உலக நாடுகள் மத்தியில் இன்று நிலவும் பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகள் கடும் சிக்கல் நிலைக்கு உள்ளாகியுள்ளன . ஒரு நாட்டின் இயக்கத்துக்கு உலகின் ஏனைய நாடுகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பு மிக்க அவசியமானதொன்றாக மாறியுள்ளது.
இலங்கையின் இன்றைய அரசியலில் சர்வதேச சமூகம் என்ற வார்த்தை பெருமளவில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் சர்வதேச சமூகம் என்ற வார்த்தை யாரை அடையாளப்படுத்துகிறது என்பதை எம்மில் பெரும்பாலானோர் அறிந்திலர். உலகின் சகல இன மக்களையும் உள்ளடக்கிய மக்கள் கூட்டமே சர்வதேச சமூகம் என்றாகிறது. இதைவிடுத்து குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது சில நாடுகளையோ மட்டும் சர்வதேச சமூகம் என்ற பெயரால் அடையாளப்படுத்த இயலாது. அந்த வகையில் இலங்கையர்களாகிய நாமும் கூட சர்வதேச சமூகத்துள் உள்ளடக்கமே. சர்வதேச சமூகம் என்ற கோட்பாட்டை நிர்வகிக்க, ஏற்கப்பட்ட பொதுச் சட்டக்கோவையொன்று நடைமுறைப்படுத்தப்படாத போதிலும் பெரும்பாலான இனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாய நடைமுறைகளால் அது நிர்வகிக்கப்படுகிறது.
குறிப்பிட்டதொரு அமைப்பு வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட வேண்டுமானால், அதன் உறுப்பினர் அவ்வமைப்பின் நோக்கங்களை எட்டுவதற்காக தம்மிடையே ஒன்றி ணைந்து செயற்பட்டாக வேண்டும். அமைப்பின் பொது நோக்கங்களைப் புறம்தள்ளி உறுப்பினரொருவர் செயற் படுவாரானால் குறிப்பிட்ட அந்த உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமை அந்த அமைப்புக்கு உள்ளது. அதேபோன்று ஏற்கப்பட்ட உலகப் பொதுநோக்கமொன்றுக்கு எதிராக ஒரு நாட்டின் அரசு செயற்படுமானால் குறிப்பிட்ட அந்த உறுப்பு நாட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமை சர்வதேச சமூகம் என்ற பெயருக்குள் அடங்கும் ஏனைய நாடுகளின் அரசுகளுக்கு உள்ளது. அத்தகைய நடவடிக்கை "தடை" என்ற விதத்தில் அடையாளப்படுத்தப்படும்.
சர்வதேச சமூகம் என்ற பெரும் ஜலசமுத்திரத்தில் இலங்கை ஒரு நீர்த்துளிக்கு ஒப்பானதே. எனவே இலங்கை சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளைப் பேணும் அ÷தவேளை, எமது அண்டை நாடான இந்தியா அதில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. இந்தியா ஒரு பெரு விருட்சம் எனக் கொண்டால் இலங்கை அந்த விருட்சத்தில் பூத்திருக்கும் ஒரு மலரை ஒத்ததே. விருட்சத்திலிருந்து மலர் உதிர்ந்து விழும் வேளை அது தன் முக்கியத்துவத்தை இழப்பது போன்று இந்தியாவுடனான இணக்கப்பாடு அற்றுப்போகுமானால் இலங்கை தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும்.
இலங்கையுடன் ஒப்பிடும்போது இந்திய சகல துறைகளிலும் தன்னிறைவு மட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைப் பொதுமக்களது முக்கிய உணவுப் பாவனைப் பொருள்களில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்தே இறக்குமதியாகின்றன. இலங்கையில் பாதுகாப்புப் படையினரின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய யுத்த உபகரணங்களில் பெரும்பாலானவை இந்தியத் தயாரிப்புக்களே. யுத்த வலுவிலும்கூட இந்தியா அணுத்திறன் கொண்ட பல நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை பூகோள ரீதியில் இந்தியாவுக்கு மிக அண்மையில் இருப்பதால் தேவையானால் இந்தியாவால் இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வாய்ப்பும் உள்ளது.
இலங்கை சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளைப் பேணும் வேளை இந்தியாவுடனும் நட்புறவைப் பேண வேண்டியுள்ளதன் அவசியம் இதன் மூலம் தெளிவாகிறது. ஆனால் இலங்கையின் வெளியுறவுக்கொள்கை ஒருபோதும் பக்கச்சார்பான வகையில் அமைதல் ஆகாது. அந்த வகையில் இலங்கை, வெளியுறவுக் கொள்கை விடயத்தில் நடுநிலைத் தன்மையைப் பேண வேண்டியது முக்கியமானதாகும். குறிப்பிட்டதொரு முக்கியமான சர்வதேசச் சிக்கலொன்றில் இலங்கை ஒரு தரப்புச் சார்ந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்படுமானால் குறிப்பிட்ட சிக்கலுடன் சம்பந்தப்பட்ட மறு தரப்பின் பகையைத் தேடிக்கொள்ள நேர்வது இயற்கையே. அந்த நிலையில் தேவைப்படுபவை கிட்டும் வேளை, வேறு சிலவற்றை இழக்கும் நிலை உருவாகும். சர்வதேச ரீதியிலான தொடர்புகளைப் பேணும் வேளையில் நாட்டின் ராஜதந்திரிகள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் இவையேயாகும். இத்தகைய வேளைகளில் ஆகக் குறைந்த அளவில் நட்டத்தை எதிர்கொண்டு அதியுச்ச இலாபத்தை ஈட்டும் விதத்திலான ராஜதந்திரச் செயற்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவது பயன்விளைவிக்க வல்லதாகும்.
குறிப்பிட்டதொரு நாடு எமக்குச் சார்பானதா? அல்லது எதிரானதா? என்பதை ஒரு தரப்பால் மட்டும் தீர்மானித்து விட இயலாது. சம்பந்தப்பட்ட நாட்டின் விருப்பமும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. திருமணம் குறித்து முடிவெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் வழங்கப்படுமானால் சகல ஆண்களும் ஐஸ்வர்யா ராயையே மணப்பதென முடிவெடுக்கக் கூடும். ஆதலால் முடிந்த அளவுக்கு இரு தரப்பு உறவுகளைப் பேணுவதன் மூலம் பிற நாடுகளுடனான நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டியது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அரசுகளுக்கு மிக அவசியமாகும்.
இன்றைய அரசியலரங்கில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் மற்றொரு முக்கிய விடயம் இலங்கையுடனான சீனாவின் நெருக்கமாகும். சீனாவின் இலங்கை மீதான தலையீடு குறித்து ஆராயும் போது சீனா அரசியல் இலாப மீட்டும் நோக்கில் இலங்கையுடன் கடும் நெருக்கத்தைப் பேணுவதாகக் கருத முடியாதுள்ளது. பிராந்திய நல்லிணக்கம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே சீனாவும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகக் கருதமுடிகிறது. அந்த நோக்கத்தின் உள்ளக எத்தனம் சில வேளை பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடும்.
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க உதவி வழங்கிய சீனா, பாகிஸ்தானின் துறை முக நிர்மாணத்துக்கும் உதவி வருகிறது. இதன் மூலம் சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றி வளைத்து தனது கடற்பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்குடன் செயற்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. இதன் விளைவு கடைசியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பெரும் போர் ஒன்றுக்கும் வழிவகுக்கலாம். ஆதலால் இலங்கை பின்பற்றும் வெளியுறவுக் கொள்கை நடுநிலையானதாக அமைய வேண்டியுள்ளது என்பது பல சர்வதேச அரசியல் விமர்சகர்களது கருத்தாகும்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளால் ஐம்பது ஆண்டுகளுக்குள் அபிவிருத்தி அடைந்த நிலையை எட்ட முடிந்தது. ஆனால் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற அடைமொழியுடன் இருந்து வருகிறது. இன்னமும் அபிவிருத்தி அடைந்த நாடு என்ற நிலையை இலங்கையால் எட்டமுடியவில்லை. இந்தப் பின்னடைவுக்குக் காரணமாக நாடு சுதந்திரம் அடைந்த நாள்முதல் இன்றுவரை பதவியிலிருந்த அரசுகள் பின்பற்றி வந்த தவறான வெளியுறவுக் கொள்கையைக் குறிப்பிட இயலும். எனவே நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் நாட்டின் ராஜதந்திர விற்பன்னர்களின் உதவியுடன் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்ததொரு நாடு என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்குடனான வெளியுறவுக் கொள்கையை வகுத்து செயற்படவைக்க முயலவேண்டும். அத்தகைய நோக்கத்தை எட்டும் விதத்தில் சர்வதேச சமூகத்துடனான நல்லிணக்க, நட்பு ரீதியிலான தொடர்புகளைப் பேண வழி வகை செய்யப்படுதல் இன்றைய காலத்தின் தேவையாகும். ஆட்சி யாளர்கள் இது குறித்து அக்கறை காட்டிச் செயற்பட முன்வருவார்களா?
0 கருத்துரைகள் :
Post a Comment