இலங்கைக்கு சர்வதேச ரீதியான நெருக்கடிகள் அதிகரித்து அதன் ஒரு கட்டமாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றை அமெரிக்கா முன்வைத்திருக்கும் நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பு இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் சிலர் இனவாதத்தையும் குரோதங்களையும் தூண்டும் விதமாக தமிழ் மக்களுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துகளை தென்னிலங்கையில் விதைத்து வருகின்றனர். அதிலும் ஒரு பொறுப்பு மிக்க அமைச்சர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எமது இராணுவத்தினரை விசாரணைக்குட்படுத்தினால் இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் வெடிக்குமென பகிரங்கமாகவே எச்சரித்திருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
இனவாத அரசியல் மூலம் சுய இலாபம் தேடும் இவ்வாறான சில அமைச்சர்கள், கட்சிகளின் செயற்பாடுகளினால்தான் எமது நாடு முப்பது வருடகால கோர யுத்தத்திற்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போனதுடன் இன்று சர்வதேச ரீதியில் குற்றவாளி நாடாகவும் பார்க்கப்படுகின்றது. இனவாதம் பேசிப் பேசியே தமிழ் மக்களின் உரிமைகளை இல்லாதொழித்ததன் விளைவை முழு நாடுமே அனுபவித்து தற்போது அதிலிருந்து மீள முயற்சிக்கும் நிலையில் மீண்டும் அப்படியொரு நிலையை ஏற்படுத்தி விட வேண்டுமென்பதில் துடியாய்த் துடிக்கும் இனவாத சிந்தனைகொண்ட அமைச்சர்களுக்கு கடிவாளம் போடாமல் மனம் போன போக்கில் கருத்துகளைக் கூறிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசின் உள்நோக்கம் ஆரோக்கியமானதல்ல.
30 வருடகால யுத்தத்தினால் முழுநாடும் இழப்புகளைச் சந்தித்த போதிலும் தமிழ் மக்களே ஈடு செய்ய முடியாத பேரிழப்புக்களை சந்தித்தனர். சொத்துக்கள், உயிரழிவுகளுடன் தமது எதிர்கால சந்ததியின் பெரும் பகுதியையே அவர்கள் இழந்து இன்று நடை பிணங்களாகவும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயிரக்கணக்கில் சந்தேக நபர்கள் என்ற போர்வையில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மட்டும் 80 ஆயிரம் விதவைகள் கண்ணீருடன் காலம் கடத்துகின்றனர். தமிழ் மக்கள் இவ்வளவு கொடுமைகளையும் சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவிக்க பேரினவாத சக்திகளின் இனவாத அரசியலே காரணம் என்பதனை யாருமே மறுத்துவிடவோ, மறைத்து விடவோ முடியாது.
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கவே தாம் யுத்தத்தை நடத்தியதாக அரசு கூறினாலும் போர் முடிவுக்கு வந்து தற்போது 3 வருடங்களாகின்ற நிலையில் கூட எந்தவித விமோசனத்தையும் கொடுக்க முன்வரவில்லை. மாறாக தமிழ் மக்களை மட்டுமன்றி சர்வதேசத்தையும் ஏமாற்றும் கைங்கரியத்தை முன்னெடுத்ததன் விளைவாகவே இன்று சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை அரசுக்கெதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலும் அமெரிக்காவால் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலைக்குக் காரணம் தமிழ் மக்களே என்ற ரீதியில் இனவாத நச்சுக் கருத்துக்களுடன் புறப்பட்டுள்ள இந்த அமைச்சர்கள் எதைத்தான் சாதித்துவிடத் துடிக்கிறார்களோ தெரியவில்லை.
இனவாத அரசியலால் எமது நாடு இழந்ததே அதிகம். ஆனால், வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுப்பவர்களே இந்த நாட்டின் அரியாசனத்துக்கு வருவது தான் துரதிர்ஷ்டவசமானது. தமிழ் மக்கள் இன்று தமது உரிமைகளுக்குக் கூட குரல்கொடுக்க முடியாத ஊமைகளாக, அரசியல் ஏதிலிகளாக இருந்து வரும் நிலையில் மீண்டும், மீண்டும் அந்த மக்களை பலிக்கடாக்களாக்க இனவாத சக்திகள் முயற்சிப்பதுதான் வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும். எமது நாட்டுக்கெதிராக ஏன் சர்வதேசம் திரண்டு நிற்கின்றது என்பதனைப் புரிந்துகொள்ள முடியாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் இவ்வாறான அமைச்சர்களின் இனவாத விஷமத்தனங்கள் இலங்கையை ஒருபோதுமே சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டிலிருந்து காப்பாற்றிவிடாது என்பதனை இவர்களுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது?
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment