ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைத் தோற்கடிக்க சிறிலங்கா மேற்கொண்ட நடவடிக்கைள் தொடர்பாக விளக்கமளிப்பதற்கு சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் ஒழுங்கு செய்துள்ளது.
நாளை காலை இடம்பெறவுள்ள இந்த செய்தியாளர் சந்திப்பில், ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் கலந்து கொண்டு விளக்கமளிக்கவுள்ளனர்.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் இந்தக் குழுக்களுக்குத் தலைமையேற்றிருந்தனர்.
71 பேரைக் கொண்ட சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழு நேற்று நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் திடீர்த்தேர்தலுக்கு விமல் வீரவன்ச அழைப்பு
திடீர் தேர்தல் ஒன்றின் மூலம் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், சிறிலங்கா அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காகவும் ஏனைய உலகின் சக்தி வாய்ந்த நாடுகளும் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறிய அவர், இந்தநிலையில் அமெரிக்கப் பொருட்களை பொதுமக்கள் புறக்கணித்து தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் அழைப்பை இன்னமும் ஏற்கவில்லை
சிறிலங்காவுக்கு வருமாறு, மகிந்த ராஜபக்ச அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்னமும் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழின் செய்தியாளர் ஒருவர் ஜெனிவாவில் இருந்து தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் குறிப்பேட்டில் இந்த அழைப்பு இன்னமும் பதிவு செய்யப்படபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரில் வந்து பார்வையிடுமாறு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளதாக சிறிலங்காவின் பதில் வெளிவிவகார அமைச்சர் டியு குணசேகர சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment