சிறிலங்கா - இந்திய கூட்டுச்சதியில் தி.மு.கவுக்கும் உடன்பாடிருந்தது?: இந்திய ஊடகவியலாளர்


ஐக்கிய முற்போக்கு கூட்டணி [UPA] அரசாங்கமானது யுத்த காலத்தில் மேற்கொண்ட கூட்டுச்சதி தொடர்பான இரகசியத்தை மூடி மறைக்க விரும்புகிறதா? அல்லது தான் பாதுகாப்பாக மூடிமறைக்க விரும்பிய இரகசியங்களை தற்போதைய விவாதங்கள் அம்பலப்படுத்திவிடும் என இந்திய மத்திய அரசாங்கம் கவலை கொள்கிறதா?இவ்வாறு இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் M J Akbar இந்திய ஆங்கில ஊடகமான Deccan Herald ஊடகத்தில் எழுதிய கட்டுரையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
யூதர்களின் Yom Kippur நாளன்று அதாவது ஒக்ரோபர் 06, 1973 எகிப்திய அதிபர் அன்வர் சதாத் [Anwar Sadat] தனது அரேபிய உலகம் வியந்து பார்க்குமளவுக்கு, அனைத்து உலகமுமே பிரமித்து பார்க்கும் படியாக இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வெற்றிகரமான யுத்தம் ஒன்றை நடாத்தியபோது கலாநிதி கென்றி கீசிங்கர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளராகப் பதவியேற்றிருந்தார். 

இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் எகிப்தியப் படைகள் தாம் 1967ல் இழந்த பிரதேசத்தை மீளவும் தமது வசமாக்கி கொள்வதற்காக 'செங்கடலைக்' கடந்து 'சினாய் பாலைவனத்தின்' ஊடாக தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க அந்த நாளின் இறுதியில், கீசிங்கர் தனிப்பட்ட ஊடகம் ஒன்றின் ஊடாக சதாத்துக்கு மிகவும் எளிமையான ஆனால் சக்திமிக்க செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்: "நீங்கள் சோவியத் ஆயுதங்களுடன் யுத்தத்தை ஆரம்பித்துள்ளீர்கள். ஆனால் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவின் இராஜதந்திரம் உங்களுக்கு தேவைப்படும்" என்பதே அச்செய்தியாகும். 

சதாத் இந்தச் செய்தியை விளங்கிக் கொண்டார். இஸ்ரேலின் எதிர்ப்பு நடவடிக்கையானது தவிர்க்க முடியாதவாறு இருந்தது. இது யுத்தத்தின் நோக்கத்தை மாற்றியமைத்தது. அமெரிக்கா மற்றும் சோவியத்யூனியன் ஆகியன அதி விழிப்புணர்வைப் பெற்றிருந்தன. 

இந்நிலையில் அமெரிக்காவானது குறிப்பிட்ட அந்த நாளில் மட்டுமல்ல தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு யுத்த நிறுத்த உடன்படிக்கையை உருவாக்கி அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டது. சதாத், மெனாச்சம் பெகின் [Menachem Begin] மற்றும் ஜிம்மி காட்டர் ஆகிய முத்தரப்புக்களின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சமரச தீர்வு வரைபானது தற்போதும் அப்பிராந்தியத்தில் அமைதி நிலவக் காரணமாக உள்ளது. 

இவ்வாறானதொரு பங்களிப்பையே இந்திய மத்திய அரசம் கொண்டுள்ளது. உண்மையில், இவ்வாறானதொரு பங்களிப்பை இந்தியா முன்னெடுக்க வேண்டியுள்ளது. 2009ல் சிறிலங்காவில் இரத்த ஆறு ஓடக் காரணமாக இருந்த அதன் உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இந்தியா இவ்வாறானதொரு சமரச முயற்சியாளனாக பங்கேற்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. 

சிறிலங்காவில் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது தமிழ்நாட்டிலும், இந்திய மத்திய அரசிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மிகவும் அதிகாரம் மிக்க கட்சியாக செயற்பட்டது. ஆனால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகேர்ஜி ஆகியோரால் வரையப்பட்ட கொள்கையுடன் தி.மு.க உடன்பட்டிருந்தது.

இது புத்திசாலித்தனமான தீர்மானமாக இருந்தது. ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தமானது தோல்வியில் முடிவடைய வேண்டிய அவசியமில்லை என்பதை காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி மிகச் சாதாரணமாக மறந்துவிட்டார்கள் என்பது பலவீனமான, முட்டாள் தனமான முடிவாக உள்ளது. குறிப்பாக, இலங்கைத் தமிழர்களின் விவகாரம் தொடர்பில், இந்தியாவின் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியானது பயனுள்ள உறுதியான, பூரணமான புனர்வாழ்வுச் செயற்பாடுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. 

உண்மையில் இந்திய மத்திய அரசானது கொழும்புக்கு அனுப்பியிருந்திருக்க வேண்டிய செய்தியானது மிக வெளிப்படையானது: "நீங்கள் மற்றவர்களுடன் மேற்கொண்ட யுத்தத்தில் ஆயுத ரீதியில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ஆனால் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்துவதில் இந்திய மத்திய அரசின் உதவியை நாடவேண்டிய தேவையுள்ளது" என்பதே அந்தச் செய்தியாகும். 

எவ்வாறெனினும், 2009 ல் இடம்பெற்ற தேர்தலில் தமிழ்நாடானது திமு.க-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து வாக்குகளை வழங்கிய போதிலும் கூட,  UPA அரசாங்கமானது சிறிலங்காத் தமிழர் விவகாரத்தில் தலையிட்டு சிறிலங்காவில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளது. 

இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அதிலிருந்து விலகி பின்னர் இந்திய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற சம்பவமானது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவானது உதவும் என்பது தொடர்பில் தக்கவைக்கப்பட்டிருந்த சிறிய நம்பிக்கையையும் இழக்கச் செய்தது. ஆனால் தேசிய நலனைப் பாதுகாப்பதை தனது முதற் கடப்பாடாக கொள்ளும் அரசாங்மானது தனது அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வேளையில் அதனை மன்னித்து விடமுடியாது. 

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்கான காரணத்தை தடுத்து நிறுத்துவதில் இந்திய மத்திய அரசானது தனது இராஜ தந்திரோபாய அதிகாரத்தை பயன்படுத்த மறுத்துவிட்டது. எகிப்திய மண்ணில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து பின்வாங்குவதை கீசிங்கர் உறுதிப்படுத்திக் கொண்டார். ஆனால் இஸ்ரேலிடமிருந்து எகிப்தியர்கள் தமது பிரதேசத்தை மீட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை கீசிங்கர் அடையாளம் கண்டுகொண்டார். 

ஆனால் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடாந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில், சிறிலங்காவில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகள் நிறைவுற்றதாகவே இந்திய மத்திய அரசு கருதுகிறது. சிறிலங்காவின் கடந்த காலமானது நினைவுகூருவதற்கு மிகவும் மேசமாக உள்ளதால் அது தொடர்பில் அமைதி பேணப்பட வேண்டும் என்றே இந்திய மத்திய அரசு கருதுகிறது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வேளையில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மத்திய அரசாங்கம் தீட்டிய கூட்டுச் சதி தொடர்பாக அறியும் எவரும் ஆச்சரியப்படுவார்கள். 

அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி [UPA] அரசாங்கமானது யுத்த காலத்தில் மேற்கொண்ட கூட்டுச்சதி தொடர்பான இரகசியத்தை மூடி மறைக்க விரும்புகிறதா? அல்லது தான் பாதுகாப்பாக மூடிமறைக்க விரும்பிய இரகசியங்களை தற்போதைய விவாதங்கள் அம்பலப்படுத்திவிடும் என இந்திய மத்திய அரசாங்கம் கவலை கொள்கிறதா?

யுத்த மீறல்களை மேற்கொண்ட சிறிலங்கர்கள் எவரையும் தண்டிப்பதில் அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவானது வெற்றி கொள்னாது. அவ்வாறு செய்ய முற்பட்டால், சிறிலங்காவில் ஒரு தலைமுறை காலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கான உள்நாட்டு ஆதரவானது அதிகரிக்கலாம். 

இறுதியில் இந்தியத் தமிழ் மக்களிடமிருந்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் மீது அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால், அவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இக்கூட்டணியானது தமது செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிப்பதற்கான போதியளவு கால அவகாசத்தைக் கொண்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முனையவில்லை. 

உண்மையில் சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா வானது நடுநிலை வகிக்க வேண்டிய நிலைக்கு இந்திய இராஜதந்திரிகள் அதனை தள்ளியிருக்க வேண்டிய தேவையில்லை. சிறிலங்காவானது இந்தியாவின் அயல் நாடாக இருப்பதால் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா நடுநிலைப் பங்கை வகித்திருக்க முடியும். 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது பலவீனமானதாக உள்ளது. ஏனெனில் இந்தியாவானது பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற  தனது அயல்நாடுகளுடன் உரியவகையில் தனது வெளிநாட்டுக் கொள்கையைப் பயன்படுத்தாது முரண்பாட்டைத் தோற்றுவித்தது போல தற்போது சிறிலங்காவுடனான உறவிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 

நிச்சயமற்ற அரசியலானது இந்தியாவின் இராஜ தந்திரச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவானது தனது பிராந்தியச் செல்வாக்கை உரிய வகையில் பயன்படுத்தத் தவறியுள்ளது.

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment