 வருடங்களாக ராஜபக்ஷ அரசங்கம் நியமித்தா பல்வேறு குழுக்கள் சர்வ கட்சி மாநாடு, நிபுணர் குழு மற்றும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பித்த அறிக்கைகள் யாவும் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்ட வரலாற்றினைப் பார்க்கும் இடத்து ராஜபக்ஷ அரசாங்கத்தின் நேர்மையான முயற்சிகள் என்று சமர சிங்க குறிப்பிடுவது சர்வதேச சமூகத்திற்கு ஏமாற்று வித்தை கற்பிக்கும் நயவஞ்சகத் தந்திரோபாயமாகும். அந்த வகையில் சர்வதேச கண்டனங்கள் என்று வரும் போது அதெல்லாம் நாட்டுக்கு எதிரான சர்வதேச சதி என்று சிங்கள மக்களைத் திசை திருப்புவதற்கு நாட்டுப் பற்று என்றொரு சூழ்ச்சியானது தென்னிலங்கையில் தாராளமாக விதைக்கப்படுகிறது.
சென்ற மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஷ அமைச்சர்கள் விமல் வீர வன்ச மற்றும் சமர்ப்பிக்க ரணவக்க இருவரையும் அலரி மாளிகைக்கு அழைத்து விலைவாசி உயர்வுகள், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்நோக்க வேண்டிய நெருக்கடிகள், உள் நாட்டு எதிர்ப்பு அலைகள் ஆகிய விடயங்களை ஆராய்ந்த பின் நாட்டுப் பற்று என்ற துரும்பைத் தான் விளையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. மக்களை அணி திரட்டி நாட்டுப் பற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான வேலைத் திட்டத்தினை முன்னின்று நடத்துமாறு இரு அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டன. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மேற்கத்தைய நாடுகளின் சதி என்று 2 அமைச்சர்களும் கருத்துத் தெரிவிக்க அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் இணைந்து கொள்ளுமாறு இருவரையும் ஜனாதிபதி வேண்டிக் கொண்டார். வேறு பல அமைச்சர்களும் விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரும் பங்கு பற்றிய பத்திரிகையாளர் மாநாட்டிலேயே மக்களை வீதிக்கு அழைக்க வேண்டும் என்று பகிரங்க அறிக்கை விடுக்கப்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கம் கூறும் நாட்டுப் பற்று எதுவோ அது தான் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணி என்று சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுமளவுக்கு வங்கு ரோத்துத்தனம் மற்றும் கையாலாகாத் தனம் அரசாங்கத்துக்குள் புகுந்து விளையாடுவதைக் காணலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு
19 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் முடி வெடுத்ததாயினும் இறுதி நேரத்தில் அது கை விடப்பட்டது. இதன் காரணமாக ராஜபக்ஷ அரசாங்க தரப்பின் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. மறு புறத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதையும் மூடி மறைத்து விட முடியாது. ஜெனீவாவில் அரச தரப்பினரோடு முட்டி மோதுவதற்கல்லா விட்டாலும் 6 தசாப்தங்கள் வரலாற்று ரீதியாக தமிழர் பிரச்சினைகள் எல்லா அரசாங்கங்களாலும் திட்டமிட்டுப் புறந்தள்ளப்பட்டு வந்தன. அவர்கள் அரசின் அனுசரணையுடன் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் அதன் காரணமாக வெடித்த யுத்தம் கால் நூற்றாண்டு காலமாக ஏற்படுத்திய பாரிய அழிப்புகள், அவலங்கள் யுத்தம் முடிவுற்று 3 வருடங்கள் கழியும் கட்டத்திலும் புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமாகவோ இதய சுத்தியாகவோ அரசாங்கம் நடவடிக்கையில் இறங்குவதை விடுத்து இழுத்தடிப்பு நாடகம் நடத்தி வருகிறது என்பதை துலாம்பரமாகச் சித்திரிப்பதற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமானது தவற விடக் கூடியதல்ல.
நன்றி தினக்குரல்
நன்றி தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment