உடைந்த மனதுகளுக்குள் உள் நுழைக்கப்படும் விசம்


முள்ளிவாய்க்கால் கொடும்நிகழ்வுக்கு பின்னர் என்ன செய்வது என்பதுவும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரேயே சிங்களப் பேரினவாதிகளாலும், பிராந்திய வல்லாதிக்கத்தாலும் தீர்மானிக்கப்பட்டே, வகுக்கப்பட்டே இருந்தது. ஒரு நூலிழைகூட பிசகாமல் அதனையே அவர்கள் தொடர்ந்தும் தொடுத்து வருகிறார்கள். பெரும்தோல்வி. மிகப்பெரும் பின்னடைவு. யாருமே எதிர்பார்த்திராத ஒரு அழிவு. இவற்றைச் சந்தித்த இனமொன்றின் மக்களின் மனநிலை எப்படி இருக்கும். உடைந்துபோய், சிதறுண்டுபோய், நம்பிக்கை வற்றி, வரண்டுபோய் இருக்கும். இத்தகைய மனதுகளுக்குள் தமது இனத்தின் தோல்விக்கும் பின்னடைவுக்கும் என்ன காரணம் என்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருப்பதும் இயல்புதான்.
விடைகாண முடியாத இந்தக் கேள்விகள் நிறைந்த மனங்களுடனேயே தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் எமது மக்கள் அலைகிறார்கள். இந்த நிலையைதான் சிங்களப் பேரினவாதமும் இந்திய வல்லாதிக்கமும் தமது கருத்துகளை எமது மக்களுக்குள் நுழைப்பதற்கான நுழைவாயிலாக பயன்படுத்துகிறார்கள். இதில் மிகமுக்கியமானது வரலாற்றை மாற்றி எழுத வைப்பது. எல்லாவிதமான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் எதிர்ப்புகளையும் எதிரியானவன் பறித்தெடுக்கலாம். ஆனால் கடந்த மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக நிகழ்த்தப்பட்ட வீரமிகு தியாகங்களினதும், அர்ப்பணிப்புகளினதும், தற்கொடைகளினதும் வரலாற்றை யாராலும் பறித்தெடுக்கவோ மறைத்திடவோ முடியாவே முடியாது.
இத்தகைய உறுதி நிறைந்த போராட்ட வரலாறுதான் இந்த இனத்தின் எஞ்சி இருக்கும் ஒரே எழுச்சி உந்துகை ஆகும். அந்த வரலாற்றினுள்ளும் குழப்பங்களை விதைக்கவும் கறைபூசவும் முயற்சிகள் முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் அடர்த்தியாக பல முனைகளில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வீரமிக்கது என்றும் மேன்மையானது என்றும் நீங்கள் எதை எதை நினைத்தும் போற்றியும் வருகின்றீர்களோ அவற்றை, அந்த மாபெரும் வீரர்களின் எதற்கும் தலைசாய்க்காத துணிவை, உறுதியை பிழை என்றும் அறிவற்றது என்றும் பதிந்துவிட்டால் அதற்கு பிறகு எந்தவிதமான அடிபணிவு கருத்தையும் இலகுவாகச் செலுத்தலாம் என்பதே உண்மை. நீங்கள் வீரம் என்றும் போராட்ட அறம் என்றும் எதை எதை நினைத்தும் போற்றியும் வருகிறீர்களோ அவற்றை அழித்துவிட்டால் வரலாறு முழுதும் வெறுமையாகவும் எதிர்ப்பு உணர்வுகள் அற்றதாகவும் காட்டிவிடலாம் என்பதுதான் ஆதிக்கவாதிகளதும் அவர்களின் கையாட்களதும் நினைப்பாகும்.
தமிழர்கள் போராட்ட அறம்  என்று எதை கருதுகின்றோம். எங்களது அடிமைத்தனத்துக்கு எதிராக எமது மண்ணை, எமது வாழ்வை தமது ஆயுதபலத்தால் ஆக்கிரமித்து நிற்கும் படைகளுக்கு எதிரான எதிர்ப்பையே போராட்ட முறையாக கருதுகின்றோம். இந்த எதிர்ப்பானது ஆயுதப் போராட்டமாக வளர்ந்து சமர்களாகவும், போர்களாகவும், தாக்குதல்களாகவும் மாறியபோது அவற்றின்போது எமது வீரர்கள் காட்டிய அதிகூடிய உறுதிமிக்க வீரமும் அதனூடாக அவர்கள் வெளிப்படுத்தி நின்ற இலட்சிய உறுதியும், இவற்றை வளர்த்தெடுத்து வழிகாட்டிய தலைமையின் நேர்மையும்தான் எமது மக்களால் போரட்ட அறமாகவும் உயர்ந்த போராட்ட முறையாகவும் நினைத்து போற்றப்படுகிறது. போராட்ட வடிவம் மாறிப்போகலாம். அது எதிரியின் பலம், எமது பலம், பலவீனம் இவற்றுக்கூடாக எடுத்துக்கொள்ளப்படும் வழிமுறையாகும். எந்த போராட்டமுறை, அல்லது போராட்டவடிவம் புதிதாக வந்தாலும், புதிதாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அதற்கு முன்னர் முப்பது வருடங்களுக்கு மேலாக நிகழ்த்தப்பட்ட போராட்டப் பாதையில் எமது வீரர்கள், எமது பொடியள், எமது உறவுகள், காட்டிய தியாகமும் அதன் தன்னலமற்ற அர்ப்பணிப்புமுமே எமது மக்களால் முன்னுதாரணமாகக் கொள்ளப்படும்.
அந்த உணர்வும் அந்த நினைப்பும்தான் தொடர்ந்தும் தேசிய இனவிடுதலைக்காக எந்த தளத்திலும் குரல் கொடுக்கும் உணர்வை வழங்கும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலை வலுவாக்கி நிற்கும். அனைத்தையும் இழந்து கொடும் அடக்குமுறைக்குள் வாழும் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே வழிகாட்டி, ஒரே ஒரு பாதை வெளிச்சம் அவர்களுக்காக தன்னலமற்று போராடியவர்களதும் அவர்களின் ஆதாரசக்தியாக திகழும் தலைமை காட்டிய உறுதியும் போராட்டத்தை பதவிகளுக்காக விற்றுவிடாத தன்மையும் நிறைந்த வரலாறுதான்.
விடுதலைக்காகப் போராடும் மக்களது அனைத்து ஆயுதங்களையும் கடைசி அங்குல நிலத்தையும் பறித்தெடுத்தாலும் அவர்களின் போராட்ட உணர்வு மறைந்து போய்விடாது. மாறாக அவர்களின் நெஞ்சுநிறைய சுமந்து கொண்டிருக்கும் விடுதலை வீரர்களின் முகங்களும் அவர்களின் ஈகமும் அவர்களை விட்டு துடைத்தெறியப்பட்டால்தான் விடுதலை உணர்வை மறையச் செய்யலாம். ஒடுக்கிவிடலாம். அதனையும் செய்துமுடித்தால்தான் ஆக்கிரமிப்பாளன் நிம்மதி பெருமூச்சு விட்டு ஒய்யாரமாக ஓய்வெடுக்கலாம். அதுவரை அவனுக்கு ஓய்வில்லை என்பதும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும். உணர்வுகள் என்றாவது எரிசுடராக மாறி பெரு நெருப்பாகவும் எரிமலையாகவும் மாறி விடும் என்பதுவும் நீண்டகாலமாக அடக்குமுறையைச் செலுத்திவரும் அனுபவத்துக்குள்ளாகவும் பிறநாட்டு விடுதலை வரலாறுகளுக்குள்ளாகவும் எதிரி தெரிந்து வைத்திருக்கின்றான்.
எனவே அவன் இறுதிக்கட்ட துடைத்தழிப்பு வேலையாக எமது வரலாற்றை மாற்றி எழுதவும் வரலாறு தரும் தூய்மையான நினைப்புக்குள் விசத்தூசிகளை விசிறவும் எத்தனித்து நடைமுறைப் படுத்துகின்றான். யாரும் நினைப்பதுபோல இத்தகைய விசக்கருத்துகள் எதுவும் நேரடியாக ‘இதோ இதுதான் உங்களை குழப்பப்போகும் கருத்து’ என்று வெளிச்சம்போட்டு வருவதில்லை. எமது உரிமை போராட்டத்தில் அக்கறை கொண்டவர்களின் கருத்துப்போலவும், எமது விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர்களின் கருத்துப்போலவோ, எமது விடுதலைப் போராட்டத்துக்கு புதிய வழிகளைச் சொல்லவரும் ஒரு புத்திசீவியின் கருத்துபோலவோதான் எமக்குள் விதைக்கப்படும். இதற்காகவே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட செய்தியாளர்களும் கருத்தாளர்களும் எமக்குள் இறக்கி விடப்பட்டுள்ளார்கள். மிக நேர்த்தியாக இவர்கள் ஒரு தடத்தில் மாறி மாறி அவநம்பிக்கையும் முரண்பாடுகளையும் விதைக்கின்றார்கள்.

 உதாரணத்துக்கு ஒரு விடயத்தை பார்க்கலாம். தேசியத் தலைவரின் வரலாறு என்ற பெயரில் ஏராளம் புத்தகங்கள் வெளியாகிவிட்டன. விதவிதமான கண்ணோட்டத்தில் அவரவரர்க்கே உரிய அரசியல் பார்வைகளுடன் அவை வெளிவந்து சூடான விற்பனை பொருளாகவும் மாறி இருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களாகச் சென்னையில் ஒவ்வொரு வருடமும் தைமாதம் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அதிகம் ஆவலுடன் வாங்கப்படும் புத்தகங்களாக தலைவரின் வரலாறு சம்பந்தமான நூல்களே விளங்குவதாக செய்திகளும் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. எமது மக்கள் மத்தியிலும்கூட தலைவர் சம்பந்தமான செய்திகளும் சம்பவங்களும் ஆழமான மனஎழுச்சியுடன் வாசிக்கப்படவும் உள்வாங்கப்படவும் செய்யப்படுகின்றது.
அண்மையிலும் அப்படியான ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் மிக நுட்பமாகவும் குரூரமான எண்ணத்துடனும் பல கருத்துகள் பொய்யாக திரித்தும் எழுதப்பட்டு இருந்தன. அதில் ஒரு இடத்தில் ‘பிரபாகரன் அப்போதெல்லாம் கிட்லர் எழுதிய புத்தகம் ஒன்றுடனேயே இருப்பார்’ என்று எழுதி இருப்பதன்மூலம் தலைவரை ஆரம்பத்திலேயே இரத்தவெறியும் பழிவாங்கும் மனப்பாங்கு நிறைந்தவராக இருந்தார் என்று காட்ட முயல்கிறது. ஆனால் தேசியத் தலைவரை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் எவ்வளவு தூரம் அனைத்து இலக்கியங்களையும் நன்கு அறிந்தவராகவும் எல்லா வகையான கலை வெளிப்பாடுகளையும் ஊக்குவித்த ஒரு மனிதராக ஒரு தலைவராக இருந்தார் என்று.
தலைவரே தனது வரலாறாக தனது வாய்வழியாகச் சொல்லும் ‘விடுதலைத் தீப்பொறி’யில் தான் விடுதலை இயக்க வரலாறுகளையும், சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரின் வரலாறுகளையும் முழுஆர்வத்துடன் படித்ததாகச் சொல்லி இருக்கிறார். அத்துடன் தலைவரை பலதடவைகள் நேரில் சந்தித்த சுவீடன் பல்கலைகழக பேராசிரியர் பீற்றர் சால்க் போன்றோர் இன்றும் மிகவும் வியப்புடன் கூறும் விடயம் அவரின் பலவிதமான இலக்கியத் தேடல்தான். மிகச்சிறந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான மகேந்திரன் அவர்கள் போர் நிறுத்த காலத்தில் வன்னிக்குச் சென்று தலைவரைச் சந்தித்த போது உலகத்தின் மிகச்சிறந்தததாக அனைவரும் கருதிக்கொள்ளும் திரைப்படங்கள் பற்றியும் அவற்றின் நுண்மையான கதையோட்டம், வெளிப்பாடு என்பன பற்றி தன்னுடன் பலமணிநேரமாக முழு ஈடுபாட்டுடன் கதைத்தார் என்றும், தனக்கு உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகளை தந்தார் என்றும் எழுதியும் சொல்லியும் இருந்தார்.
இவை எல்லாவற்றையும்விட இந்த விடுதலைப் போராட்டத்தின் வெளிப்பாடாக எமது மக்களுக்குள் வளர்த்தெடுக்கப்பட்ட இலக்கியமும் கலையும் தலைவரின் நேரடி முயற்சியாகவே செய்திருக்கிறார். இவ்வளவு இருக்கும்போதும் தலைவர் ஜேர்மன் சர்வாதிகாரி கிட்லரின் புத்தகத்தை மட்டுமே படித்துகொண்டு இருந்தார் என்று எழுதுவது போன்ற விசக்கருத்துகள் இன்று எங்களின் மனங்களை குறிவைத்து எய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. விடுதலை தேடும் மக்கள் இத்தகைய எழுத்துகளை நிராகரித்து தொடர்ந்தும் தமது பிள்ளைகள், தமது சகோதரங்கள், தமது உறவுகள் செயலில் காட்டிய உறுதியையும் தூய்மையையும் மட்டுமே தமது பாதையின் வெளிச்சமாக கொண்டு முன்னேறுவர் என்பதே உண்மை.

ச.ச.முத்து




Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment