ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய யூனியனின் ஆதரவுடன் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்மானத்தை இலங்கையினால் வெற்றி கொள்ள முடிந்ததா? விலகிக்கொள்ள முடிந்ததா? என்பதை எம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
தொழில் நுணுக்க ரீதியாக நோக்குகையில் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்பதாக எதுவும் நடக்கலாம் என்பது உண்மை. உதாரணமாக வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்பு தீர்மானத்தை வாபஸ்பெறலாம்.என்று அனுமானத்தினடிப்படையில் தெரிவிக்கலாம். அல்லது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு வெற்றி தோல்வி நிர்ணயமாகலாம். இலங்கைத் தூதுக்குழுவினரும் தங்களாலான இறுதிக்கட்ட முயற்சிகளில் இறங்கி பணியாற்றுகின்றனர். தீர்மானதாரர்களும் முழுமூச்சாக ஈடுபட்ட வண்ணமுள்ளனர்.
சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மான வாசகங்களின் அடிப்படையிலேயே திருத்தங்களோ கடினத்தன்மை குறைப்புகளோ இன்றி வாக்கெடுப்புக்காக விடப்படலாம் என்று கூறும் அவதானிகள் முடிவு ஏதோ ஒரு பக்கத்துக்காகலாம் என்பதை யதார்த்தம் என்கின்றனர்.முன்ஜாக்கிரதை கடமைப்பாடு எத்தகைய நடவடிக்கைகளுக்கும் அதிகாரப்பலம் பொருந்திய சக்திகள் தயாராக உள்ளனர் என்பதை முன்ஜாக்கிரதையாகக் கொள்ளலாம்.
வாக்களிப்பில் அனுசரணையாளர்கள் வெற்றிபெற்றால் கண்டிப்பான கவலைக்கு இடமுண்டு. ஜெயம்பெற்ற ஆர்ப்பரிப்புகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் எத்தகைய காரணங்களும் இல்லை. அத்தகைய வெற்றி பிறருக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமைப்பாட்டுக்குள்ளாகிறது. தற்சமயம் கோரிக்கை வடிவிலுள்ள பொதுக்கூறல் கட்டாயம் என்ற நிலையை அடைந்துவிடும். இலங்கை அரசாங்கத்துக்கு விருப்பமில்லாத சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பிலும் நிறைவேற்றுக்கடப்பாட்டுகையை வெளிப்படுத்தவேண்டியிருக்கும். அடிப்படையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளையும் பரிந்துரைகளையும் முழுமையாக நிறைவேற்றிக்காட்ட வேண்டிய தேவைப்பாடு கட்டாயமாகிறது.
அனுசரணையாளர்களின் வெற்றிவாகை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கான உறுதிமொழி என்ற வகையில் செயல்படு நோக்க அறிக்கையாக கருதப்படவேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கவேண்டிய உட்கருத்து இருக்கவில்லை எனக்கூற முடியாது. வெளியார் பாராட்டுகின்றளவுக்கு விரைவுத்தன்மை காணப்படாவிடினும் சிபாரிசுகளை அமுலாக்குவதற்கான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவே அறிவிக்கப்படுகிறது. அரசாங்கம் பேரவை வாக்களிப்பில் வெற்றி பெற்றாலும் பரிந்துரைகளை தட்டிக்கழிக்கமுடியாது.
நிர்ப்பந்தம் அழுத்தம் இன்றி பரிந்துரைகளை படிப்படியாக நிறைவேற்றக்கூடிய வாய்ப்பை அரசாங்கத்துக்கு வழங்கும் வஞ்சம் வழுவல்கள் இலேசாக தோன்றுவதற்கு இடங்கொடாமல் பணிகளைச் செய்யவேண்டியிருக்கும். அதேவேளையில் தற்சமயம் உண்மையை திரித்துக்கூறுகின்ற நடவடிக்கைகளே ஜெனீவாவில் நடந்து கொண்டிருப்பதாக பெரும்பான்மை மக்கள் அபிப்பிராயப்படுகின்னர். ஒரு பெரிய அரக்கனோடு போட்டியிட ஒரு சிறிய நாடு வளங்களை செலவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் இலங்கைக்கு பேரவையில் கிடைக்கக்கூடிய வெற்றியும் தோல்வியும் சவாலும் சஞ்சலமும் நிறைந்ததே என்பதை கூறாமலிருக்க முடியாது.
நோக்கம் குறைபாடு
விரிவான முறையில் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த தூதுக்குழுக்களுடன் கலந்துரையாடியும் முதல் வரைவுக்கு பல உதவியாக அமையக்கூடிய ஆலோசனைகளை கூட்டிணைத்துமே ஒரு நடுநிலையான நியாயமான சமநிலைப்படுத்தப்பட்ட பிரேரணையை கருத்துப் பரிமாற்றத்துக்காகவும் பேரவையிலுள்ள எமது பலபங்குதாரர்களின் ஒத்துழைப்புக்காகவும் அறிமுகப்படுத்தியுள்ளோம் என சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர்.அந்த வகையில் இலங்கை அரசாங்கத்துடன் இந்த தீர்மானமூடாக நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பில் விரிவான முறையில் ஒத்துழைக்க விரும்புகிறோம் .
ஒத்துழைத்துச் செயல்படவேண்டும் என்ற எமது நீண்ட கால விருப்பத்தை மீள வலியுறுத்துகிறோம். இந்தத் தீர்மானம் கண்டிப்பதையோ வஞ்சிப்பதையோ நோக்கமாகக் கொண்டதல்ல.இலங்கை அரசாங்கத்துக்கு உறுதிப்பாடான பரிந்துரைகளை வழங்கிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பங்களிப்புகளை இந்தத் தீர்மானம் நிஜமாகவே ஒத்துக்கொள்வதாக கூறப்பட்டது.
எவ்வாறாயினும் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு நோக்கர்கள் இலங்கை அரசாங்கம் இதுவரையில் அத்தகைய பரிந்துரைகளை அமுலாக்கம் செய்வதற்கான வேலைத்திட்டத்தை பிரகடனப்படுத்தவில்லை.தேவையான மேலதிக செயல்பாடுகளை யுத்தம் முடிவடைந்ததில் இருந்து எடுக்க முன்வரவில்லை என்றெல்லாம் கூறுகின்றனராம்.
அக்கறை நிஜம்
நேர்மையான முறையில் தமிழ் மக்களை சென்றடையக் கூடியதும் அவர்களை இலங்கையின் தேசிய வாழ்க்கைக்குள் மீளக் கொண்டுவரக்கூடியதும் யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக பொறுப்புக்கூறலை நிச்சயப்படுத்துவதற்குமாக அர்த்தமுள்ள நீடித்து நிற்கக்கூடிய தேசிய நல்லிணக்கத்தை கண்டடையும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஒன்றிணையுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுப்பது எமது அக்கறையாகும் என்று அமெரிக்கா கூறிற்று.
காலம் கடந்து செல்வதால் இலங்கை மக்களுக்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து தீவுக்குள் நீடித்த சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட விரும்புகிறோம். தற்போதைய சர்வதேச சமூகத்தின் அக்கறையை பேரவை பிரதிபலித்துக் காட்டுவதாகவும் செயல்பாட்டுக்கான ஆதரவு இருப்பதாகவும் நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த அடிப்படையில் நீடித்த நிலையான அமைதியை ஏற்படுத்தக்கூடிய உள்ளக முறைமைகளை இலங்கை அரசு ஏற்படுத்தவேண்டும் என்ற எமது அக்கறை பல்தரப்பட்ட சர்வதேச நோக்கர்களால் பிரதிபலிக்கச் செய்யப்பட்டுள்ளது. சகல மக்களுக்கும் உலகிலுள்ள நாடுகள் ஒத்துழைப்புக்கரங்களை நீட்டலாம்.
பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்காக இறுதியாக எடுக்கப்படும் வரை திருத்தப்பட இடமுண்டு எனக்கூறும் அமெரிக்கா, குறித்த தீர்மானத்தை முன்வைக்க எடுத்த முடிவு அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் கவனமான கலந்தாலோசனை, கருத்துப் பரிமாற்றம் பரஸ்பரம் விரிவான இருபக்க ஈடுபாடு, பரிசீலனையின் பின்னரேயாகும். அந்த வகையில் ஒரு நடுநிலையான நியாயமான சமநிலை மிக்க தீர்மானத்தின் மூலப் பகுதியை சபையில் முன்வைத்துள்ளதாக கூறும் அமெரிக்கா தமிழ் சிவில் சமூகம் அரச சார்பற்ற நிறுவனங்கள் அத்துடன் சில நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்தின் கடினத்தன்மை குறைக்கப்பட்ட வாசகங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட போதிலும் அமெரிக்கா மற்றும் கூட்டு அனுசரணையாளர்களில் பேரவையின் அமர்வுகள் முடிவுவரை உத்தேச தீர்மானத்தின் மொழி வடிவம் தொடர்பில் மேலும் கருத்துப்பரிமாற விருப்பம் கொண்டுள்ளதை அமெரிக்கா தெரிவித்தது. அதேநேரம் குறித்த தீர்மானம் தனித்த நாடுகள் என்றெல்லாம் பல்வேறு பிராந்தியங்களால் ஆதரவளிக்கப்பட்ட ஒரு பிரேரணையாக இறுதிக்கட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அமைப்பில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் உத்தேச வரைவு தற்போதைய அமைப்பில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னேற்றும் நோக்கத்தை முறையாக வெளிக்கொணரவில்லை என ஜெனீவாவிலுள்ள ராஜதந்திர சமூகம் அபிப்பிராயப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியக் கோரிக்கைகவலை
நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற தருணத்தே ஜெனீவா மனிதஉரிமைகள் பேரவையும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டதாகவே அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தனது இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் 100 பேர் வரை இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த அனுப்பப்பட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இப்படியான ஒரு சூழ்நிலையில் இந்தியா ஒரு கட்டத்தில் ஒரு நாடுபற்றிய தனித்த தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதில்லை எனக் கூறியது. திருத்தப்பட்ட நகல் வரைவின் மூன்றாவது பந்தியை வாபஸ் பெறவேண்டுமென இந்தியா கோருகின்றதாம். அந்த வாசகங்களே இலங்கையின் விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையீடு செய்ய வாய்ப்பேற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
உண்மையிலேயே இலங்கையில் தலையீடுகளை ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகத்துக்கு முதல்படியாக அமையும் என சம்பந்தப்பட்ட மூன்றாவது பந்தியை கருதி கவலை கொள்வதாக இலங்கை அரசாங்கமும் கூறுகிறது. அந்த வாசகங்களை சுருக்கமாக நோக்கின் மனிதஉரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் ஆலோசனை தொழில்நுணுக்க உதவி போன்றவற்றை இலங்கை ஏற்றுக் கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இதனையே இந்தியா இலங்கையில் வெளிச்சக்திகள் தலையீடு செய்ய வழியேற்படும் எனக்கூறுகிறது.
ஆதரவு தக்கவைப்பு
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் அபிப்பிராயப்படி மனிதஉரிமைகள் ஸ்தானிகராலயத்தின் ஆலோசனை தொழில் நுணுக்க உதவி என்பதற்குப் பதிலாக ஆதரவு என மாற்றப்படவேண்டும் என்று கூறப்படுகிறது. இக் குறித்த மூன்றாவது பந்தியை வாபஸ் பெறவேண்டும் என அமெரிக்காவை இந்தியா கோரியபோது இலங்கை அரசாங்கம் அதனை பேரவையில் தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியா ஆதரவு காண்பிப்பதாக பொருள்படுத்தியது. எவ்வாறாயினும் அமெரிக்கா இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்காமல் தீர்மானத்தில் இருந்தபடியாக ஆலோசனை, தொழில்நுணுக்க உதவியை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாசகத்தை தக்க வைத்துக் கொண்டதாம்.
பரீட்சைஅறைகூவல்
இத்தனை காலமும் பொறுமை காத்துவந்த ஜனாதிபதி தனது அரசாங்கம் அவமானப்படக்கூடாது என்பதற்காக நேரடியாகவே ராஜதந்திர தாக்குதலுக்கு தயாராகிவிட்டார் போலும். ஜனாதிபதியின் நிர்வாகத்துக்கு சர்வதேச கட்டமைப்பில் அதன் நிலைமைகளை தீர்மானம் செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்தில் வெளிநாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை அளவீடு செய்வதற்கும் ஒரு பரீட்சை போன்றதாகும்.2005இல் ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து சீனா,ஈரான். போன்ற புதிய தோழமை நாடுகளுடன் கைகோர்த்து செயல்பட முனைகையில் மேற்குலக நாடுகளிலிருந்து இலங்கை தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டது. எத்தகைய நிலைகள் தோன்றினாலும் அதனை எதிர்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருக்கவேண்டும் என ஜனாதிபதி அறைகூவல் விடுத்துள்ளதை அறிந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்கத் தீர்மானத்தை முன்னெடுக்கவிடாமல் தடுத்துவிடுவதற்கான வாய்ப்பு அரைக்கு அரைவாசியாக இருக்கிறது என்று அமைச்சர் பீரிஸ் அமைச்சரவையில் அபிப்பிராயம் கூறியபோது அசாதாரண மனோநிலையில் இருந்த ஜனாதிபதி நடப்பது நடக்கட்டும் நாம் எதிர்கொள்வோம் துரோகமிழைக்க நான் தயாரில்லை என அமைச்சர்களுக்கு கூறினாராம்.
அவமானப்படுத்தல் நிராகரிப்பு
செவியேற்றம் செய்தமை போதாக்குறைக்கு காணொளிகளைக் காண்பிக்கும் களமாக மாறியுள்ளது. மனித உரிமைகள் பேரவை. ஏற்கனவே காணொளி தயாரித்து பெரும் சர்ச்சைகளை தோற்றுவிப்பதற்கு ஏதுவாக அமைந்த அதே சனல் 4 தெலைக்காட்சி தயாரித்த இரண்டாம் பாகம் சபைக்கு வந்துள்ளமை சமகாலத்துக்கு சச்சரவையும் சஞ்சலத்தையும் உண்டு பண்ணிவிட்ட விவகாரமாக இலங்கையைப் பொறுத்தவரை அமைந்துவிட்டது.இதனை ஆதாரமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் என்று பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துவிட்டது. ஜெனீவாவில் இலங்கையை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. குறித்த ஒளிநாடா நிரூபிக்கத்தக்க ஆதாரபூர்வமான சான்றுகளின்றி ஆயிரக்கணக்கான உயிர்கள் படிப்படியாக காவுகொள்ளப்பட்டதாக சர்வதேச சமூகத்திற்கு காண்பிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளதாம்.
மறுதலிப்பு
சனல் 4 தொலைக்காட்சிக்கு சம்பந்தப்பட்ட ஒளிநாடாவை அல்லது தகவலை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் ஒப்படைத்து பின்னர் மனிதஉரிமை மீறலுக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தது. மாறாக வெறுமனே எண்பிக்க முடியாத தகவலை காணொளியாக்கியுள்ளதாக குற்றம் பிடிக்கப்படுகிறது. முதலாவது ஒளிநாடா தொடர்பில் காணொளியாக வந்ததை மறுதலித்து உண்மையான விபரத்தை உள்நாட்டில் சர்வதேச ரீதியிலும் பொதுசனத்தின் பார்வைக்காக ஆவணப்படமாக்கியதை சுட்டிக்காட்டும் பாதுகாப்பு அமைச்சு சமகால காணொளி தொடர்பாக சகல குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக கூறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் புலிகளே மொத்தமாக மனித உரிமை மீறல்களைப் புரிந்ததை வலிதான சான்றுகளுடன் நிரூபிக்க முடியும் என சுட்டிக்காட்டும் அதிகார பூர்வ தரப்பு தற்போதைய இரண்டாவது காணொளிக்கு பதிலடியாக இலங்கையில் எழுச்சிபெறும் ஆச்சரியம் என்ற ஆவணப்படத்தை தயாரித்திருப்பதாகவும் அதனோடு இணைந்ததாக சனல் 4 இன் காட்சிகளை பொய்யென நிரூபிக்கும் அறிக்கையிடல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
பொறுப்புக்கூறல்அமுலாக்கம்
இலங்கை அரசாங்கம் கடந்த காலத் தவறுகளுக்கு பொறுக்கூறவேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்கவேண்டும் என்றெல்லாம் அடித்துக் கூறிக்கொண்டிருப்பது கண்டு இலங்கை மக்கள் பலர் ஆச்சரியப்படாமலிருக்க முடியாது. அரசாங்கமும் பரிந்துரைகளை அமுலாக்குவது பற்றியும் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பற்றியும் கூறிக்கொண்டுதானே இருக்கிறது. விசாரணைகள் முற்றுப்பெற்று கோவை மூடப்பட்ட விடயங்களைக்கூட கோவைகளை மீளத்திறந்து விசாரணையை ஆரம்பிக்கும் விருப்பத்தைக் கூட வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவோ தான் முன்வைத்துள்ள பிரேரணையிலும் பேரவையிலும் பொறுப்புக்கூறவில்லை என்றே பேசிக்கொண்டிருப்பதையிட்டு அங்கலாய்த்துக்கொள்வோரும் உள்ளனர்.
உண்மையிலேயே பொறுப்பேற்றல் என்பது ஒரு விடயத்தைச் செய்துவிட்டு உரிமை கோருவதை சுட்டிக்காட்டலாம். ஒரு கொலையை அல்லது கொள்ளையை செய்துவிட்டு ஒரு நபர் அல்லது ஸ்தாபனம் தாங்களே செய்தோம் என பொறுப்பேற்றுக்கொள்வதை கூறலாம். பொறுப்புக்கூறலின் முதல்படியே பொறுப்பேற்றல் எனத் தெரிவிக்க முடியும். அந்த வகையில் அமெரிக்கா எதிர்பார்க்கும் பொறுப்புக்கூறலை அலசிப்பார்க்கையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது என்றால் ஏன் நடக்கவேண்டும் எதற்காக நடக்கவேண்டும் .
உத்தரவிட்டவர்கள் யார் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் யார், தாக்கம், விளைவுகள் என்ன. எவர் எவரை பாதிப்படையச் செய்துள்ளது. அடிப்படைக் காரணம் நோக்கம் என்ன போன்றவையான கேள்விகளுக்கு பதில்தேடி பொறுப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து சட்டத்துக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்பதை புலப்படுத்துவதாகவே உணரமுடிகிறது. அப்படியானால் இது ஒரு குடும்பத்தை குடைந்தெடுக்கின்ற அமெரிக்காவின் கோட்பாடாகவே கருத முடிகிறது. இதனை இலங்கை செய்யும் என எதிர்பார்க்க முடியுமா?
எது எவ்வாறாக இருந்த போதிலும் சந்தேகமின்றி இலங்கை ஜெனீவாவில் எதனை சம்பாதிக்கப்போகின்றது என்பதே வரும் வாரங்களில் மாத்திரமன்றி தொடரும் மாதங்களிலும் பேசப்படக்கூடிய தலைப்பாக அமையப்போகின்றது. நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் செயல்பாட்டை மீள்பரிசீலனை செய்கின்ற தேவைப்பாட்டுக்கு விழிகளை திறக்கச் செய்கின்ற முயற்சியாக அமையலாம்.
தேச, தேசிய நலனை கீழ்ப்படுத்தி சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலை தொடர்ந்தால் அந்தஸ்தை உயர்த்திக் காண்பித்தல் நற்பெயரை கட்டிஎழுப்புதல் யாவும் அர்த்தமற்றதாகிப் போய்விடலாம். தற்போதைய நிலையில் தேசத்தின் வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுத்தல் நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்படவேண்டும். இல்லையேல் மேலும் பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment