ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் சிறிலங்கா அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது.
தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், 'தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கு' என்ற தலைப்பில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார்.
ஆனால் திடீரென இறுதி நேரத்தில் அவரது உரை நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் மைக்கல் டிலானி வரும் 27ம் நாள் திட்டமிட்டபடி சிறிலங்காவுக்கு வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கான நுழைவிசைவு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும், கொழும்பில் இருதரப்பு வர்த்தக உறவுகள் தொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார் என்றும் சிறிலங்காவின் வர்த்தக தொழில்துறை அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
எனினும் இவரது உரை நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை லக்ஸ்மன் கதிர்காமர் நிலையம் தெளிவுபடுத்த மறுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் அமைந்துள்ள நேட்டோவின் தென்பிராந்திய கட்டளைப்பணியகத்தில் முன்னர் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய மைக்கல் டிலானி, அதன்பின்னரே தற்போதைய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியான இவர், உலகளவிலான அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவராவார்.
இவரது உரைக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் அனுமதி வழங்கியிருந்தார்.
ஆனால், வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகரான சஜின் வாஸ் குணவர்த்தனவே இவரது உரையை திடீரென நிறுத்துமாறு உத்தரவிட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
டிலானி ஒரு அமெரிக்கர் என்றும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கரை இங்கு பேசவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த உரை நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 கருத்துரைகள் :
Post a Comment