ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு,மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்தத் தீர்மானத்தின் நோக்கம் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது அல்ல. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே.
மூன்று வாரங்களுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு நான் வந்த போது கூட, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஒன்றுக்குச் செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயக்கத்துடன் தான் இருந்தது. சிறிலங்கா முழுமையான பயனையும் அடைவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் பிளேக் நிராகரித்துள்ளார்.
ஏற்கனவே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன் 2006, 2009ம் ஆண்டுகளில் சிறிலங்கா அரசு ஒத்துழைத்து செயற்பட்டதாகச் சுட்டிக்காட்டிய பிளேக், ஐ.நாவின் பல சிறப்பு அறிக்கையாளர்கள் அங்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வது சிறிலங்காவுக்கு நன்மை தரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நன்றி புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment