ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் குறித்து எதிர்பார்ப்புகள் மிதமிஞ்சிப் போயுள்ளன. தமிழ் மக்களாக இருக்கட்டும், இலங்கை அரச தரப்பாக இருக்கட்டும் அல்லது தென்னிலங்கை மக்களாக இருக்கட்டும் அனைத்து தரப்பினரும் எதிரும் புதிருமான எதிர்பார்ப்புகளில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் வெற்றி யாருக்கு?
தமிழ் மக்களைப் பொறுத்து இது கசப்பானதாக இருக்கலாம். ஆனால் இதுவே உண்மை. வெற்றி தமிழ் மக்களுக்கோ சர்வதேச சமூகத்துக்கோ அல்ல! இலங்கையே இராஜதந்திரப் போரில் வெற்றிவாகை சூடிக் கொண்டுள்ளது.
இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுவே உண்மை.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை ““நீதி செத்துவிடவில்லை'' என்ற உண்மையை உரைத்து நின்றது.
அது மாத்திரமல்ல. சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியையும் உலுப்பி விட்டதுடன் சர்வதேசத்தின் கண்களையும் திறக்கச் செய்தது. அத்துடன் சனல் 4 போரில் சாகடிக்கப்பட்ட உண்மையின் சாட்சியாக விஸ்வரூபம் எடுத்தது.
இலங்கை அரசாங்கமும் தென்னிலங்கையும் இதனை தமது கோபக்கனலுக்கு தீக்கிரையாக்கின.
நிபுணர் குழு அறிக்கைக்கு மாறாக ““சுயத்தை'' வெளிக் கொணர்வதாகக் கூறி கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் நியமித்தது. சர்வதேச நெருக்கடிகள் அதிகரிக்கவே ஆணைக்குழுவின் அறிக்கையும் அரை குறை பிரசவமாக வெளியிட்டது.
இந்த அறிக்கை குறித்து தமிழர் தரப்பு மாத்திரமல்ல, மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும், சர்வதேச சமூகம் விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்தன. ஆனால் தனது அறிக்கை குறித்து அரச தரப்பும் தென்னிலங்கையும் பெரிதாகவே பேசின.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்நடத்தப் போவதாக அரசாங்கம் சூளுரைத்தது. ஆனால், அறிக்கை குறித்து அரசாங்கத் தரப்பில் இருந்தும் தென்னிலங்கை சக்திகளிடமிருந்தும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் வெளிவரத் தொடங்கின.
பரிந்துரைகளை அமுல்நடத்த முடியாது என்ற வாசகங்களும், கால அவகாசம் தேவை என்ற கோரிக்கைகளும் அரசாங்கத் தரப்பிலிருந்தே வெளிவரத் தொடங்கின.
இந்த ஒரு நிலைமையிலேயே ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியது.
உண்மையில் இந்தக் கூட்டத் தொடரில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்தே விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையுடன் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் சமாந்திரமாக வைத்து ஆராயப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இலங்கை அரசாங்கம் மிக வெற்றிகரமாக இதனை திசை திருப்பி விட்டுள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை கிடப்பில் போட வைத்துள்ளதுடன் தனது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து அனைவரையும் பேச வைத்துள்ளது இலங்கை அரசாங்கம்.
மொத்தத்தில் உலக அரங்கில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அங்கீகரிக்க வைத்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை ஓரங்கட்டச் செய்வதில் இலங்கைக்கு இராஜதந்திர ரீதியில் வெற்றியே என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை.
ஐ.நா. மனித உரிமை கூட்டத்தொடரில் கூட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை விடுத்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்தே பேசப்படுகின்றது.
அதனை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தக் கோரும் தீர்மானத்தை முன்மொழிவதைப் பற்றியுமே பேசப்படுகின்றது.
அப்படியிருந்தும் இலங்கையின் இறைமைக்கு எதிராகவும் உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் அநாவசியமாக தலையீடு செய்கின்றது என்ற தியிலும் அரசாங்கம் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் இறஙகியிருந்தது.
அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெனீவாவுக்கு அனுப்பி வைத்து இராஜதந்திரப் போரினை முடுக்கி விட்டுள்ள அதேவேளையில் தமக்குச் சார்பாக தமிழர்களில் ஒருசிலரையும் ஜெனீவாவில் களமிறக்கியுள்ளது.
ஏன் இந்த ஆர்ப்பாட்டம், ஆர்ப்பரிப்பு என்பதே கேள்வியாகும்
அரசாங்கம் தென்னிலங்கை சக்திகளும் உள்நாட்டில் மாத்திரமல்ல, சர்வதேச அரங்கிலும் அனைத்துமே தனக்கு சார்பாக, சாதகமாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
உண்மையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பிற்காக கொண்டு வரப்பட்டதேயன்றி நடைமுறைப்படுத்துவதற்காக அல்ல என்பது தமிழ் மக்களுககுத் தெரியாத ஒன்றல்ல!
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தகர்த்துவிட தனது இறைமையை சர்வதேசத்திடம் இலங்கை அடகு வைத்தே வெற்றிகளை ஈட்டியது. அதற்கு பிரதி உபகாரமாகவே சர்வதேசம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி நிற்கின்றது.
உண்மையில் இலங்கை அரச தரப்பு கூறுவது போன்று இது இலங்கைக்கு எதிரான பிரேரணையாக இருக்க முடியாது. ஏனெனில் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து பரிந்துரைகளைப் பெற்றது இலங்கை அரசாங்கமே.
அதை நடைமுறைப்படுத்தும் உறுதிமொழியையே ஜெனீவா மாநாடு எதிர்பார்த்து நிற்கின்றது. இந்நிலையில் இது இலங்கையின் இறைமைக்கு எதிரானதென்றும் உள்நாட்டு விவகாரங்ளில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறுவதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்து ““பேச்சுவார்த்தை பொறிக்குள்'' எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிக்கவைத்ததோ அதேபோல் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையும் “நல்லிணக்க ஆணைக் குழு என்ற பொறிக்குள்'' சிக்க வைத்துள்ளது.
அதேவேளையில் “சாத்தான் வேதம் ஓதுவது'' போல் நாடாளுமன்ற தெரிவுக் குழு மந்திரத்தையும் அரசாங்கம் ஓங்கி உச்சாடனம் செய்கிறது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு சாவுமணி அடித்த பெருமை இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு நிறையவே உள்ளது.
தற்பொழுதும் தணலாக எரிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ““பெரும்பான்மை இன'' ஜனநாயகத்தின் மூலம் நிரந்தரமாக சவக்குழிக்குள் தள்ளி மூடிவிடுவதே நாடாளுமன்ற தெரிவுக்குழு என்ற மந்திர உச்சாடனம் ஆகும்.
உண்மையில் ஜெனீவா மனித உரிமை பேரவை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும் சமாந்தரமாக நடைமுறைப்படுத்த அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய பிரேரணையை கொண்டு வருவதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஜெனீவா மாநாடு இதனை கவனத்தில் கொள்ளாதது கவலைக்குரியது.
தமிழ் மக்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தப் பயணத்தில் சிந்தித்து செயலாற்றவில்லை என்பதை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும்.
இந்தப் பயணத்தில் சர்வதேச சமூகத்தை செல்வாக்கு செலுத்தும் வகையில் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள தமிழ் மக்களின் அனைத்து தரப்பினரும் தவறிவிட்டோம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
தமிழர் சமூகம் தொடர்ந்தும் சந்தர்ப்பங்களை நழுவவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடருமாக இருப்பின் ஒட்டுமொத்த தமிழினத்தின் சாம்பலில் கூட அரசியல் அபிலாஷைகளைக் காண முடியாது போய்விடும்.
வி.தேவராஜ்
0 கருத்துரைகள் :
Post a Comment