இறுதியான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே இறுதியான சமாதானத்தை அடைய முடியும் என்ற பலமான சமிக்ஞையை அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசுக்கு காண்பித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளினரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட நகர்வு 27 ஆண்டு காலப் போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் தொடர்ந்து செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும்.
இறுதியான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே இறுதியான சமாதானத்தை அடைய முடியும் என்ற பலமான சமிக்ஞையை சிறிலங்காவுக்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா காண்பித்துள்ளது.
அனைத்துலக சமூகம் அதற்கு உதவதயாராக உள்ளது. அடுத்த படிநிலைகள் தெளிவானவை.
நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதுடன் பொறுப்புகூறலுக்குத் தேவையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த இலக்கை அடைவதற்கு உதவுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது.
எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கிறேன்.
சிறிலங்கா அரசுடன் நாம் கொண்டிருந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டு உறவை பகிரப்பட்ட பெறுமானங்கள், மதிப்பு, ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அடிப்படையில் நாம் தொடர்வோம்.
அத்துடன் சிறிலங்காவின் அனைத்து மக்களுடனான எமது பங்குடைமையை நாம் பலப்படுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம்".என்று கூறப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment