ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராஜதந்திரப் போர்


ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 19-ஆவது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தொடர் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவந்துள்ள போதிலும் இவ்வருடம் இடம்பெறும் இக்கூட்டத்தொடர் தமிழர்களுக்கு முக்கிய விடயமாக தென்படுகிறது. ஈழத்தில் யுத்தம் முடிவுற்று ஏறத்தாள மூன்றாண்டுகள் ஆகியும் சிறிலங்கா அரசு உலக நாடுகளை ஏமாற்றும் வேலைகளையே செய்து வருகிறது. 

தனது நாடு நியமிக்கும் உண்மையைக் கண்டறியும் குழு குற்றவாளிகளை இனங்காணுமெனக் கூறி இரண்டு வருடங்களை வீணடித்தது சிறிலங்கா அரசு. இரண்டு வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்த அறிக்கை சிறிலங்கா அரசை காப்பாற்றும் வகையிலேயே அமைந்தது. இப்படியான ஏமாற்று வேலைகளைச் செய்துவந்த சிறிலங்கா அரசிற்கு தலையிடியாக இருந்துவந்த நாடுகளில் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா முதன்மையானவை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டுமென்று சிறிலங்கா அரசை பல வழிகள் ஊடாக நிர்ப்பந்தித்து வந்தது அமெரிக்க அரசு. அமெரிக்காவின் அழுத்தத்தை அசட்டை செய்தது சிறிலங்கா அரசு. அமெரிக்க அரசிற்கு எதிராக சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் அரசின் முக்கிய கூட்டணிக் கட்சிகள் பல போராட்டங்களைச் செய்தது மட்டுமின்றி அமெரிக்க அரசை வசைபாடிக்கொண்டே வந்தன. சிறிலங்கா அரசுடன் நேரடியான இராஜதந்திரப் போரைத் தவிர்த்தே வந்தது அமெரிக்கா. பல வழிப் போராட்டங்கள் தோல்வியில் முடியவே சிறிலங்காவிற்கு எதிரான இராஜதந்திரப் போரை ஜெனீவாவில் அமெரிக்க அரசு ஆரம்பித்தது.

சிறிய குட்டித் தீவான சிறிலங்கா என்கிற நாடு உலகின் முதன்மையான பொருளாதார மற்றும் இராணுவ ஆதிக்க சக்தியான அமெரிக்காவைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு இராஜதந்திரப் போரை நடத்துகிறது என்றால் நிச்சயம் சிறிலங்காவிற்கு பின்புறத்தில் பல பலம் பொருந்திய சக்திகள் இயங்குகிறன என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. ரஷ்யா, சீனா, கியூபா, ஈக்குவடோர், ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவளிக்கும் என்கிற நிலை நிலவுகிறது.  

இவ் மனித உரிமைச் சபையில் 47 நாடுகள அங்கம் வகிக்கின்றன. 13 ஆபிரிக்காவிற்கும், 13 ஆசியாவிற்கும், 8 லத்தின் அமெரிக்காவிற்கும், 7 மேற்கு ஐரோப்பா மற்றும் பிற வளர்ந்த நாடுகளுக்கும், 6 கிழக்கு ஐரோப்பாவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 26 இடங்கள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை பலம் இல்லாவிட்டால் அமெரிக்க அரசினால் முன்வைக்கப்பட இருக்கும் பிரேரணை தோல்வியிலேயே முடிவுறும்.

அமெரிக்க மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் சிறிலங்கா அரசிற்கு எதிராக வாக்களிக்கும் என்பது முடிவாகிவிட்டது. ஏறத்தாள 20 நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக வாக்களிக்கும் நிலை நிலவுகிறது. சிறிலங்கா அரசு இதனை நன்கே அறிந்து தனது இராஜதந்திர வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளது. தாய்லாந்த், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் உதவியுடன் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் சிறிலங்காவின் அரச பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆபிரிக்க நாடுகளின் சில பிரதிநிதிகளை ஜெனீவாவில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சிறிலங்காவின் பிரதிநிதிகளுக்கு ஏமாற்றம் தரும் செய்திகளே கிடைத்தது. இதனைச் சரி செய்வதற்கு ஒரே வழி அந்நாடுகளுக்கு நேரிலேயே சென்று அந்நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே சிறந்தது என்பதை உணர்ந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இரவோடு இரவாக ஜெனீவாவிலிருந்து புறப்பட்டு ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டும் வேலைகளைச் செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் நிலைப்பாடே முக்கியமானதாக உள்ளது.  வாய்மூடி மௌனியாகவே இந்திய நடுவன் அரசு இதுவரை காலமும் இருந்து வருகிறது.  ஏழு கோடித் தமிழர்களைத் தனது நாட்டில் வைத்திருக்கும் இந்திய நாடு 40 இலட்சம் தமிழர்கள் வாழும் ஈழ நாட்டின் மீது சிங்கள அரச படைகள் மேற்கொண்ட இனவெறித் தாக்குதலைக் கண்டிக்காமல் மௌனம் காத்தது மட்டுமின்றி மறைமுகமாக சிங்கள அரசிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வந்தது.

இரட்டை வேடம் போடும் இந்தியா

சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்த்து சிறிலங்காவிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க சமீபத்தில் தெரிவித்தார்.  இவருடைய கூற்று வெளிவந்தவுடன் தமிழகத்தில் சற்று வெகுவாகவே இந்திய நடுவன் அரசிற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியவுடன் இது குறித்து இந்திய அரசு உடனடியாக முடிவெடுக்காது என்று அறிவித்தது.

கடந்த காலங்களில் இந்திய நடுவன் அரசிற்கு பல உறுதிமொழிகளைச் சிறிலங்கா அரசு அளித்தது. அவற்றில் ஒன்றைக் கூட சிறிலங்கா அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இது இப்படியிருக்க இந்தியாவின் சிறிலங்கா மீதான பற்று குறைந்தபாடில்லை. சீனாவிற்கு விசுவாசமாகவே சிறிலங்கா அரசு இன்றுவரை இருக்கிறது. பல சீன நிறுவனங்கள் சிறிலங்காவில் இயங்க அனுமதி அளித்துள்ளதுடன், சிறிலங்கா இராணுவத்துடன் சீனாவின் உளவுத்துறையினர் இணைந்து செயலாற்றுகின்றனர் என்கிற தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்படியாக சிறிலங்கா சீனாவுடன் தோழமை கொண்டு செயற்படுகிறது. மறுபுறத்தில் இந்தியாவிற்கு எதிராக பல காரியங்களை நேரடியாகவே சிறிலங்கா செய்து வருகிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது சிறிலங்காவே தனது அன்பான இளைய சகோதரன் என்கிற பாணியில் செயற்படுகிறது இந்திய நடுவன் அரசு. சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்று கூறிவரும் இந்திய அரசு சிறிலங்கா அரசின் பொய்முகத்தை அறிந்தும் அறியாமல் இருப்பது இந்தியாவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
  
சிங்களப் பத்திரிகையான ராவய என்கிற பத்திரிகையின் 25-ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சமீபத்தில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது: “கடந்த 30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்தினால் நாடு பல்வேறு வகையிலும் பின்னடைவுகளையே சந்தித்தது. இனவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் காணப்படும் சமூகத்தினால் அபிவிருத்திகளை ஒரு போதும் அடைய முடியாது.”

“பயங்கரவாதத்தை ஒழித்தது மட்டுமல்ல எதிர்காலத்தில் நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் ஒன்று மீண்டும் ஏற்படாத வண்ணம் செயற்பட வேண்டியது அவசியமாகும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசை முன்னெடுக்கவில்லை. பொதுமக்களின் முழுமையான ஆதரவும் இராணுவ வீரர்களின் பங்களிப்புமே உள்நாட்டு யுத்தத்தை வெற்றியடைய செய்தது."

அவர் மேலும் பேசுகையில், “சிறிலங்காவிற்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவையில் தீர்மானங்களுக்கு முயற்சிக்கையில் நாட்டில் அனைத்து இன மக்களும் கட்சி பேதங்களை மறந்து அரசாங்கத்தை பாதுகாக்க போராடுகின்றனர். வடக்கு கிழக்கு மக்களும் ஈடுபாட்டுடன் வீதியில் போராட்டம் நடத்தினர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தலைவரினால் மாத்திரம் அனைத்தையும் அடைந்து விட முடியாது. சகல தரப்புகளினதும் பங்களிப்புகள் அரச தலைமைத்துவத்திற்கு அத்தியாவசியமானதாகும். விமர்சனங்களை மாத்திரம் செய்து விட்டு சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்தை கோருவது பயனற்ற விடயமாகும். இதனால் ஒரு போதும் உள்நாட்டு பிரச்சினைகள் தீராது. மாறாக வெளிநாடுகளின் உள்நோக்கங்களே நாட்டில் இடம்பெறும்."

“தற்போது நாட்டில் பல நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுகின்றனர்.  எனவே நாட்டில் தேவையற்ற போராட்டங்களை முன்னெடுப்பது தேவையற்ற பிரச்சினைகளையே தோற்றுவிக்கும். தெரிவுக் குழு ஊடாக இனப்பிரச்சினைக்கும் ஒற்றுமையாக ஏனைய பொது பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முன்வர வேண்டும்" இவாறாக தனது பேச்சில் குறிப்பிட்டார் மகிந்த ராஜபக்ச.

உண்மை என்னவென்று அறிந்த பின்னரும் பொய்களையே கூறி வரும் மகிந்த ராஜபக்ச போன்ற தலைவர்களைத் தலையில் வைத்து தூக்கித் திரியும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றே. சிறிலங்கா அரசின் பொய்மையை கண்டும் காணமல் இந்தியா செயற்படுவது ஆபத்தானது. குற்றம் செய்பவனிலும் விட குற்றத்தை ஊக்கிவிப்பவனுக்கேதான் தண்டனை அதிகம் தர வேண்டுமென்கிற நிலையே பரவலாக இருக்கிறது. அந்த வகையில் சிங்கள அரசிற்கு தண்டனையைப் பெற்றுத்தருவதற்கு முன்னர் சிங்கள அரசிற்கு ஆதரவாக இருந்து கொண்டு அறிவுரைகளைக் கூறும் இந்தியா போன்ற நாடுகளை இனம்கண்டு செயற்படுவதே புத்திசாலித்தனம்.
  
தமிழ்நாட்டை மீறி இந்தியாவினால் எதனைச் செய்ய முடியும்?

தமிழகத் தலைவர்கள் ஓரணியில் திரண்டு இந்திய நடுவன் அரசிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தால் இந்திய அரசினால் தமிழருக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது. ஏட்டிக்குப் போட்டியாக பேசிவந்த தமிழகத்தின் இரு முன்னணி அரசியல் தலைவர்களும் ஒரே கொள்கையுடன் சிறிலங்கா அரசிற்கு எதிராக அமெரிக்க அரசு கொண்டுவர இருக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கும்படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதங்களை அனுப்பியுள்ளது சற்று ஆறுதலான விடயமே. இருப்பினும் கடிதங்களை அனுப்பிவிட்டு ஓய்வெடுக்கும் நேரமில்லை இது. மக்களை ஒன்றிணைத்து அறவழிப் போராட்டங்களை இந்திய அரசிற்கு எதிராக செய்வதே சிறப்பான வழியாகவிருக்கும்.

மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதம் வருமாறு: “இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுடன் இணைந்து, அந்தக் குற்றங்களை புரிந்தோரைக் கண்டறிய வேண்டும் எனவும், அவர்களைப் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தியும் கடந்த ஆண்டு ஜூன் 14 மற்றும் 25-ம் தேதிகளில் தங்களுக்கு கடிதங்களை எழுதினேன்.  மேலும், இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவும், அவர்களுக்கு சுய மரியாதையும், சிங்களவர்களுக்கு இணையாக அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் அனைத்தும் வழங்கப்படும் வரை அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.” 

“இந்த நிலையில், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது. இலங்கைப் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது சாதகமான முறையில் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கருதிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என நம்புவதாக இலங்கையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மனித உரிமை மீறல் குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச்சில் நடைபெறுகிறது. அமெரிக்கா கொண்டு வரவுள்ள இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்று மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா எழுதியுள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளதாவது: “இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டுவரவுள்ளதாகவும்; இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்து அறிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயற்திட்டக் குழுக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவுகூர்ந்திட விரும்புகிறேன்."

தனது கடிதத்தில் மேலும் கலைஞர் எழுதியுள்ளதாவது: "இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேஷிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. அரசை எதிர்க்கின்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 25ஆம் திகதியன்று நியூயோர்க்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் 40,000க்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை இலங்கை இராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது என்றும் வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது."

“இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், 'போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்படுவது சகஜம்தான்' என்று இதயமற்றோர் பாணியில் விமர்சனம் செய்யாமல், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதோடு, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிட விரும்புகிறேன்," என்று கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்களைப் போன்றே தமிழகத்தின் பல தலைவர்கள் கடிதங்களை எழுதியும், அறிக்கை வாயிலாக தமது கண்டனத்தை இந்திய நடுவன் அரசிற்கு தெரிவித்தும் வருகிறார்கள். தமிழகத் தமிழர்கள் ஓன்று திரண்டு இந்தியாவிற்கு எதிராக போராடினால் தமிழர்களை அழித்த சிங்கள அரச பயங்கரவாதத் தலைவர்களுக்கு தண்டனையைப் பெற்றுத்தர முடியும். மாற்றான் தாய் மனப்பாண்புடன் இந்திய நடுவன் அரசு செயற்பட்டால் நிச்சயம் சிறிலங்கா அரசிற்கு எதிராக எந்தவிதமான செயற்பாடுகளையும் உலக அரங்கில் செய்ய முடியாது.

ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தர்மத்திற்கான இராஜதந்திரப் போர் வெற்றியளிக்க வேண்டுமாயின் தமிழகத் தமிழர்களின் ஒருமித்த அறவழிப் போரின் மூலமாக இந்திய நடுவன் அரசிற்கு அழுத்தத்தை கொடுப்பதே ஒரே வழி. ஏழு கோடித் தமிழர்கள் இந்தியாதான் தமது தாய்நாடு என்று கூறுகிறார்கள். இதனை இந்திய நடுவன் அரசு ஏற்றுக்கொள்வது உண்மையென்றால் ஈழத் தமிழர்களை அழித்த சிங்கள அரச பயங்கரவாதிகளுக்குத் தக்க தண்டனையைப் பெற்றுதருவதற்கு மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படப் போகும் பிரேரணையை வெற்றியளிக்க செய்வதே ஒரே வழி. 

எதிர்வரும் 23-ஆம் நாளன்று இடம்பெறவிருக்கும் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை வெற்றிபெற வைத்து தர்மத்தின் பக்கம் நிற்பதே இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுக்குச் சிறப்பாகும்.

அனலை நிதிஸ் ச. குமாரன் nithiskumaaran@yahoo.com
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment