இலங்கையில் கால் பதிக்க வழிதேடுகிறதா அமெரிக்கா?


“ஒரு நாடு எமக்கு மூலோபாய முக்கியத்துவம் ['strategically important'] உள்ளதாக இருக்கும் போது - அந்த நாட்டை எமது செல்வாக்கிற்குள் வைத்திருப்பதற்கு ஏற்ற அக மற்றும் புறக் காரணிகளைக் கண்டறிந்து [அப்படி எவையும் அங்கு இல்லையெனில் புதியவற்றை நாமே உருவாக்கி, அல்லது போதியளவிற்கு இல்லையெனில், இருப்பவற்றைப் பெரிதாக்கி]அவற்றை எமது நலன்களுக்காக எவ்வாறு எங்கு பயன்படுத்துவது என்ற வழிகளை வகுத்த பின்பு எமது கால்களைப் பதிப்போம்.“ 

இது கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரி ஒருவர், சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தளம் ஒன்றின் கட்டுரையாளருக்கு கூறியிருந்த கருத்து. 

தற்போதைய சூழலில் இந்தக் கருத்து மிகவும் பொருத்தமானது என்றே கருதலாம். 

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா அதிகளவில் மூக்கை நுழைக்கின்ற போக்கை அவதானிக்க முடிகின்ற சூழல் இது. என்பது பரவலான கருத்தாகவே உள்ளது. 

போர் முடிவுக்கு வந்தபின்னர், அவ்வப்போது அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வந்து அரசாங்கம் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அடுத்து என்ன செய்யப்போகிறது என்று வினவிக் கொண்டிருந்தனர். இப்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா அதிக கரிசனை எடுத்துக் கொள்கிறது என்பது இதிலிருந்து புலனாகிறது. அதுமட்டுமன்றி, நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறுதலையும் நிறைவேற்றத் தவறினால், மீண்டும் போர் வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் எச்சரித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக். 

இந்தக் கட்டத்தில் பிளேக்கின் எச்சரிக்கையை உதாசீனம் செய்ய முடியாது. 

நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் என்பன நடைமுறைப்படுத்தப்படாது போனால், மக்களின் கோபங்கள் ஆறாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கிலுள்ள மக்கள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாக உணர்வதாகவும், வீதிகளை அமைப்பதாலோ அல்லது கட்டடங்களை கட்டுவதாலோ நிரந்தர அமைதி வந்து விடாது என்றும் பிளேக் தெரிவித்துள்ளார். 

போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் இருந்த பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியதும் அங்குள்ள மக்களிடையே ஒருவித மாயையை உருவாக்கியது. அந்த மாயை நிரந்தரமானது, அதை வைத்தே தமிழ்மக்களை திருப்திப்படுதலாம் என்று அரசாங்கம் தப்புக்கணக்குப் போட்டது. அரசாங்கம் மட்டும் இந்த விடயத்தில் தப்புக் கணக்குப் போடவில்லை. சில தமிழ் ஊடகங்களும் கூட, அபிவிருத்தித் திட்டங்களின் மூலம்- வீதிகளை அமைத்து கட்ட்டங்களை எழுப்புவதன் மூலம் நிரந்தரமான அமைதியைக் கொண்டு வரலாம், போரின் வடுக்களை ஆற்றி விடலாம் என்றே கருதின.அதனை மையமாக வைத்து அரசாங்கம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதலில் கவனம் செலுத்தாமல், வடக்கை அபிவிருத்தி செய்வதாக காட்டிக்கொண்டது. ஆனால் மூன்றாண்டுகள் கழித்து, பொருளாதார வளர்ச்சி காணப்பட்டாலும், போரின் வடுக்கள் ஆறவில்லை. அதிலிருந்து மக்களால் மீளவும் முடியவில்லை. படையினரின் வழக்கமான சுமைகளில் இருந்து அவர்களால் விடுபடவும் வழி கிடைக்கவில்லை. 

பொதுவாக உள்நாட்டுப் போர் முடிவுற்ற பின்னால் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் என்பனவற்றை நிறைவேற்றத் தவறிய நாடுகளில் மீளவும் போர் வெடித்த வரலாறு உள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டுகிறது. 

இந்த அனுபவத்தைக் கொண்டே, பொறுப்புக் கூறத் தவறினால், இலங்கையிலும் மீளவும் போர் வெடிக்கலாம் என்று எச்சரித்திருந்தார் பிளேக். 

இந்தக்கட்டத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் அத்தோடு முடிந்து விடப் போவதில்லை. எனினும் இந்த தீர்மானத்தினூடாக ஒரு வருடத்துக்கு அரசாங்கம் எந்தக் கவலையும் இன்றி இருக்கலாம். சிக்கல் எல்லாம் அடுத்து ஆண்டு தான் ஏற்படும். எனினும் அமெரிக்கா விடுவதாக இல்லை. அமெரிக்காவின் அடுத்த நகர்வும் ஆரம்பமாகிவிட்டது. (படிக்கவும் பின்னிணைப்பு கீழே) 

இலங்கை தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு நாடு என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. அமெரிக்காவின் பசுபிக்கட்டளை பீடத்துக்கான வழங்கல் பாதையில் தான் இலங்கை இருக்கிறது. பசுபிக்கட்டளை பீடமும், அவுஸ்ரேலியாவில் நிர்மாணிக்கப் போகும் பெருந்தளமும் எதிர்காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாக அமையப் போகின்றன. கீழ்திசை நாடுகளின் மீதான சீனாவின் செல்வாக்கை உடைப்பதற்கான அமெரிக்காவின் நகர்வே இது. எனவே இலங்கையில் நடக்கின்ற எந்தவொரு விவகாரமும் அமெரிக்காவை கவலை கொள்ளவே செய்யும்.அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கையில் அமைதி நிலைக்க விரும்புகிறது. அதுவே தனது பயணப்பாதையில் சலனத்தை ஏற்படுத்தாது என்றும் நம்புகிறது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் இதற்குள் புகுந்து குட்டையைக் குழப்புவதை அமெரிக்கா விரும்பவில்லை. அதேவேளை, அமெரிக்காவின் விருப்பங்களை நிறைவேற்றும் நிலையில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இல்லை. சீனா, ரஸ்யா, கியூபா, ஈரான், சிரியா போன்ற தனக்கு விரோதமான நாடுகளைச் சார்ந்துள்ள இலங்கை அரசின் போக்கை அமெரிக்கா ஆபத்தானதாக உணர்கிறது. அதைவிட, ஆட்சியில் நீடித்து நிலைக்கும் போக்குடன் உள்ள தலைமைத்துவத்தையும் அமெரிக்கா விரும்பாது. இந்தக் கட்டத்தில் தான் இலங்கை விவகாரத்தில் எப்படியாவது தலையிட வேண்டும் என்ற நிலை அமெரிக்காவுக்கு வந்துள்ளது. முன்னர் அமெரிக்கா விடுதலைப் புலிகள் விவகாரத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்தது. அதற்கேற்றவாறு புலிகளையும் வளைத்துப் போடப் பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது அமெரிக்காவின் கையில் உள்ள ஒரே ஆயுதம்- போரின் போது நடந்துள்ள மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அதுசார்ந்த ஆதாரங்கள் தான். 

இப்போது மீண்டும் ஒருமுறை கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜத்தந்திரி கூறியதை மீளப்பார்க்கலாம். 

“ஒரு நாடு எமக்கு மூலோபாய முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் போது - அந்த நாட்டை எமது செல்வாக்கிற்குள் வைத்திருப்பதற்கு ஏற்ற அக மற்றும் புறக் காரணிகளைக் கண்டறிந்து [அப்படி எவையும் அங்கு இல்லையெனில் புதியவற்றை நாமே உருவாக்கி, அல்லது போதிய அளவிற்கு இல்லையெனில், இருப்பவற்றைப் பெரிதாக்கி] அவற்றை எமது நலன்களுக்காக எவ்வாறு எங்கு பயன்படுத்துவது என்ற வழிகளை வகுத்த பின்பு எமது கால்களைப் பதிப்போம்.“ 

இலங்கை, மூலோபாய முக்கியத்துவம் மிக்க நாடு என்பதை அமெரிக்கா உறுதி செய்து விட்டது. 

அங்கு அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கினால், இலங்கையை தனது செல்வாக்கினுள் வைத்திருக்க முடியாது என்ற நிலை அமெரிக்காவுக்கு உருவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கையில் கால் பதிப்பதற்கு, ஏற்ற அக,புற காரணிகளைக் கண்டறிந்து, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற பரிசோதனையில் தான் இப்போது அமெரிக்கா இறங்கியுள்ளது. இதற்கான ஒரு கருவியாகவே இந்தத் தீர்மானமும் அதன் வெற்றியும் அமைந்துள்ளது. 

ஆனால் இது அமெரிக்காவின் தலையீட்டுக்கு முற்றிலும் போதுமானதா என்பதை இப்போது உறுதியாகத் தீர்மானிக்க முடியாது. 

இந்தக் கட்டத்தில், “தலையீட்டுக்கான எந்த அக, புறக் காரணியும் இல்லாது போனால், புதியவற்றை உருவாக்கி அல்லது போதியளவில் இல்லையென்றால், இருப்பதைப் பெரிதாக்கி“ என்ற வரிகளின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். 

இப்போது அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கு போர்க்குற்றங்கள் என்ற காரணமே போதுமானது. 

அதை வைத்துத் தான் அரசாங்கத்தைப் பணிய வைக்க அமெரிக்கா முனைகிறது. 

இந்த விடயத்தில் அமெரிக்கா தோல்வி காணுமாக இருந்தால், இன்னொரு உள்நாட்டுப் போர் வெடிக்கலாம் என்ற பிளேக்கின் எச்சரிக்கையும் சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. 

அமெரிக்காவே கூட இன்னொரு மோதலுக்கான விதையை விதைக்கலாம். 

அது தமிழர்களிடம் இருந்தும் தோன்றலாம், சிங்களவர்களிடம் இருந்தும் தோன்றலாம். 

அமெரிக்க நலன் பற்றிக் கருத்தில் எடுக்கப்படும் போது அங்கே தமிழர் அல்லது சிங்களவர்களின் நலன் பற்றி பேச்சுக்கள் எழாது. 

இருப்பதைக் கொண்டோ அல்லது இல்லாததை உருவாக்கியோ, அல்லது சிறிதாக இருப்பதை பூதாகாரமாக்கியோ அமெரிக்கா நகர்வுகளை மேற்கொள்கிறது- மேற்கொள்ளும். 

இதற்கு வசதியாக, விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்கள் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கும் அழைப்பை விடுத்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றனர். இவையெல்லாம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி விடவே போகிறது. அண்மையில் ஒரு பேட்டியின்போது மிகவும் நெருக்கடியான நிலையிலேயே இலங்கையுடனான உறவுகள் இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் கூறியுள்ளார். இதனை அவர் மகிழ்ச்சியுடன் கூறவில்லை. உறவுகள் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு தான் கூறியுள்ளார். ஆனால், இலங்கை அரசின் போக்கும், அதன் பிரசாரங்களும் அமெரிக்காவுடனான உறவுகளை புதுப்பிக்கும் எண்ணத்தைக் கொண்டதாகத் தெரியவில்லை. 

இன்போ தமிழ் குழுமம்  
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment