கொழும்பு: போர்க் குற்றங்கள் மற்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை படையினரைக் காட்டிக் கொடுத்துவிட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாக ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர் தளபதியாக இருந்தபோதுதான் விடுதலைப்புலிகளுடன் இறுதிக்கட்ட போர் நடந்தது. தமிழர்களை கொன்று குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். போர் முடிந்ததும் அதிபர் ராஜபக்சேகாவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அதிபரின் உத்தரவுகளை நிறைவேற்ற பொன்சேகா மறுத்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து சரத் பொன்சேகாவை ராஜபக்சே அரசு கைது செய்தது. அவர் மீது தேச துரோக வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளியது. ஜாமீனில் வந்த அவர் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருவருமே இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர்கள். இப்போது ஐ.நா. தீர்மானத்தால் போர்க்குற்ற நடவடிக்கைகள் விசாரணைக்கு வர இருப்பதால் சரத் பொன்சேகா நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
ஐ.நா. தீர்மானம் குறித்து சரத் பொன்சேகா கூறி இருப்பதாவது:
ஜெனிவாவில் ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதால் நாட்டின் கவுரவம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதை சரிக்கட்ட இலங்கையில் சிங்கக்கொடிகளை ஏற்றுங்கள் என்று கூறி அரசு திசை திருப்ப பார்க்கிறது. சிங்கக் கொடிகள் அல்ல, அதற்கு பதிலாக கறுப்புக்கொடிகளையே பறக்க விடவேண்டும். சர்வதேச நாடுகள் முன் இலங்கை மண்டியிட்டு விட்டது. இலங்கை அரசாங்கம் தான் நாட்டை சர்வதேச சமூகம் முன் மண்டியிடச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் படை வீரர்களையும் அரசாங்கம் காட்டிக் கொடுக்க முயற்சி செய்து வருகிறது. படை வீரர்களை காட்டிக்கொடுத்து விட்டு அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்றார் அவர்.
ஐ.நா. பிரதிநிதிகளுக்கு தடை
இதற்கிடையே ஐ.நா. தீர்மானம் குறித்து இலங்கை சென்று கலந்துரையாட ஐ.நா. (சர்வதேச நாடுகளின்) பிரதிநிதிகள் திட்டமிட்டு இருந்தனர். இவர்களுக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு முன்பு அறிவித்து இருந்தது. ஆனால் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு காரணமாக இலங்கை தனது முடிவை தளர்த்திக் கொண்டது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மட்டும் இலங்கை வரலாம் என்று அனுமதித்துள்ளது.
அவர் செல்லும் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்வதா, நிராகரிப்பதா என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லட்சுமண் அபயவர்த்தனா தெரிவித்தார். ஐ.நா. தூத்துக்குழு நாட்டுக்கு வரும்போதுதான் இதுபற்றி அரசாங்கம் முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment