ரஷ்யாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பெரு வெற்றிபெற்று விளாடிமிர் புட்டின் மீண்டும் ஜனாதிபதியாகவிருப்பது மேற்குலகைப் பொறுத்தவரை நல்ல செய்தியாக இருக்காது என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் அமைந்திருக்கவில்லை என்ற தொனியில் மேற்குலக நாடுகள் தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்கள் புட்டினை ஏற்கெனவே ஆத்திரமடைய வைத்திருக்கிறது.
சில மேற்கு நாடுகள் தேர்தலை மோசடி என்று வர்ணித்த அதேவேளை, வேறு சில நாடுகள் புட்டினை வாழ்த்திச் செய்தி அனுப்புவதைத் தாமதித்திருந்தன. தனது ஐக்கிய ரஷ்யக் கட்சி கடந்த டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் சொற்ப பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்றதையடுத்து முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறி மாஸ்கோவில் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கிய போது அந்தப் போராட்டங்களைத் தூண்டிவிடுவதாக மேற்குலகைக் குற்றஞ்சாட்டுவதற்கு புட்டின் தயங்கவில்லை. இவ்வாரம் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெற்ற பின்னரும் கூட முறைகேடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வண்ணமிருக்கின்றன. அரபுலகில் ஆட்சி மாற்றங்களுக்கு வழிவகுத்த அரபு வசந்தம் மக்கள் கிளர்ச்சிகளை ஒத்ததாக ரஷ்ய வசந்தமொன்றைத் தோற்றுவிப்பதற்கு மேற்குலகம் முயற்சிக்கின்றது என்பதே புட்டினின் குற்றச்சாட்டாகும்.
கெடுபிடி யுத்தத்தின் முடிவிற்குப் பிறகு ரஷ்யாவின் முதல் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர் போறிஸ் ஜெல்ட்சின். அவருக்கு அடுத்து ஜனாதிபதியாக வந்த புட்டின் 2000-2008 காலகட்டத்தில் இரு பதவிக்காலங்களுக்குத் தொடர்ச்சியாக கிரெம்ளினில் அதிகாரத்தில் இருந்தார். ரஷ்ய சம்மேளனத்தின் அரசியலமைப்பு தொடர்ச்சியாக இரு பதவிக் காலங்களுக்கு மேல் எவரும் ஜனாதிபதியாகப் பதவியில் தொடருவதற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருக்கக்கூடியதான பதவிக் காலங்களை இரண்டாக மாத்திரம் மட்டுப்படுத்தும் அந்த அரசியலமைப்பு ஒரு ஜனாதிபதி மொத்தமாக எத்தனை பதவிக் காலங்களுக்குப் போட்டியிட முடியுமென்பது தொடர்பில் எந்த மட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. தனது பிரதமராக இருந்த விசுவாசி டிமிட்ரி மெட்வடேவை 2008 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைத்து அவர் வெற்றிபெற்ற பிறகு புட்டின் பிரதமராகிக் கொண்டார். மெட்வடேவ் அவரது முதலாவது பதவிக் காலத்தின் முடிவில் இரண்டாவது பதவிக் காலத்திற்குப் போட்டியிடுவதில் நாட்டம் காட்டாமல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் புட்டினைப் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்பதே இருவருக்கும் இடையிலான ஏற்பாடாகும். மெட்வடேவ் கிரெம்ளினில் பிரவேசித்தபோது புட்டின் "டுமா' என்று அழைக்கப்படும் ரஷ்யப் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து பிரதமர் பதவியில் அமர்ந்தார். மெட்வடேவின் பதவிக்காலத்தின் இறுதி மாதங்களில் புட்டினே கூடுதல் அதிகாரங்கள் கொண்டவர் போன்று நடந்துகொண்டார். பதவிகளைக் கைமாற்றிக் கொள்ளும் இந்த ஏற்பாட்டின் அடுத்த கட்டமாக ஐக்கிய ரஷ்யக் கட்சியின் வேட்பாளராக 2012 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இவ்வாரம் புட்டின் வெற்றிபெற்றிருக்கிறார்.
பாராளுமன்றத் தேர்தல்களையடுத்து டிசம்பரில் ரஷ்ய நகரங்களில் நீண்ட ஆர்ப்பாட்டங்களைப் பார்த்த சர்வதேச அரசியல் அவதானிகள் மார்ச்சில் மீண்டும் ஜனாதிபதியாவதற்கான புட்டினின் ஏற்பாடுகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுக்கூடுமென்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் 65 சதவீதமான வாக்குகளைப் பெற்ற அதேவேளை, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் உட்பட ஏனைய சகல வேட்பாளர்களும் மொத்தமாக 35 சதவீத வாக்குகளை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. ரஷ்யப் புலனாய்வு சேவையான கே.ஜி.பி. யின் முன்னாள் அதிகாரியான 60 வயதான புட்டின் மூன்றாவது தடவையாக எதிர்வரும் மே 7 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவரின் புதிய பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டில் முடிவடையுமென்ற போதிலும் புட்டின் மீண்டும் ஒரு பதவிக் காலத்திற்கு அதிகாரத்தில் இருப்பதற்கு நாட்டம் காட்டுவார் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. சோவியத் யூனியன் சின்னாபின்னமானதையடுத்து, தோன்றிய குழப்பகரமான சூழ்நிலைக்குப் பிறகு புட்டின் தனது முதல் இரு பதவிக்காலங்களிலும் ரஷ்யாவிற்கு பொருளாதார மீட்சியையும் உறுதிப்பாட்டையும் கொண்டுவந்தார். அதன் காரணத்தினாலேயே அவருக்கு இயல்பாக இருக்கின்ற எதேச்சாதிகார குணாதிசயத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு பலம்வாய்ந்த தலைவர் என்று அவரை அதிகப் பெரும்பான்மையான ரஷ்யர்கள் நம்புகிறார்கள். ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் வாயுவை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு கேந்திர முக்கியத்துவமுடைய பிராந்தியமாகத் திகழும் செச்னியாவில் முஸ்லிம்களின் பிரிவினைவாதக் கிளர்ச்சியை கொடுங்கரங்கொண்டு புட்டின் ஒடுக்கினார்.
பொருளாதார மற்றும் அரசியல் உறுதிப்பாடு மீளவும் நிலைநிறுத்தப்பட்ட உடனடியாகவே ரஷ்யாவை மீண்டும் அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசாக மாற்றும் தனது விருப்பத்தை புட்டின் மறைத்துவைக்கவில்லை. 4600 க்கும் அதிகமான அணு குண்டுகளைத் தன்னகத்தே வைத்திருக்கும் ரஷ்யா உலகின் மிகப்பெரிய பாரம்பரிய இராணுவ பலம் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. புட்டின் காலத்தில் ரஷ்யா ஆயுத அபிவிருத்திகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டது. கிழக்கில் முன்னேறுகின்ற சீனாவின் பொருளாதார வல்லமையும் மீண்டும் தனது நாட்டை வல்லரசாக்குவதற்கு புட்டின் மேற்கொள்ளக்கூடியதாக திட்டங்களும் சேர்ந்து அமெரிக்காவுக்கும் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) அமைப்புக்கும் கடுமையான சவால்களைத் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிரியா, ஈரான் நெருக்கடிகளில் அமெரிக்காவினதும் மேற்குலகினதும் திட்டங்களுக்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் இணைந்து செயற்பட ஆரம்பித்திருக்கும் போக்கு உலக விவகாரங்களில் கிழக்கு முகாம்இ மேற்கு முகாம் என்ற தோற்றப்பாட்டை விரைவில் மீண்டும் கொண்டுவரும் நிலக்காட்சிகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துவிட்டன.
0 கருத்துரைகள் :
Post a Comment