இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற தலைப்பில் சனல் 4 புதிய நாடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரனின் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்குரூரச்சம்பவமான படுகொலையை இலங்கை இராணுவமா செய்தது? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இவ்வாறு இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்தப்புதிய நாடா, இதில் இடம்பெறும் இக்கோரப் படுகொலை ஆகியவை குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரும், சர்வதேச ஊடக ஆலோசகருமான பந்துல ஜயசேகரவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் தாம் புதிய நாடாவைப் பார்க்கவில்லை எனப் பதிலளித்துள்ளார் என்றும் மேற்படி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து இதழில் வெளியான செய்தி வருமாறு:
2009 மே 18 ஆம் திகதி இடம்பெற்ற இரத்தக்களரிகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார். இதேசமயந்தான் இறுதி ஈழப்போரில் இலங்கையும் வெற்றியீட்டியது. எனவே, இத்தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்தி ரனை இலங்கை இராணுவமா படுகொலை செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சனல் 4 இன் புதிய நாடா இக் கேள்வியை எழுப்பியுள்ளது. இது புதன்கிழமை (நாளை) வெளியிடப்படவுள்ளது. இலங்கைக் கொலைக் களங்கள் நாடா தயாரிப்பாளர் கலும் மெக்ரே தண்டனைக்குட்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் பிரிட்டின் இன்டிபென்டன் நியூஸ் பேப்பரில் இது குறித்து எழுதியுள்ளார்.
இதில் அவர்,12 வயது சிறுவனொருவர் தரையில் கிடக்கின்றார். இடுப்புவரை உடலில் உடை இல்லை. அது உரியப்பட்டுள்ளது. நெஞ்சில் துப்பாக்கி வேட்டுகள் பாய்ந்த ஐந்து துவாரங்கள் உள்ளன. இவரது பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர். இவர் கொடூர போரில் கொல்லப்பட்டுள்ளார்'' என விவரித்துள்ளார்.
இச்சம்பவம் இலங்கைப் படைகளால் நகைக்கத்தக்க இழிந்த மனோநிலையில், விடியோவில் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் போன்றே தெரிகிறது என்றும் கலும் மெக்ரே அதிருப்தி தெரிவித்துள்ளார். சனல் 4 ஏற்கனவே வெளியிட்ட கொலைக்கள நாடாத் தொடரின் முடிவாகவே புதிய நாடா உள்ளது. இதர நாடாக்களிலும் விடுதலைப் புலிகள் படுகொலையுண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.புதிய நாடா குறித்து, குறிப்பாக பாலச்சந்திரனின் படுகொலை சம்பந்தமாக இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளரும், சர்வதேச ஊடக ஆலோசகருமான பந்துல ஜயசேகரவிடம் வினவப்பட்டது. இதற்கு அவர் தாம் புதிய நாடாவில் பார்க்கவில்லையெனப் பதிலளித்தார்.
இதுகுறித்து பந்துல ஜயசேகர தொடர்ந்து விளக்கமளிக்கையில், உலகெங்குமுள்ள எல்.ரி.ரி.ஈயின் வால்கள் சங்கடமான நிலைக்குள் இலங்கையை ஆழ்த்துவதற்கும், அதற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய நாடகங்களை உருவாக்குவதில் முனைப்போடு செயற்படுகின்றன. சனல் 4 இன் முதலாவது நாடாவின் அனைத்து அம்சங்களையும் இலங்கை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றைப் பொய்மையானவை என நிரூபித்துள்ளது என்றார்.
பிள்ளைகள், சிசுக்கள், பெண்கள் ஆகியோரை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொன்று குவித்துள்ளனர். இவை தொடர்பான ஆயிரக்கணக்கான நாடாக்களை எங்களாலும் சமர்ப்பிக்கமுடியும். பிள்ளைகளின் தலைகளை சுவர்களில் மோதி அவர்களைக் குரூரமாகக் கொன்றொழித்தமைக்கான ஆதாரங்கள் எம்மிடமுள்ளன. இலங்கைப் படைகள் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடவில்லை. நாங்கள் மனிதாபிமான செயற்பாடுகளையே மேற்கொண்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.
நன்றி- உதயன்
நன்றி- உதயன்
ஹிந்தியாவே முடிவு செய்.
ReplyDeleteதமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)