அது எண்பத்திநான்காம் ஆண்டாக இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் எதிரெதிராய் சந்தித்துக் கொள்வார்கள். இருவரும் வெவ்வேறு இயக்கங்களின் உறுப்பினர்கள். ஒருவன் சிவா, இன்னொருவன் ஓவியன். ஓவியனோ, சந்திக்கின்ற ஒவ்வொரு தடவையும் முறைப்பான். சிவா தலையைக் குனிந்து சென்றுவிடுவான். ஆனால் இருவரும் முன் பின் அறிமுகமில்லாதவர்கள். சில காலங்களுக்குப் பின்னர், சிவாவும் ஓவியன் சார்ந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டான். இப்போது அவர்களுக்கிடையில் பழக்கம் வளர, புரிந்துணர்வு உருவாகிற்று.
சிவா பிராமண சமூகத்தை சேர்ந்தவன். நிச்சயம் அவனுக்கு இந்தப் போராட்ட வாழ்வு கடினமாக இருந்திருக்கும். தங்குமிடத்தில் எப்போதும் அசைவ உணவே வரும். அவன் சாப்பிடுவதில்லை. கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிரப்புவான். அனேகமாக, அவனது உணவு பூந்தி லட்டுத்தான். இதனால், அவன் அதிகம் செலவழிப்பதாக குற்றச்சாட்டும் அவன் மீது வீழ்ந்தது. அவன் பாவம், அவன் என்ன செய்வான்?
தனது மருத்துவ அறிவைக் கொண்டு முடிந்தவரை தேசத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தன்னை கடுமையாக அர்ப்பணித்தவன். யாழ்ப்பாணம் முழுக்க ஈருருளியில் பயணித்து வேலை செய்வான். தெல்லிப்பளை தொடங்கி வல்வெட்டித்துறை ஈறாகப் பல இடங்களில் முதலுதவி வகுப்புக்கள் எடுத்தான். திலீபனின் உண்ணாவிரத காலத்தில் மாறி மாறி நோயாளர் காவுவண்டியில் தவம் இருந்தான். இந்திய இரணுவ காலத்தில், செஞ்சிலுவை சங்கத்துக்கு சொந்தமான ஒரு இடத்தில் தங்கி இருந்து கடமை செய்தான். அந்த இடத்தில்தான் இயக்கத்தின் சில சந்திப்புகள் யாருக்கும் தெரியாமல் நடக்கும்.யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
ஒருமுறை மன்னாருக்கு, விடுதலைப்போராட்டம் சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் அனுப்பப்பட வேண்டியிருந்தது. சிவாவும் ஓவியனும் அந்தப் பணியைப் பொறுப்பேற்றார்கள். இருவரும் தனித்தனியாக ஈருருளிகளில், பொதிகளை பேருந்து நிலையத்திற்குள் கொண்டுவந்தார்கள். மன்னாருக்கு செல்லவேண்டிய சிற்றுார்தியின் இருக்கைகளைப் பிரட்டி அதற்குக் கீழ் யாரும் அறியாமல் வைத்தார்கள். அர்ச்சுனன், பொதிகளைக் கொண்டுபோய் சேரக்கவேண்டியவன், எதுவும் தெரியாதவன் போல ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு, கண்களால் சைகை காட்டிவிட்டு இருவரும் வெவ்வேறு திசையில் பிரிந்து போனார்கள். பணி நிமித்தம் பழகிக்கொண்ட சிவா,அர்ச்சுனன், ஓவியன் ஆகிய மூவரும் இப்போது இணைபிரியா நண்பர்கள்.
இரண்டாம் ஈழப்போரின் ஆரம்ப காலம். நெருக்கடிகள் காரணமாக யாழ் வைத்தியசாலை இயங்கவில்லை. இதனால் ஊர்களில் மருத்துவ வீடுகளை அமைத்து சேவை செய்து வந்தனர். மானிப்பாய் மருத்துவ வீடுகள் சிவாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. ஓவியன் வட்டுக்கோட்டையின் மருத்துவ வீடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டான். அர்ச்சுனன் மன்னாரில் தங்கியிருந்தான். சிவாவின் வீடுகள் எப்போதும் சுத்தமாக இருக்கும். இதனால் சுத்தம் என்றால் எப்போதும் சிவாவைத்தான் உதாரணம்காட்டி கதைப்பார்கள். அவ்வளவிற்கு அவனது வேலை நேர்த்தியாக இருக்கும். சிறிது காலத்தில், சிவா யாழ்ப்பணத்தில் ஜேம்ஸ்,ரோய் மருத்துவ வீடுகளுக்கு பொறுப்பாய் செல்ல ஓவியன் சுதுமலை வீடுகளுக்கும் யாழில் இருந்த அருணா வீட்டுக்கும் (களமுனையில், குறைந்த நிலையில் காயமடைந்து வரும் போராளிகளை விரைவில் குணப்படுத்தி மீள களமுனைக்குச் செல்லத் துணைபுரியும் பணிமனை) பொறுப்பாய் வந்தான்.
1992இல், மருத்துவ பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த மாத்தையா அவர்களால் சில காரணங்களைக் காட்டி சிவா இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டான். பணிநீக்கம் அவனை வெகுவாகப் பாதித்தது. நொந்துபோய், எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். அவனால் ஓவியனையும் பார்க்க முடியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், 1997 ஆம் ஆண்டு, ஓவியன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பற்சிகிச்சை வழங்க ஒலுமடுவில் இயங்கிய பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருவான் என்ற செய்தி சிவாவுக்க கிடைத்தது. உடனடியாகப் புறப்பட்டு வந்து. ஓவியனைச் சந்திக்க ஆவலோடு காத்திருந்தான் சிவா.எப்போதும் விடுதலை போராட்டத்துடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான். அதற்கான சரியான சந்தர்ப்பம் இன்றி சோர்வுடன் காணப்பட்டான். சிவாவைப் பற்றி நன்கறிந்த ஓவியன், அவனைச் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நடமாடும் மருத்துவ சேவையின் உதவி மருத்துவராக இணைவதற்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்து கொடுத்தான்.
சிவா வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி மக்களுக்கு நிறைவான சேவை வழங்கினான். கிராம சுகாதார வழங்குனர்களின் கல்விபுகட்டலிலும் சிறந்த பங்கு வகித்தான். வசதிகள் குறைந்த வன்னி மண்ணில், அந்தக் காலங்களில் மக்களுக்கு சேவையாற்றிய அவன் ”மனிதத்தின்” உச்சமாக தெரிகிறான்.
சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில்தான் இருந்தான். நான்காம் ஈழப்போர் ஆரம்பமாவதற்கு சிலமாதங்களின் முன்னர் வன்னிக்கு வந்திருந்தான். நேரடியாய் ஓவியனிடமே வந்து, யாழ்ப்பாணத்தின் அப்போதைய நிலையை விளக்கி, மீண்டும் அங்கு செல்ல விரும்பவில்லை என்றான். ஓவியன் அவனை மீளவும் இயக்கத்தில் இணையும்படி கேட்டான். ஆனால், சிவா விரும்பவில்லை. அப்போது சிவா திருமணம் முடித்திருந்தான். அவனது மனைவி யாழில் ஆசிரியையாய் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
சிவா ஓவியனுடன் கலந்தாலோசித்து மனநோயியல் சிகிச்சை செய்ய முடிவெடுத்தான். அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடமை செய்ய தொடங்கினான். இரண்டு கிழமைக்கு ஒரு தடவை தனது பணி சம்மந்தமான அறிக்கைகளை ஓவியனிடம் கொடுத்து விவாதித்து வந்தான். இக்காலப்பகுதியில், இவனது மனைவி, சோதனைச் சாவடியில் இருந்த சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி சன்னம் தற்செயலாகப் பாய்ந்து, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் காப்பற்ற முடியவில்லை, சிகிச்சை பலனளிக்காது இறந்துபோனார். மனைவி காயப்பட்டிருந்த காலத்தில் கூட அருகில் இருக்க முடியாமல் போனது சிவாவை அதிகமாகப் பாதித்தது. வலிகளை மறைத்தபடி வலம்வருவான்.
இறுதிவரை மனநோய் சிகிச்சையை கிளி, முல்லை என, உந்துருளியில் பயணித்து வழங்கி வந்தான். இறுதிக்கட்டப்போரின் இழப்புகளால் மனமுடைந்து போயிருந்தான். 2009ம் வருடம் சித்திரை இருபதாம் நாள் மாத்தளன் இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் முற்றாக உடைந்து போனான். இரண்டு நாட்களின் பின்னர், 2009 சித்திரை இருபத்தி இரண்டு அன்று வலைஞர்மடத்தில் இருந்த ஓவியனைச் சந்திக்க வந்த வேளை, வெறும் பத்து மீற்றர் தூரத்தில் கொத்துக்குண்டுக்கு இரையாகி தனது மக்களையும், நேசித்த நாட்டையும் விட்டுப் பிரிந்தான்.தேசப்பற்றோடு தனது வாழ்க்கையை அரப்பணித்த அவனது பயணம் அங்கே நிறைவடைந்தது. ஓவியனால் சிவாவின் இறப்பைத்தான் உறுதிப்படுத்த முடிந்தது. தனது கண்முன்னே கருகிப்போன நண்பனின் சாவு அவனுக்கு என்றைக்குமே மறக்க முடியாத கணம்தான். விடுதலைப்புலிகளால் நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கப்பட்டு அவனது உடல் முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்டது.
- நிரோன்-
“
0 கருத்துரைகள் :
Post a Comment