அண்ணல் மகாத்மா காந்தியை கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றான். காந்தியின் மறைவு தொடர்பில் உலகம் முழுவதிலும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. சீன அறிஞர் ஒருவர் தனது இரங்கல் செய்தியில்,‘ மகாத்மா காந்தி என்றொரு மனிதர் இந்த உலகில் வாழ்ந்தது உண்மையா?என்று எதிர்கால சமூகம் கேட்கும்’ என்றார். ஒரு தலைவன்-தியாகி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காந்தி நல்ல எடுத்துக்காட்டு. எங்களிடமும் தந்தை செல்வநாயகம் ஈழத்தின் காந்தியாகப் போற்றப்பட்டார்.
அத்தகைய பெருந்தகையின் பிறந்த நாள் இன்று. அந்தத் தியாகியின் - தன்னலமற்ற பெரும் தலைவனின் பிறந்தநாளில் அவர் எப்படி வாழ்ந் தார்? என்ன செய்தார்? என்பதை மீட்டுப் பார்ப்பது காலவிரயம். மாறாக தந்தை செல்வநாயகம் போன்ற தலைவர்கள் எங்களுக்கு கிடைப்பார்களா? என்பது பற்றி அவரின் பிறந்த நாளில் சிந்திப்பதே பொருத்துடையதாகும். ஈழத் தமிழ் இனம் அரசியல் பலவீனம் உடைய சமூகமன்று.
அரசியலுக்காகஇ தமிழ் இனத்தின் உரிமைக்காக, தங்கள் உயிரையும் தியாகம் செய்தவர்கள் வாழ்ந்த பூமி இது. ஆனால் இன்று அரசியல் என்றாலே அது வெறுப்புக்குரியதாகி விட்டது.அதற்குக் காரணம் என்ன? தலைவர்களிடம் தியாகம் இல்லை.நேர்மை இல்லை.நீதி இல்லை. அப்படியானால் எப்படித்தான் சிறந்த தலைவனாகுவது? இப்போதுகூட தந்தை செல்வநாயகத்தின் உருவப்படத்தை தேர்தல் பிரசாரத்தின் மூலக் கருவியாக எடுத்துக் கொள்கிறார்கள். தந்தை செல்வநாயகத்தின் உருவப்படத்தை தேர்தல் பிரசாரத்தில் முதன்மைப்படுத்துவதன் மூலம் அவரின் கொள்கையில், அவரின் பக்குவத்தில், அவரின் அர்ப்பணிப்பில் நாமும் பயணிக்கின்றோம் என்பது பொருள்.
ஆனால்இ தந்தை செல்வாவின் உருவப்படத்தை தேர்தல் காலங்களில் பிரசாரத்தின் கருவியாகப் பயன்படுத்துவோர் தங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும். அந்த தந்தையின் வழியில் நாம் இயங்குகிறோம் என்று. இல்லவே இல்லை.எல்லாம் சுயநலம். பதவிமோகம், நடிப்பு போலி வேடம் இப்படி ஒரு நிலைமை இருக்கையில், எங்களுக்கு எப்படி விடிவு சாத்தியமாகும்? தலைவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள் என்ற சமகாலக் கருத்தியலுக்கு யாம் ஒரு போதும் உடன்பாடில்லை. உண்மையில் சிறந்த தலைவர்கள் பிறக்கிறார்கள். அப்படியான தலைவர்கள் எங்கள் மண்ணிலும் பிறக்க வேண்டும் என்று தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று பிரார்த்திப்போமாக.
வலம்புரி
0 கருத்துரைகள் :
Post a Comment