தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தீவிர நெருக்கடிக்குப் பணிந்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ‘தினமணி‘ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய மத்திய அரசு தனது நிலையை இந்திய நாடாளுமன்றத்தில், வரும் வாரம் தெளிவுபடுத்தும் என்றும் இந்திய அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தியில் மேலும், கூறப்பட்டுள்ளதாவது-
இந்தப் பிரச்சினையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி விளக்கி வருவதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்ற நிலையை தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக உள்துறை அமைச்சர் பிரதிபலித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான விவகாரத்தில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலை, அந்தத் தீர்மானத்தில் சில திருத்தங்களைச் செய்து ஆதரவு அளிப்பது போன்ற முயற்சிகளைத் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவிடம் இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்துக் கொண்டு வலம் வரும் சிறிலங்காவின் போக்கு இந்தியாவுக்கு அதிருப்தியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும்இ இந்தியாவின், வலிய வந்து செய்யும் உதவிகளுக்கு உரிய மரியாதையும் மதிப்பையும் சிறிலங்கா கொடுப்பதில்லை என்ற தகவலும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
இந்தநிலையில், சிறிலங்காவுக்கு எதிரான - திருத்தப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அந்நாட்டுக்கு ஒரு "எச்சரிக்கை சமிக்ஞை' அனுப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
"இந்தத் தருணத்தில், சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான நிலையை இந்தியா எடுக்க வேண்டும். அது, ராஜீய ரீதியாக இந்தியாவின் செல்வாக்கைச் சர்வதேச சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள உதவுவதுடன், உள்நாட்டில் சரிந்து வரும் தமது செல்வாக்கையும் சரி செய்து கொள்ள உதவும்' என்ற சிதம்பரத்தின் வாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி ஆகிய மூத்த அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒருபுறம், ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்திய விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் தினேஸ் திரிவேதியை நீக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நெருக்கடி கொடுத்து வருகிறார்.
மறுபுறம், சிறிலங்கா விவகாரத்தில் அந்நாட்டுக்கு அனுசரணையான நிலையை இந்தியா கடைப்பிடித்தால், அது உள்நாட்டு அரசியலில் மேலும் நெருக்கடியைத் தரும் என்றும் சிதம்பரம் விளக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்னேற்றங்களின் பலனாக, ஐ.நா மனித உரிமைகள்பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தில் சில திருத்தங்களுடன் இந்தியா ஆதரவு அளிக்க களம் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment