தமிழ்த் தேசியப்பற்றோடு வாழ்ந்த, மகத்தான மனிதர் வணசிங்கா ஐயா, - இன்று அவரின் நினைவு நாள்,தலை சாய்த்து, வணங்கி நினைவில்கொள்வோம்.


தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மண் தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பலரைப்பெற்றிருக்கின்றது. இவர்களுடைய வாழ்வில்,இவர்கள் மேற்கொண்ட இனப்பற்றோடு இணைந்த மக்களுக்கான சேவைகளை பதிவாக வரலாற்றில் கொண்டுவர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் இத் தொடரை எழுத முனைகின்றோம்.
24 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ மண் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தவேளையில் மக்கள் குரல்வளை நசுக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழீழம் சார்ந்த செய்திகள் மறைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்கி, அழிப்பதற்கு இந்தியப் படையினரும், தமிழ்த் தேசத் துரோகிகளும் முயன்று கொண்டிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் வெளிக்கொண்டுவர அறிவாற்றல் மிக்க சிலர் துணிந்து செயல்பட்டனர்.
தமிழீழமெங்கும் பல அறிவாளர்கள் தேசிய விடுதலை இயக்ககத்திற்கு ஆதரவு வழங்கியதோடு, இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிராகச் செயல்பட்டு தங்களை அர்ப்பணித்ததையும் தமிழீழ மண் மறக்கவில்லை.
இந்தவகையில் மட்டக்களப்பில் வணசிங்கா ஐயா அவர்களுடைய தமிழ்த் தேசியப்பற்றோடு இணைந்த மக்கள் சேவையையும் நினைவு கூர்வது பொருத்தமான ஒன்றாகும்.
ஆண்டுகள் பல கடந்தாலும் அறிவாற்றல் மிக்க வணசிங்கா ஐயா போன்றவர்களை மட்டக்களப்பு மக்களும், கல்விசார் சமூகமும் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றது. இவரைப்பற்றி எழுத எண்ணுகின்றபோது மட்டக்களப்பின் மண்வாசனையையும், மண்ணோடு இணைந்த விடுதலைசார்ந்த அரசியல் நிகழ்வுகளையும் கல்விசார் பணிகளையும் எழுதவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.
முள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் விடுதலை இயக்கம் சார்ந்த பதிவுகளை பலரும், பல்வேறு கால கட்டங்களை முன்வைக்கின்ற இவ்வேளையில் தங்களை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த அறிவாளர்களின் செயல்திறன் பற்றிய பதிவுகளைக் கொண்டதான வரலாற்றில் வணசிங்கா ஐயா அவர்களைப் பற்றிய குறிப்புக்களும் மட்டக்களப்பில் முக்கியத்துவம் பெற்றதாகவும், தற்கால தமிழ்ச் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மட்டக்களப்பில் கல்விமான்களில் ஒருவரான வணசிங்கா ஐயா அனைவராலும், மதிக்கப்பெற்ற மகத்தான மனிதர் என்பதனை அவருடைய தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பணிகளிலும், மக்கள் நலன்சார்ந்த பணிகளிலுமிருந்தும் அறியமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை என்னும் ஊரில்13 . 01 . 1926 ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்ததனால் மட்டக்களப்பு புனித மரியநாயகி பள்ளிக்கூடத்தில் தங்கி கல்வி கற்றார். பின்பு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1948 ம் ஆண்டு வெளியேறினார்.
13 . 01 .1949 ம்ஆண்டு கொழும்பு மத்துகம புனித மேரிஸ் ஆங்கிலக் கல்லூரியில் உதவி ஆசிரியராக முதல்பணி நியமனம் பெற்றார். பின்பு பத்து ஆண்டுகள் மலையகம் ஹட்டன் புனித ஜோன் போஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவருக்கு 1968 ம் ஆண்டு ஐந்தாம் தர பாடசாலை அதிபர் பதவியும், 1973 ம் ஆண்டு மூன்றாம் தர பாடசாலை அதிபர் பதவியும் கிடைத்தது.
15 .01 .1975 ம்ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பக்கல்வி பயின்ற மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்தின் அதிபரானார். .அரசியல் பழிவாங்கல் காரணமாக கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் பாடசாலைக்கு 18 . 05 . 1979 ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். 02 . 03 .1982 ம் ஆண்டு தொடக்கம் 10 . 01 .1986 ம்ஆண்டு பதவிக்கால ஒய்வு பெறும்வரை மீண்டும் அரசடி மகா வித்தியாலய அதிபராக பணிபுரிந்தார்.
1969 ம் ஆண்டு அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கத் தலைவரானார். அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கமும்,அரசினர் பாடசாலை தமிழாசிரியர் சங்கமும் இணைந்து உருவாக்கிய இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முதலாவது தலைவராக 1974 ம்ஆண்டு தெரிவு செயப்பட்டார். ஓய்வு பெறும்வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்.
சீனாவில் நடைபெற்ற கல்விசார் தொழிற்சங்க சம்மேளன மகாநாட்டில் 1965 ம் ஆண்டிலும், சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்க சம்மேளன மகாநாட்டில் 1979 ம் ஆண்டிலும், பம்பாய்க்கு அருகிலுள்ள ``கொள்காப்பூர் ``என்னுமிடத்தில் நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகங்களினதும், கல்லூரிகளினதும்,ஆசிரியர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் 1981ம்ஆண்டிலும், மேற்கு ஜெர்மனி ``பிராங்போர்ட்`` என்னும் இடத்தில் நடைபெற்ற ஆசிய பிராந்திய தொழிலாளர் கல்வி என்னும் பொருள் பற்றிய மகாநாட்டில் 1983 ம் ஆண்டிலும், பிரான்சிலுள்ள ``மார்க் செயின் `` என்னுமிடத்தில் நடந்த சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்கத் சம்மேளன மகா நாட்டில்1985 ம் ஆண்டிலும் கலந்துகொண்டு தமிழருக்கும், தொழில் சங்கப்பணிகளுக்கும் பெருமைசேர்த்தார். அத்துடன் ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் மத்திய அலுவலகத்துக்கு சென்று அலுவலகம் இயங்கும் முறைகளை அவதானித்து திரும்பியிருந்தார்.
தாய் மொழியான தமிழிலும், அயல் மொழியான சிங்களத்திலும், அனைத்துலக மொழியான ஆங்கிலத்திலும் தேர்ச்சிபெற்றவர், இம் மொழிகள்மூலம் மேடையில் பேசுவதிலும் வல்லவராகவிருந்தார்.
மட்டக்களப்புத் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தின் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு அதன்வழியில் செயல்படத் தொடங்கியகாலம் 1956 ம் ஆண்டிலிருந்து என்பதனை நாம் அறிந்தவரையில் குறிப்பிடக் கூடியதாக இருக்கின்றது. அதற்கு முன்பு படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகராமிக்கவர்கள் என்ற சுயநலப் போர்வையில் மூழ்கிக்கிடந்த மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை 1956 ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் புரட்சி புரட்டிப் போட்டதனால் தமிழ்மக்களின் விடுதலையோடு இணைந்ததாக அரசியல் மாறியது.
இந்த அரசியலுடான விடுதலைப் பயணத்தில் கால்பதித்த வணசிங்கா ஐயா தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களிலும்,1961 ம் ஆண்டில் நடந்த தமிழர் உரிமைக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் முன்னின்று ஈடுபட்டார்.
இவருடைய அரசியல் விடுதலைப் பயணம் 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் மட்டும் தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலையோடு அமைந்தாக இருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில்``தமிழீழம் `` என்பதை தேர்தல் கொள்கையாகக் கொண்டு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது.
இத் தேர்தலில் தமிழர் ஆசிரியர் சங்கம் எடுத்த தீர்மானத்தின்படி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமது பூரண ஆதரவை தெரிவித்ததோடு, தேர்தல் மேடைகளில் சங்க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றியுமிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு தமிழீழக் கோரிக்கைக்கு கிடைத்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியப்பற்றோடு, தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தேசிய விடுதலை இயக்கத்தையும் தமது இறுதிக்காலம் வரை ஆதரித்தவர்களில் வணசிங்கா ஐயா அவர்களை முதன்மையாக குறிப்பிடமுடியும்,
1977 ம் ஆண்டுத் தேர்தலின் பின்பு தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியோடு இளைஞர்களின் எழுச்சியும் விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்த்ததாக இருந்தன. இக் காலத்தில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் மாவீரர் லெப் . ராஜா (பரமதேவா) அவர்களுடைய தொடர்பு வணசிங்கா ஐயாவுக்கு நெருக்கமாக இருந்ததனால் இவ்வாறான இளைஞர்களின் மதிப்புக்குரியவராகவும் இருந்தார்.
மட்டக்களப்பு நகரை மையப்படுத்தி பல தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் களத்தில் நின்றபோதும், தேர்தல் நோக்கமில்லாத இவரைப் போன்றவர்களின் ஆதரவு மட்டும்தான் தமிழ் இளைஞர்களுக்கு இருந்ததை இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்தபோது அறியமுடிந்தது.
தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடித்து, தமிழ்மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டுமென்ற செயலில், இந்தியப் படையினர் தமிழ்த் தேசத்துரோகிகளோடு இணைந்து செயல்படுகின்ற வேளையில் எழுந்த அனைத்து அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்கொண்ட ஒரு சிலரில் வணசிங்கா ஐயா அவர்களை குறிப்பிடமுடியும்.
தமிழ் மக்களுக்குகெதிரான அடக்குமுறைகளை மக்கள்குழு ஊடாக வெளிக்கொண்டு வருவதிலும். இந்தியப் படையினராலும்,தமிழ்த் தேசத் துரோகிகளாலும் நடத்தப்படும் அட்டூழியங்களை அவர்களிடமே தட்டிக் கேட்பதிலும் வணசிங்கா ஐயா அவர்கள் பின் நிற்கவில்லை, அத்தோடு கைது செய்யப்பட்ட இளைஞர்களை இந்திய படை முகாமுக்குச் சென்று படையினருடன் வாதாடி மீட்டு வருவதிலும் இவருடைய பங்கு அதிகமாக இருந்தது.
போலியான தீர்வுடனும், அடக்குமுறையிலும் தமிழ் மக்களை வைத்திருக்க விரும்பிய இந்தியப்படையினர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைக் கழகம்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் உருவாக்கி 1989 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தது.
இந்த நிகழ்வு தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு மிகவும் மனவேதனையைக் கொடுத்தது. இத் தேர்தலில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு தமிழ்த் தேசியத்தின் சார்பில் மேற்கூறப்பட்ட கூட்டணியை எதிர்த்து தமிழர் பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டது. யுத்தம் நிறுத்தப் படவேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பவற்றை முன் நிறுத்தி சுயேச்சையாக போட்டியிட்ட இவர்களுக்கு தமிழ்த் தேசியப் பற்றாளர்களான கல்விமான்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மடக்களப்பு மாவட்டத்தில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்புக்கு ஆதரவாக வணசிங்கா ஐயா அவர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக ஆதரவு வழங்கினார். அடக்குமுறைக்கும், அடாவடித்தனங்களுக்கும், நேர்மையற்ற செயல்பாடுகளுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்த இத் தேர்தலில் மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய வேட்பாளர்களான பிரின்ஸ் காசிநாதர் , யோசேப் பரராஜசிங்கம், சாம் தம்பிமுத்து இவர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் அமிர்தலிங்கம் அவர்களும் உட்பட்டதான இந்தியப் படையினரின் ஆதரவு பெற்றவர்களாக தேர்தலில் போட்டியிட்டனர்.
ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு சார்பான சுயேட்சைக் குழுவுக்கு அன்றைய அரசடி மகா வித்தியாலய அதிபர் சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.இத் தேர்தல் முடிவுகளின்படி மாவட்டத்தில் 55 , 131 வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், 46 , 419 வாக்குகள் சுயேச்சை குழுவுக்கும் கிடைத்தது. தொகுதியடிப்படையில் பார்க்கின்றபோது மட்டக்களப்புத் தொகுதியில் சுயேட்சைக் குழுவினருக்கு கூட்டணியைவிட அதிகபடியான வாக்குகள் கிடைத்திருந்தன.
கள்ள வாக்குகளின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதும், அமிர்தலிங்கம் , யோசேப் பரராஜசிங்கம் போன்றவர்கள் தெரிவுசெய்யப்படவில்லை. இத் தேர்தல் முடிவின்படி மக்கள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததையும் குறிப்பிட முடியும்.  ஏனெனில் திருகோணமலையில் இரண்டு தமிழர் தரப்பு ஆசனங்களையும், யாழ் மாவட்டத்தில் பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்று ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு (சுயேட்சைக் குழு)  மூலம் தமிழ் மக்கள் தங்களுடைய விருப்பத்தை இந்திய அரசுக்கு தெரிவித்தனர்.
1977 ம் ஆண்டுக்குப்பின் நடந்த அடுத்த தேர்தலிலும், தமிழ் மக்கள் தங்களது ஆணையை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். வெறும் சொல்லாகவும்,தேர்தல் அரசியலாகவும் இருந்த ``தமிழீழம்` என்பதை இலட்சியமாக வரிந்துகட்டி களத்தில் பயணித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. மக்களும் அவர்களோடு பயணித்தார்கள் என்பதை வணசிங்கா ஐயா போன்ற அறிவாளர்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
லெப் ராஜா (பரமதேவா)அவர்களின் விடுதலைப் பயணம் விடுதலைப் புலிகளோடு சங்கமித்து தொடந்தது. பரமதேவா என்ற தமிழ் இளைஞன் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து கொண்டதன் பின்பு வணசிங்கா ஐயா, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஏற்றுக் கொண்டார்.
நாம் முன்பு குறிப்பிட்டது போல் தேசியத் தலைவர் ஆரம்பக்கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தின் அதிபராக பணிபுரிந்த அவரின் தேசியப் பற்று தன்னலமற்றதாக இருந்ததை எப்போதும் எம்மால் சொல்லிக்கொண்டிருக்க முடியும். காலம் இவ்வாறான தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.
மட்டக்களப்பு _ அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களின் மதிப்புக்குரியவராக வணசிங்கா ஐயா அவர்கள் இருந்தார். தமிழ்த் தேசியத்தையும், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் மிகவும் ஆழமாக நேசித்த வணசிங்கா ஐயா அவர்களின் வீட்டுக்கு ஆரம்பகாலப் போராளிகள் சென்று வருவது வழக்கமாகவிருந்தது. போராளிகளை அன்பாக உபசரித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதையும், தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
1988 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கத்திலும், அன்னை பூபதி அவர்களின் அறப்போரிலும் தனது முழுமையான பங்களிப்பை செய்தார்.
மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம்பொருந்திய, நீதிக்கான குழுவாக செயல்பட்டதற்கும், பல்வேறுபட்ட அரச இயந்திரங்கள்,அரசியல் கட்சிகள் உட்பட்ட, இராணுவப்பிரிவுகளும் மக்கள் குழுவின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் அப்போது இருந்ததற்கும் மக்கள் குழுவின் பொறுப்பு வாய்ந்த பதவியில் வணசிங்கா ஐயா போன்றவர்கள் அமர்ந்திருந்தது ஒரு காரணமாகும். ஏனெனில் இவர்களின் மறைவுக்குப் பின்பு மக்கள் குழு பலம்பொருந்திய அமைப்பாக இயங்கவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.
நிமிர்ந்த நடையும், நேரிய பார்வையும், அகன்ற முகத்தில் அழகான மீசையும், ஆணித்தரமாக பதில்களை கூட்டங்களில் முன்வைக்கும் கம்பீரமான குரலும், ஆக்கிரமிப்பு வாதிகளின் தமிழின அழிப்புக்கு தடையாக இருந்தது.
1986 ம் ஆண்டில் அதிபர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற வணசிங்கா ஐயா அரசடி மகா வித்தியாலய அதிபர் விடுதியிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு கல்முனை வீதியில் அரசடிச்சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
இக் காலத்தில் மட்டக்களப்பு நகரில் அரசியலில் ஈடுபட்ட சிலர் இந்தியப் படையினருடான உறவை மிகநெருக்கமாகப் பேணிவந்தனர். தமிழ்த் தேசியத்தின் பற்றோடு செயல்படுகின்ற அறிவாளர்களை அழிப்பதன் மூலம் அடக்குமுறைக்குள், திணிக்கப்பட்ட தீர்வுக்குள், சிங்களத்திற்கு ஆதரவாக தமிழ்மக்களை வழிநடத்தமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக விருந்தனர்.
இந்த அடிப்படையில் மட்டக்களப்பில் நடந்த அறிவாளர் அழிப்பில் வணசிங்கா ஐயா அவர்களையும் இணைத்துக்கொண்டனர்.
31 . 01 .1989 அன்று மாலை வேளையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த வணசிங்கா ஐயா அவர்களை சந்திப்பதற்கென வந்திருந்த தமிழ் இளைஞர் இருவரையும் நாற்காலியில் அமருமாறு கூறிவிட்டு தனது இருக்கையில் அமருகின்றபோது வந்த இருவரில் ஒருவர் கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்தில் அவர் சாவடைந்துவிட்டார்.
இன்று இவரை நினைவில் கொள்ளுகின்ற வேளையில்,அன்று இவரின் இழப்பு மட்டக்களப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாக விருந்ததையும் எண்ணிப்பார்க்க முடிகின்றது. உணர்வுள்ள தமிழர்களின் உள்ளங்களில் என்றும் அவர் நினைவாக வீற்றிருப்பார்.
எமது மண்ணில், எமது மக்களின் விடுதலைக்காக நாம் இழந்தது அதிகம்.
ஒவ்வொரு இழப்பிலும்,உணர்வை இழக்காமல், உரிமைக்காக உறுதியுடன் பயணித்தோம். எமது பயணம் இன்னும் தொடர்கின்றது. இலட்சியத்தின் எல்லையை நோக்கி ..............

என்றும் எழுகதிர் . 


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment