ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ. நா மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாது தடுப்பதற்கான முயற்சிகளை இலங்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.
இதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனித உரிமைகளுக்கான விசேடதூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க ஜெனிவா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானில் தற்போது தங்கியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு திரும்பிய பின்னரே ஜெனிவா செல்வதாக முன்னர் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜப்பானிலிருந்து தற்போது நேரடியாக ஜெனிவாவுக்குச் செல்லவுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
அத்துடன், கொழும்பிலிருந்து ஜெனிவா செல்லவுள்ள இலங்கைத் தூதுக்குழுவினரும் மகிந்த சமரசிங்கவுடன் இணைந்து இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகள் சில ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இலங்கைத் தூதுக்குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர்.
அத்துடன், அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கியவிடயங்களில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் எனச் சில நாடுகள் கோரியுள்ளதாகத் தெரியவருகின்ற நிலையில், இந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை இலங்கைத் தூதுக்குழு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது.
ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரின் அமர்வுகள் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது எதிர்வரும் 20 ஆம்திகதிக்கு முன்னர் வாக்கெடுப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகையதொரு நிலையிலேயே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு உட்படுத்தாமல், அதனை ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சியில் இலங்கைத் தூதுக்குழுவினர் ஈடுபடவுள்ளத தெரியவந்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவசரப்படாது இலங்கை அரசு; கூர்ந்து ஆராய்கிறார் ஜனாதிபதி; அமெரிக்கத் தீர்மானம் குறித்து ஜி.எல்.பீரிஸ் |
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா மர்ப்பித்துள்ள போதிலும், அதற்கு எதிரான நகர்வுகளை முன்னெடுப்பதில் அரசு அவசரப்படவில்லை. அதுபற்றி ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்து வருகிறார். அந்தத் தீர்மானத்தைப் பொறுமையுடனேயே அணுகி வெற்றி பெறுவோம் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிக் கூற முடியும்'' என குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், மேற்குலகின் அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளை நாம் கடந்த காலத்தில் கையாண்டுள்ளோம். கூடுதலான அனுகூலங்கள் எம் பக்கம் காணப்படுகின்றன'' எனவும் கருத்து வெளியிட்டார்.
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் 7 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது. ஜெனீவா அமர்வின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பின்னர் இலங்கைக் குழு நாடு திரும்பியதன் பின்னரே அமெரிக்கா தீர்மானத்தைச் சமர்ப்பித்தது.
இந்த நிலையில் அமெரிக்கா தீர்மானத்தைச் சமர்ப்பித்துள்ளமை தொடர்பாகக் கேட்டபோதே பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
மேற்குலகின் அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளை நாம் கடந்த காலத்தில் கையாண்டுள்ளோம். கூடுதலான அனுகூலங்கள் எம் பக்கம் காணப்படுகின்றன. அடுத்த கட்ட அமர்வில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதியே இலங்கைக் குழு ஜெனீவா செல்வதற்கு தீர்மானித்திருந்தது.
எனினும் அமெரிக்கா அதன் தீர்மானத்தைச் சமர்ப்பித்துள்ள நிலையில் இதில் மாற்றம் ஏற்படலாம். அமெரிக்காவின் தீர்மானத்தை அரசு ஆழமாக ஆராய வேண்டியுள்ளது. மேலோட்டமாக எதனையும் உடனடியாக வெளியிட முடியாதுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றார். அவருடனான சந்திப்புக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதைக் கூறமுடியும். சிலவேளை இலங்கைக் குழு முன் கூட்டியே ஜெனீவா செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதுவரை பல சர்வதேச நாடுகள் எமக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளன. இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதை விட இலங்கைக்கு இந்த விடயத்தில் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் நாம் இந்த விடயத்தில் அவசரப்பட்டு எதனையும் தெரிவிக்கப் போவதில்லை'' எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
|
0 கருத்துரைகள் :
Post a Comment