இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்தியா


ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு வழங்க வேண்டுமென்கிற கோரிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகக் காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைத்துத் தமிழகக் கட்சிகளும் ஒருமித்த குரலில் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. சிறிலங்காவுடன் பேணிவரும் நல்லுறவிற்கு எந்தவித பாதகமும் இடம்பெற்றுவிடக் கூடாது என்கிற கோட்பாட்டில் இந்திய நடுவன் அரசு செயற்படுகிறது. 
தமிழகக் கட்சிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள அனுதாபங்களுக்குச் செவிசாய்ப்பதா அல்லது சிறிலங்காவை அரவணைத்துக்கொண்டு தொடர்ந்தும் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் நட்புறவைப் பேணுவதா என்கிற இக்கட்டான நிலையில் இந்திய மத்திய அரசு இருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இந்திரா காந்தி அம்மையார் இறக்கும் வரையில் இந்தியாவின் கொள்கை என்பது தமிழ் நாட்டை அரவணைக்க வேண்டுமேன்பதற்காகவே ஈழத் தமிழர் சார்பிலான கொள்கைகளை இந்திய மத்திய அரசு எடுத்து வந்தது. ராஜீவ் காந்தி பதவியேற்றதும் இந்தியாவின் கொள்கை என்பது சிறிலங்காவிற்கு ஆதரவாகவே தீட்டப்பட்டது. 
ஒரு நாட்டினுடைய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பு என்பது இரண்டு வகையின் அடிப்படையில் அமையும். உள்நாட்டில் நிலவும் கள நிலைமைகளுக்கு ஏற்றவாறு அமையலாம் அல்லது பிற நாடுகளின் கள நிலைமைகளை அறிந்து தனது நாட்டிற்கு எந்தவிதமான பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் இஸ்திரத்தன்மை வந்துவிடக் கூடாதென்பதற்காக அமையலாம். இந்திரா காந்தி அவர்களின் காலப்பகுதிகளில் வெளிநாட்டுக் கள நிலைமைகள் மிக மோசமாக இருந்ததில்லை.
சீனாவின் ஆதிக்கம் இந்தியக் கடற்பிராந்தியத்திற்கு எந்தவிதமான அச்சுறுத்தலாகவும் அமையவில்லை. அக்காலப் பகுதியில் சீனாவின் பொருளாதாரம் என்பது பின்தங்கிய நிலையிலேயே இருந்துள்ளது. ரஷ்ய மற்றும் அமெரிக்க வல்லரசுகளின் போட்டியே அக்கால கட்டத்தில் உச்சத்தில் இருந்தது. இந்தியாவிற்கு எந்தவித அச்சுறுத்தலும் அக்கால கட்டத்தில் இருந்ததில்லை. இந்தியாவிற்கு சிறிலங்கா போன்ற நாடுகளின் ஆதரவு அக்கால கட்டத்தில் தேவைப்பட்டதும் இல்லை.
ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பின்னர் சீனாவும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. இராணுவ மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்குத் தனது பிராந்தியத்தை மீறி பரந்து விரிந்து கிடக்கும் பசிபிக் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியங்களை மையமாகக் கொண்டே சீனாவின் கொள்கைகள் அமைந்தன. ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதிலேயேதான் கண்ணும் கருத்துமாக இருந்தன என்றால் மிகையாகாது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தற்போது சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. சீனாவின் இராணுவ பலம் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவாறு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் சீனாவின் கள நிலைமைகளுக்கு ஏற்றவாறே தமது பிற நாடுகளுடனான குறிப்பாக அண்டை நாடுகளுடனான கொள்கைகளை மாற்ற ஆரம்பித்தன. அந்த வகையில் இந்தியா சிறிலங்காவுடன் வைத்துக்கொண்டுள்ள கொள்கைகள் என்பதும் இதனை மையமாகக் கொண்டதே.
இந்தியாவிற்கு சவால்கள் நிறைந்ததே இக்காலம்
ஏறத்தாள மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாகக் கொலைசெய்யப்பட்ட வேளையில் மறைமுகமாக இந்திய அரசு சிங்கள அரச படைகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது. தமிழகத்தில் இருந்து இது குறித்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியவுடன் தனது செயற்பாட்டை நியாயப்படுத்தியே அறிக்கைகளை விட்டார்கள் இந்திய நடுவன் அரசின் முக்கிய அமைச்சர்கள்.
தாம் ஆயுதங்களைக் கொடுக்காமல்விட்டால் தமது எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு கொடுக்கும் என்று கூறி தமது செயல்களை நியாயப்படுத்தினார்கள் இந்திய மத்திய அரசில் அங்கம் வகித்த தலைவர்கள்.
இந்திய மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கண்துடைப்பு நாடகங்களேயே நடத்தியது. அன்று தி.மு.க. இதயபூர்வமாக அழுத்தம் கொடுத்திருந்தால் இந்திய நடுவன் அரசினால் பல்லாயிரம் தமிழ் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். தமது சொந்த இலாபங்களுக்காகப் பிறரை பலிக்கடா ஆக்குவதே அரசியல் கட்சிகளின் வேலை என்பது தி.மு.காவிற்கு நன்றாகவே பொருந்தும்.
கலைஞர் தொலைக்காட்சியை ஆரம்பிக்கத் தேவைப்பட்ட ஆயுதமே மதுரையில் இடம்பெற்ற தினகரன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல். இதனால் செத்தது அப்பாவிகள். இதனால் இலாபம் அடைந்தது கருணாநிதி குடும்பம்.
இந்தியா உட்பட சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அகலக் காலை சிறிலங்காவில் பதித்துள்ளார்கள். குட்டி நாடான சிறிலங்கா இந்தியாவையும் அரவணைத்துக்கொண்டு இந்தியாவின் எதிரி நாடுகளுடனும் உறவாடுவதென்பது நிச்சயம் மகிந்த ராஜபக்சாவின் தலைமைத்துவத்தை பாராட்டியே ஆகவேண்டும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் இருக்கும் நாடுகளோ தனக்கு சாவு மணி அடிக்க நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார் மகிந்தா. குறித்த இந் நாடுகள் பல துறைகளில் முன்னேற்றம் கண்டவை. அத்துடன் மனித நேயத்தை நிலைநாட்ட தங்களாலேயே முடியும் என்கிற மனப்பாண்பில் செயலாற்றுபவை.
சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைத் தன் வசைப்படுத்த முடிந்த ராஜபக்சாவிற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் நாடுகளை ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டதுதான் மகிந்தாவிற்கு துரதிஸ்டவசமாக அமைந்துள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் வந்த பின்னர் இந்திய மத்திய அரசிற்கு சற்று தலையிடியாகவே அமைந்தது. கச்சதீவை சிறிலங்காவிடமிருந்து மீட்பது, தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்றுவது, ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த மனிதப் பேரவலத்திற்கு நீதியைப் பெற்றுத் தருவதுடன் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் ஈழத் தமிழர்களும் சிங்களவர்களுக்கு நிகரான உரிமைகளைப் பெற்று சுதந்திரத்துடன் வாழ்வது போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகளை தனது அரசு எடுக்கும் என்று கூறினார் ஜெயலலிதா.
கூறியவைகள் எதுவுமே ஜெயலலிதாவினால் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவற்றை கச்சிதமாக செய்து முடிக்க வேண்டிய தருனத்திலேயே ஜெயலலிதா இருக்கிறார். சிறிலங்காவிற்கு ஆதரவான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள் மாறிய பின்னர்தான் சீனா போன்ற நாடுகள் சிறிலங்காவில் காலடி வைத்தன. அதுமட்டுமின்றி இந்தியாவை அண்டிய பல நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் பலமாகவே இருக்கிறது. ஆகவே இந்தியாவின் அயல் நாடுகளில் நிலவும் கள நிலைமைகள் இந்திய நாட்டிற்கு ஏற்றவாறு இல்லை. இந்தியாவின் எதிரி நாடுகளை ஓரம்கட்ட வேண்டுமாயின் அயல் நாடுகளுடன் இந்தியா கடும் போக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் கண்டங்களின் நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவளித்து இந்தியாவின் கூட்டாட்சிக்கு மதிப்பளித்து தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று அன்று இந்திரா காந்தி அம்மையார் எதனைச் செய்தாரோ அதனையே மன்மோகன் சிங்க் தலைமையிலான இந்திய நடுவன் அரசு செய்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கே நன்மையாக அமையும்.
சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம் என்பதற்கிணங்க இந்திய ஒருமைப்பாடு நீடிக்க வேண்டுமாயின்இ மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தியாவின் அயல்நாடுகள் குறித்த கொள்கைகளை வகுப்பதே நன்மை அளிக்கும்.  சிறிலங்காவிற்கு எதிராக கடினமான கொள்கைகளை வகுத்து, தமிழக மாநில மக்களின் மனங்களை வெல்வதே இந்திய கூட்டாட்சியின் ஒற்றுமைக்கு சிறப்பாக அமையும்.
முன் எப்போதும் இல்லாதவாறு குரல்கொடுக்கும் தமிழகம்
தமிழகத்தை அரவணைத்து சிறிலங்காவுடனான கொள்கைகளை வகுக்கும் காலம் இந்திய நடுவன் அரசிற்கு வந்துள்ளது. இதனைச் செய்யாது இந்தியா செயற்பட்டால் இந்தியாவின் நலனுக்கே கெடுதல் வந்துவிடும் என்று கூறுகிறார்கள் அரசியல் அவதானிகள். தமிழக காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கட்சி வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஈழத் தமிழருக்கு ஆதரவான ஒருமித்த குரல்களை கொடுக்கிறார்கள்.
ஜெயலலிதா இரண்டு கடிதங்களை மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ளார்.  கருணாநிதி உட்பட தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், இது தொடர்பாக மத்திய அரசிற்கு கடிதங்களை அனுப்பியுள்ளதுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகத்தில் மீண்டும் ஈழத்தமிழர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு சில தமிழக காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி ஆகியோரும், குமரி அனந்தன் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர். அவைகள் அனைத்தும் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசிற்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்துள்ளது.
நாடுகளின் மீதான தனிப்பட்ட தீர்மானங்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கான வாய்ப்பை அருகச் செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சமீபத்தில் இந்தியா கருத்து வெளியிட்டது. இதற்கு பின்னர் தமிழகமே கொதிப்படைந்துள்ளது என்றால் மிகையாகாது.
சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி சமீபத்தில் நியூடெல்லி திரும்பிய கையோடு பிரதமர் மன்மோகன் சிங்கை அவசரமாக அழைத்து சிறிலங்கா விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.  சிங்கள அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அது தொடர்பில் தமிழக மற்றும் உலகநாடுகளில் வதியும் தமிழர்களின் எதிர்ப்பலைகள், சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஆகியவற்றை எப்படி சமாளிப்பது என்பதே இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டன என்று அத் தகவல் கூறுகிறது.
இந்திய மத்திய அரச அதிகாரிகள் மட்டத்திலும் திரை மறைவில் பல கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் சிறிலங்கா விடயம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய வேண்டுமென்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இப்படியாக பல நிகழ்வுகள் இந்தியாவில் இடம்பெற்று வருகின்றன.
ஜெயலலிதா இரு கடிதங்களை மன்மோகன் சிங்கிற்கு சமீபத்தில் அனுப்பினார்.  ஒரு கடிதம் அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென்றும், அடுத்த கடிதம்  சிறிலங்காவைச் சேர்ந்த அரச அதிகாரிகளோ, இராணுவ அதிகாரிகளோ அல்லது வேறு பிரமுகர்களோ மாநில அரசிற்கு தகவல் கொடுக்காமல் வந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது என ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்தார்.
அவரின் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையிலிருந்து பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை இந்திய மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. இலங்கைத் தமிழர்கள் அங்கு கண்ணியமான முறையில் வாழ இலங்கை அரசு வழி செய்யவில்லை என்கிற பொதுவான புரிதல் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்களிடையே இருக்கிறது.  சிங்கள மக்களுக்கு இணையான தகுதியை இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு அங்குள்ள அரசு வழங்கவில்லை என்று தமிழகத்திலுள்ள தமிழர்கள் வருந்துவதாகவும்" அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் மனநிலை அவ்வாறான நிலையில் இருக்கும் போது, சிறிலங்காவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தனிப்பட்ட முறையில் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதாகவும் கூறியுள்ள ஜெயலலிதா, மகிந்த ராஜபக்சாவின்  உறவினர் திருக்குமரன் நடேசன் அண்மையில் இராமேஸ்வரம் வந்தபோது சிலரால் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அவரது வருகை குறித்து இந்திய அரசிடமிருந்தோ, சிறிலங்கா அரசிடமிருந்தோ எவ்விதமான தகவலும் இல்லாத நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார். 
மேலும் அந்தச் சம்பவம் தொடர்பாக தென்னிந்தியாவிற்கான சிறிலங்காவின் துணைத் தூதரும், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலரும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதங்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் நியாயமற்றது, தேவையற்றது எனவும் அவை ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தனது கடிதத்தில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவா மாநாட்டில் சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென தி.மு.கவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மன்மோகன் சிங்கிடம் கேட்டுள்ளார். தி.மு.கவின் தலைவரும் இந்திய நடுவன் அரசிடம் சமீபத்தில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் முன் நிறுத்தப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்படும் வரை சிறிலங்காவிற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை எல்லாம் இந்திய மத்திய அரசு உதாசீனப்படுத்தியது. இதன் காரணமாகவே ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், யுத்தத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் முள்வேளி கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்."
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என பல்லாயிரம் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் விசாரிக்க அமைக்கப்பட்ட அனைத்துலக அளவிலான மனிதஉரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் எல்லாம் முடக்கப்பட்டன. சிறிலங்காவில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநீதிகளை இந்திய அரசு தட்டிக்கேட்க வேண்டும். ஆனால் மத்திய அரசு மௌனம் சாதித்து வருகின்றது. அந்த மௌனம் கலைக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் டி. ராஜா. தமிழகப் பத்திரிகைகளும் தமது ஆசிரியர் தலையங்கங்களில் சிறிலங்காவிற்கு எதிராக இந்தியா செயற்பட வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.
அமெரிக்க அரசு சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரும் பிரேரணைக்கு ஆதரவாக பல நாடுகள் ஆதரவளித்துவரும் இந்நிலையில் இந்தியாவின் ஆதரவு ஈழத்தமிழர் சார்பில் அமைவதே தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு மதிப்பளிப்பதாக அமையும். தம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பிறருக்கு ஆதரவளிப்பதென்பது நகைப்புக்கிடமானது. இந்தியாவிற்கே அது பாதகமாக அமைந்துவிடும். மாநிலக் கூட்டாச்சியை இந்திய நடுவன் அரசு மதிக்கிறதென்றால் நிச்சயம் ஏழு கோடித் தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை செவிமடுத்து சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி சிறிலங்காவுடன் தற்போது வைத்திருக்கும் வெளிநாட்டுக் கொள்கையில் இந்திய அரசு மாற்றம் செய்வதே இந்தியக் கூட்டாட்சிக்கு நன்மையாக அமையும்.
அனலை நிதிஸ் ச. குமாரன் nithiskumaaran@yahoo.com
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment