ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரவுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் கங்கணம் கட்டிச் செயற்படும் அமெரிக்கா, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா. இதற்கமைய தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிரேரணையை ஜெனிவாவில் நிறைவேற்ற ஜிம்மி கார்ட்டர் முழுவீச்சில் செயற்பட்டு வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
"எமது முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டவராவார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதால் இதுவரை பல நாடுகள் எமது பிரேரணையை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளன.
எமது இராஜதந்திர செயற்பாடுகளில் இது பெரும் ஊக்கத்தையும் தந்துள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் நேற்று மாலை "உதயனு'க்குத் தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராவார். உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்கு அவர் பெரிதும் உதவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராளி என்று வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவை தலைமையாகக் கொண்ட "த எல்டர்ஸ்' அமைப்பு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் ஆதரிக்க வேண்டுமென கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பில் ஜிம்மி கார்ட்டரும் ஒரு முக்கியமான உறுப்பினர் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு எதிரான தனது பிரேரணையை ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா முன்வைத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை இது தொடர்பிலான உப மாநாடொன்றை அது நடத்தியது. இந்த உப மாநாட்டில் 25 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் கலந்துகொண்ட மேற்கு நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியா ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்தது.
மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா. அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் தமிழர் அமைப்புப் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இலங்கை அரசின் சார்பில் முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகருமான மொகான் பீரிஸ் கலந்து கொண்டார்.
இதன் போது சபையில் சமர்பிக்கப்பட்ட பிரேரணை குறித்த கருத்துக்களை அமெரிக்கா கேட்டறிந்து கொண்டது. அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்த நாடுகளில் நோர்வே, சுவிஸ், பிரான்ஸ், டென்மார்க், ஹ்ங்கேரி, போலந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, பிரிட்டன், ஒஸ்ரியா, கனடா, போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தன.
பாகிஸ்தான், ரஸ்யா, கியூபா, சீனா, எகிப்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, இந்தோனிசியா, சிம்பாவே ஆகிய நாடுகள் தமது எதிர்பை வெளியிட்டன. மேற்குறிப்பிட்ட நாடுகளில் கனடா மற்றும் சிம்பாவே போன்றன ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் இல்லாத நாடுகளாக உள்ளன. குறிப்பாக அணிசேரா நாடுகளே அமெரிக்காவின் குறித்த பிரேரணைக்கு எதிர்ப்பினைக் காட்டி வருகின்றன.
இந்தியா எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனத்தைக் கடைப்பிடித்தது. மேலும் குறிப்பிட்ட சில நாடுகள், இந்த விவகாரத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும் எனக் கூறியிருந்தன.
அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகள், இந்தப் பிரேரணையை கொண்டு வருவதற்குப் பொருத்தமான தருணம் இதுவல்லவென தெரிவித்துள்ளன.
0 கருத்துரைகள் :
Post a Comment