அமைச்சர் பெருமக்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள்


ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் சில அமைச்சர்கள் தான்தோன்றித்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால், வேறு சில அமைச்சர்களோ அந்தப் பேச்சுக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்று மறுநாள் மறுதலிக்கிறார்கள்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச அமெரிக்க பொருட்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று மக்களுக்கு அழைப்புவிடுத்தார். மறுநாள் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்காக செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன அமெரிக்கப் பொருட்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து விமல் வீரவன்ச அமெரிக்கப் பொருட்களை தடை செய்ய வேண்டுமென்று தான் கோரவில்லை. மக்கள் அவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா ஜெனீவாவில் இலங்கைக்கெதிராக செயற்பட்டதை முன்னிட்டு இலங்கையர்களுக்கு இருக்கும் உணர்வை வெளிக்காட்டுவதற்கு எதையாவது செய்ய வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு கூறியதாக மழுப்பல் செய்தார். 
ஜாதிக ஹெல உறுமய தலைவர்களில் ஒருவரும் மின் சக்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கெதிராகக் கடுமையாகப் பேசிவருகிறார். ஜெனீவாவில் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்த செயலுக்கான விளைவுகளுக்கு இந்தியா முகம் கொடுக்க வேண்டியிருக்குமென்று எச்சரிக்கை வேறு செய்கிறார். இந்தியாவுக்கு பொருளாதார விவகாரங்களில் வாய்ப்புகளை இலங்கையில் வழங்கக்கூடாது என்று அரசாங்கத்தை ரணவக்க வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்.  இவரின் இந்த வலியுறுத்தல் கூட அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்று சிரேஷ்ட அமைச்சர்கள் பிறகு சமாளிப்பு வார்த்தைகளைக் கூறுகிறார்கள். 

இது இவ்வாறிருக்க பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் "கலாநிதி' மேர்வின் சில்வா ஜெனீவாவுக்குச் சென்ற இலங்கை ஊடகவியலாளர்களினதும் மனித உரிமைகள் ஆர்வலர்களினதும் கை, கால்களை முறிக்கப் போவதாக பகிரங்கமாக அச்சுறுத்தியிருக்கிறார். மேர்வின் சில்வா இவ்வாறாக பேசுவது ஒன்றும் புதுமையல்ல. ஆனால், அவர் அவ்வாறு பொறுப்பற்ற முறையில் பகிரங்கமாக பேசுவதை அரசாங்க உயர்மட்டத் தலைவர்கள் பொறுத்துக்கொண்டிருப்பது தான் புரிந்துகொள்ள முடியாத விடயமாக உள்ளது. ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக சண்டித்தனம் செய்வதில் பெயரெடுத்தவர் மேர்வின் சில்வா. அவர் செய்கின்ற அடாவடித்தனங்களுக்காக கடவுளின் தண்டனை கிடைக்குமென்று வேறுயாருமல்ல அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன ஒருதடவை கூறியது  வாசகர்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறோம். ஊடகங்களுக்கு எதிரான தனது  அட்டகாசங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வெளிவந்து அரசாங்கத்திற்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டதையடுத்து மேர்வின் சில்வா இனிமேல் ஊடகவியலாளர்களைத் துன்புறுத்தப் போவதில்லையென்றும் அவர்களின் சிறந்த நண்பனாக விளங்கப் போவதாகவும் பகிரங்கமாக ஒரு தடவை அறிவித்தார். 

ஆனால், ஊடகவியலாளர்களின் இந்த சிறந்த நண்பன் கடந்த வாரம் களனித் தொகுதியில் இடம்பெற்ற பகிரங்க வைபவமொன்றில் உரையாற்றுகையில், ஊடகவியலாளர் போத்தல ஜெயந்தவை நாட்டை விட்டு விரட்டியடித்ததே தான் என்று மார்தட்டிப் பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது.  போத்தல ஜெயந்த அங்கோடைப் பகுதியில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வீதியோரத்தில் கிடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். அவர் பிறகு தனது உயிருக்கு இருக்கின்ற ஆபத்தை மனதில் கொண்டு நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்தார் என்று தான் ஊடகவியலாளர் சமூகம் அறிந்து வைத்திருக்கிறது. ஆனால், மேர்வின் சில்வா இப்பொழுது போத்தல ஜெயந்தவை அடித்து விரட்டியதைப் போன்று பேசுவது குறித்து அரசாங்க உயர்மட்டம் என்ன கூறப் போகிறது? நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் தாக்கப் போவதாக மேர்வின் சில்வா விடுத்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார். வன்முறையில் ஈடுபடப் போவதாக எவராவது அறிவித்தால் அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பீரிஸ் கூறியிருந்தார். 

இவ்வாறாக அமைச்சர்களில் சிலர் கண்ணியமற்ற முறையில் தான்தோன்றித்தனமாக பேசும் போது வேறு அமைச்சர்கள் அவற்றை அரசாங்கத்தின் கருத்தல்லவென்று மறுதலிப்பதும் அதேவேளை ஊடகங்கள் இரு தரப்பினரும் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வழமையான நிகழ்வுகள் போன்று தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கையிலே ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்தைத் தணிப்பதற்கு இத்தகைய போக்குகள் ஒருபோதும் உதவப் போவது இல்லை. பொறுப்பற்ற அமைச்சர்கள் எதை எதையெல்லாமோ பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடாமல் கலரிக்கு விளையாட்டுக் காட்டும் கைங்கரியத்தில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் இலங்கைச் சமூகத்தைப் பற்றி வெளியுலகம் எவ்வாறு நினைக்கும் என்பதை ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தினக்குரல்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment