அவர் வழியிலேயே பதிலடி கொடுக்க முனையும் புதுடெல்லி!


நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றிய விவாதங்கள் மீண்டும் அரசியல் மட்டத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதுடெல்லி அழைப்பு விடுத்த பின்னர், தெரிவுக்குழு பற்றிய செய்திகள் அதிகளவில் வெளியாகின்றன. புதுடெல்லியில் இருந்து திரும்பியதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார் மூத்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. தெரிவுக்குழுவில் இணையுமாறு இந்தியா அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற நம்பிக்கை தான் அவரது இந்தக் கருத்துக்கான காரணம். ஆனால், தெரிவுக்குழுவில் இணையுமாறு இந்தியா தமக்கு அழுத்தங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று இரா.சம்பந்தன் புதுடெல்லி செல்வதற்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த பின்னரும் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லி அழைத்தது, இலங்கை அரசுடனான பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்துக் கலந்துரையாடுவதற்கே என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் அதிகாரப்பகிர்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அரசியல்கட்சிகளுடன் நடத்தும் தொடர் கலந்துரையாடலின் ஒரு அங்கமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பர்தீன் கூறியிருந்தார். அதேவேளை, தொடர்ந்தும் கூட்டமைப்புடன் இந்தியா பேசும் என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார். 

இருதரப்பையும் மீண்டும் பேசவைத்து இணக்கப்பாடு ஒன்றை எட்ட வைப்பதற்கான இந்தியாவின் முயற்சியே இது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தெரிவுக்குழுவில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைத்தலும், இருதரப்புப் பேச்சுக்களை மீளத்தொடங்குவதற்கு இலங்கை அரசை இணங்க வைக்க வைத்தலும் தான் இப்போது இந்தியாவினது முக்கிய பணியாகத் தெரிகிறது. தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வந்தால், இருதரப்பு பேச்சுக்களை மீளத் தொடங்கலாம், இரண்டையும் சமநேரத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளதாக கடந்தவாரம் செய்திகள் வெளியாகின. ஆனால் அது உறுதியாக வெளிப்படுத்தப்படவில்லை.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், எல்லாவற்றையுமே தெரிவுக்குழுவில் பேசியே தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதற்கு அப்பால் எதையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. ஏனென்றால், தெரிவுக்குழுவில் பெரும்பான்மையாக இருக்கப் போவது அரசதரப்புத் தான், அதைவிட சிங்களத் தரப்புத் தான். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இருந்து தமிழருக்கு சாதகமான தீர்வு ஒன்று உருவாகமாட்டாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அச்சமாக உள்ளது. அதைவிட, ஏற்கனவே மாகாணசபைகளுக்கு 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை தெரிவுக்குழு மூலம் அரசாங்கம் பிடுங்கிக் கொண்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது. 

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுப்பதில்லை என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. அதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அவரது அமைச்சர்களும் வெளிப்படையாகவே கூறினாலும் கூட, அரசியலமைப்பில் கைவைத்து மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக இல்லை. காரணம் அந்த 13வது திருத்தச்சட்டம் இந்தியாவின் அறிவுறுத்தலின் பேரில் உருவாக்கப்பட்டது. அதை அரசாங்கம் தன்னிச்சையாக நீக்க முயற்பட்டால், இந்தியாவின் விரோதத்தை சம்பாதிக்க நேரிடும். 13வது திருத்தத்துக்கு அமைய அதிகாரப்பகிர்வு வழங்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கும் போது, தன்னிச்சையாக அதை நீக்கமுடியாது. ஆனால், 13வது திருத்தச் சட்டத்தின் படி மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பிடுங்கிக் கொள்வதே அரசின் இப்போதைய குறியாக உள்ளது. தெவிநெகும கூட, மாகாணசபைகளின் காணி அதிகாரங்களை பறித்துக் கொள்வதற்கான ஒரு சட்டம் தான். (தமிழரின் உரிமை மறுப்பின் உச்சக்கட்டம் இது....) அதுபோன்று காணி, பொலிஸ் அதிகாரங்களையும் பறித்துக் கொள்வதிலேயே அரசாங்கம் குறியாக உள்ளது. இதற்கான களமாக தெரிவுக்குழுவை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. காரணம் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தே அங்கு சபையேறும் என்பதால், ஜனநாயகத்தின் பெயரால், அந்த அதிகாரங்களை தெரிவுக்குழுவின் மூலம் பறித்துக் கொள்ளலாம். 

இந்தியா செல்வதற்கு முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதுபற்றிய அச்சத்தை இந்திய ஊடகம் ஒன்றிடம் வெளிப்படுத்தியிருந்தார். மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களை தெரிவுக்குழு பறித்து விடுமோ என்று அஞ்சுவதாக அவர் கூறியிருந்தார். அதனால், தெரிவுக்குழுவில் தற்போதைய அதிகாரங்களுக்குக் குறைவான எதையும் பரிசீலிப்பதில்லை என்ற உறுதிப்பாட்டையும் கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அத்தகைய அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அப்படி அதிகாரங்களை குறைப்பதானால் தமது அரசிடம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் ஒருபோதும் முடியாது என்றே கூறலாம். ஏனென்றால் அது இந்தியாவினது மட்டுமன்றி மேற்குலகினதும் கடும் விரோதத்தை சம்பாதித்துக் கொடுக்கும். ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை வரையறையின்றி நீடிப்பதை உள்ளடக்கிய 18வது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் நிறைவேற்றிய போது மேற்குலகம் கடுமையாக எதிர்த்தது. இது இலங்கையை சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லும் என்ற கருத்திலேயே மேற்குலக நாடுகள் உள்ளன. 

இப்படிப்பட்ட நிலையில், 13வது திருத்தத்தில் கைவைப்பதன் மூலம் சர்வதேச ஆதரவை இலங்கை முற்றாகவே இழக்கும் நிலை ஏற்படலாம். எனவே அரசாங்கம் தன்னிடமுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு 13வது திருத்தத்தைப் பலவீனப்படுத்த எத்தனிக்காது. ஆனால், எல்லாக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தெரிவுக்குழுவின் மூலம் அந்தச் சதியை அரங்கேற்றலாம். இந்தப் பயத்துக்கு முடிவு கட்ட கூட்டமைப்பு முனைவதாகத் தெரிகிறது. இந்தியப் பயணத்துக்கு முன்னதாக, சுமந்திரன் வெளியிட்ட இந்த அச்சம், இந்தியாவிடம் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கான ஒரு உத்தியாகவே கருதலாம். தெரிவுக்குழுவுக்குச் செல்வதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில், அவர் இதனைக் கூறியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தப்பத்தி எழுதப்படும் போது, புதுடெல்லியில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தன. 

தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என்று இரா.சம்பந்தன் கூறியிருந்தாலும், அரசாங்கம் மீண்டும் ஏமாற்றாது என்று உறுதி அளித்தால், தெரிவுக்குழுவுக்கு வரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் பத்தி வெளியாகும் போது புதுடெல்லி பேச்சுக்களை முடித்துக் கொண்டு கூட்டமைப்புக் குழு நாடு திரும்பியிருக்கும். தெரிவுக்குழு தொடர்பான தீர்மானம் ஒன்றுக்கும் அவர்கள் வந்திருக்கக் கூடும். இந்தியப் பயணம் கூட்டமைப்பின் உறுதிப்பாட்டை மாற்றியமைக்குமா என்ற கேள்விகள் இருந்தாலும், தெரிவுக்குழு என்ற அரசாங்கத்தின் பொறியை உடைப்பதற்கு புதுடெல்லிப் பயணத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்ற கேள்வியே வலுவாக உள்ளது. ஏனென்றால், தெரிவுக்குழு ஊடாகவே எதையும் கொடுக்க முடியும் என்ற அரசின் பிடிவாதத்தில் உள்ள அரசுக்கு, அதன் வழியிலேயே பதிலடி கொடுக்க வேண்டிய ஒரு சூழலை புதுடெல்லிப் பயணம் உருவாக்கியுள்ளது போலவே தோன்றுகிறது.

("ஹரிகரன் இபோதமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment