கூட்டமைப்பினர் மனித உரிமைகள் பேரவைக்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தாது, எல்.எல்.ஆர்.சி. யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளமை வரலாற்றுத்தவறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.கடந்த இரண்டு பத்திகளுக்கு முன்னதாக தற்போதைக்கு தமிழ்த் தரப்பு என்னவிடயங்களை செய்ய வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தோம். ஒன்று தற்போதைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் தமிழ்த் தரப்பை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மக்களது ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டு தமிழ் மக்களது நிலைப்பாட்டை ஆணித்தரமாக கூற வேண்டும் என்பதும், மற்றயது பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் தமிழ்த் தரப்பு செல்லக்கூடாது என்பதுமாகும்.
அந்த வகையில் கடந்த 25.02.2012 அன்று ஒரு அறிக்கையூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமது கட்சி ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என்பதனை அறிவித்ததுடன் அதற்கான காணங்களையும் அறிக்கையொன்றின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
ஐநா மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற தீர்மானத்தை விளக்கும் வகையில் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பின்னால் இருக்கும் உண்மையான நோக்கங்களைப் பற்றி இப்பத்தி ஆராய்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஐயம் ஒன்றினை கடந்த ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் மேற்கொண்டிருந்தது. அதன்போது அமெரிக்கா மற்றும் அமெரிக்க சார்பு நாடுகள் சிறீலங்கா அரசு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளனர் என்பது தெரியவருகின்றது.
அமெரிக்க விஐயம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐனவரி மாதத்தில் சுமந்திரன் அவர்கள் கனடா-தமிழ் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் உரையாற்றும்போது ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அக்கறையைச் செலுத்திவருவதாக முதன்முதலில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மிகவும் நெருங்கிய வட்டாரங்களை ஆதாரமாகக் கொண்டு ஊடகங்களில் வெளியான செய்திகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த ஐ.நா அமர்வுகளில் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டிருந்தது. இச் செய்திகளின் உண்மைதன்மை தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் சில ஊடகங்கள் கேட்டபோது அதில் உண்மை இருப்பதுபோல காட்டிக்கொண்டனர். ஆனால் இறுதி முடிவு காலப்போக்கில் அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டே எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.
அதுமட்டுமல்ல கூட்டமைப்பு மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதானது சிறீலங்கா அரசுக்கு எதிரான தேசத்துரோக செயலாக கருதப்படாதா? சிங்கள மக்கள் அவ்வாறு கருத மாட்டார்களா? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த சம்பந்தன்; அவர்கள் பின்வருமாறு கூறினார். அதாவது பிறேமதாச அரசுக்கு எதிராக மகிந்தராஐபக்சவே முன்னைய மனித உரிமை ஆணைக்குழுவுக்குச் சென்று அன்றைய பிறேமதாச அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டார். அவர் அப்போது செய்தது தேசத்துரோகம் இல்லாவிட்டால் நாங்கள் செய்வதும் தேசத்துரோகமாக கருதமுடியாது என்ற கருத்துப்பட பதிலளித்திருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நாங்கள் இந்த அமர்வுகளில் கலந்துகொள்வது சிங்கள மக்களுக்கு எதிரான செயலெனக் கருதாமல் அது எமக்கு வாக்களித்த தமிழ் மக்களுடைய நலன்கள் மற்றும் உரிமைகள் பற்றிய விடயமாகவே கருத வேண்டும் என்ற தொனிப்படவும் பதிலளித்திருந்தார்.
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தங்களது அமெரிக்க விஐயத்திற்குப் பிற்பாடு மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்துகொள்வது தொடர்பாக மறைமுகமாகவும்இ நேரடியாகவும் கருத்துக்களை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர்.
இதற்குக் காரணம் மேற்குநாடுகள் சிறீலங்காவுக்கு எதிராக ஓர் தீர்மானத்தினை கொண்டுவரப் போகின்றார்கள் என்றால் அத்தீர்மானத்தைக் கொண்டுவருவதில் தமக்கும் ஓர் பங்கிருந்தது என்ற மாயையினை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கமேயாகும். எனினும் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் எத்தகையது என்பது உறுதியாகத் தெரிந்திராத நிலையில்இ மாநாட்டில் தாம் கலந்து கொள்வோமா என்ற முடிவை அவர்களால் உறுதியாக கூறமுடியாதிருந்தது.
மேற்குநாட்டு அரசுகள் எல்.எல்.ஆர்.சி அறிக்கையினை நிராகரித்தே தீர்மானங்களை மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் எல்.எல்.ஆர்.சி அறிக்கையினை நிராகரித்திருந்தனர். அதே நம்பிக்கையிலேயே இவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்பாக கவனம் செலுத்திவருவதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் எல்.எல்.ஆர்.சி யின் அறிக்கை வெளியான பின்னர், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் (மேற்குலகை மையப்படுத்தியவை) அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியதுடன்இ யுத்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான பொறுப்புக்கூறும் விடயத்தில் சர்வதேச பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தன.
ஆனால் சர்வதேச அரசுகளோ முதற்கட்டமாக எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும்இ யுத்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறும் விடயத்தில் உள்ளகப் பொறிமுறை ஒன்றினை உருவாக்கி அதனை எப்படி நிறைவேற்றப்போகின்றார்கள் என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன. இவ்விடத்திலேயே ஜெனீவா செல்வதா இல்லையா என்ற விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குப் பெரும் பிரச்சினையாக மாறத் தொடங்கியது. காரணம் கூட்டமைப்பினர் எல்.எல்.ஆர்.சி அறிக்கையை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்த நிலையில், கூட்டமைப்பினரது கணிப்பீட்டிற்கு மாறாக சர்வதேச நாடுகள் எல்.எல்.ஆர்.சி அறிக்கையை வரவேற்று, பொறுப்புக்கூறும் விடயத்தில் சுயாதீன உள்ளக பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்பதுடன் மட்டுப்படுத்தியிருந்தன. இந்த இக்கட்டான நிலையில் கூட்டமைப்பின் முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன.
முதலாவது ஜேனீவாவிற்குச் சென்று சர்வதேச சமூகத்தினால் முன்மொழியப்படும் எல்.எல்.ஆர்.சி யினை அமுல்ப்படுத்தல் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்;மானத்தை ஆதரித்தல். இரண்டாவது தெரிவு மேற்படி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது. மூன்றாவது தெரிவு ஜேனீவாவுக்குச் சென்று அங்கத்துவ நாடுகளின்; தூதுவர்கள் மத்தியில் தமிழ் மக்களது நலன்களை கருத்தில் கொண்டுஇ இனப்படுகொலை தொடர்பான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தல். இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வதென்று உறுதியான தீர்மானமெடுக்க முடியாத குழப்பநிலை கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டது.
அவர்கள் முதலில் தாம் ஜேனீவா சென்று எல்.எல.ஆர்.சி பரிந்துரைகளை அமுல்ப்படுத்ததுமாறு கோரும் வகையில் மேற்கு நாடுளால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்தல் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். இந்த நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருந்தமைக்கு ஆதாரமாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கடந்த 14.02.2012 அன்று பிபிசி சந்தேசிய சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் 'தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்.எல்.ஆர்.சி ன் ஆலோசனைகளை நடைமுறை படுத்துவதற்கான ஓர் உள்நாட்டு பொறிமுறையை ஆதரிக்கின்றது' என்றும்இ 'இது தோல்வியில் முடிந்தால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றை நாம் கோரவேண்டும்' என்றும் கூறியிருந்ததைக் குறிப்பிடலாம். இந்த நிலைப்பாட்டுக்கு தாயகத்திலும், புலத்திலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியமையால் இம் முடிவைக்கைவிட்டனர்.
எல்.எல.ஆர்.சி யின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்தக் கோருகின்றதான தீர்மானத்திற்கு ஜேனீவா சென்று ஆமோத்திப்பதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனை பிபிசி செவ்வி தொடர்பாக மக்கள் மத்தியில் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பலைகளில் இருந்து புரிந்து கொண்டனர். அதேவேளை கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் விரும்புவது போன்ற சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுத்துவதனை தீர்மானத்தை கொண்டுவரும்; நாடுகள் தத்தமது பூகோள அரசியல் நலன்காரணமாக விரும்பவில்லை என்பதனையும் புரிந்து கொண்டனர். எனவே கூட்டத்தொடருக்குச் செல்வதில்லை என்ற வரலாற்றுத் தவறான முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இது ஓர் உள்வீட்டுப் பிரச்சினை என்றும் இவ்விடயத்தினை ஐ.நா வில் கொண்டுவருவதன் மூலம் நாட்டின் இறைமை மீறப்படுகின்தென சிறீலங்கா அரசாங்கம் ஒருபுறம் கூறிக்கொண்டிருக்கும்போது, மறுபுறத்தில் சிறீலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிரதிநிதிகள், கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மானம் உள்ளகப் பொறிமுறையை மட்டுமே வலியுறுத்துகின்றதுஇ அவ்வகையான பொறிமுறையூடாக எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லைஇ மாறாக சர்வதேச விசாரணை பொறிமுறையே தேவை என்பதனை வலியுறுத்தியிருந்தால், அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகள் ஓர் தர்மசங்கட நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பாக்ர்கள். அதாவது கொண்டுவரப்படவுள்ள உத்தேச தீர்மானம் யாருடைய நலனுக்காக கொண்டுவரப்படுகின்றது என்ற கேள்வி இயல்பாகவே எழுந்திருக்கும்.
ஆகவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ் மக்களது நலன்களை முன்னிறுத்தி சர்வதேச பக்க சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியிருக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டை எடுக்க விரும்பாமையினாலேயே ஜேனீவா சென்றால் கலவரம் ஏற்படும் என்ற பொய்யை சாட்டாகக் கூறினர். அந்தப் பொய்யினை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து கூட்டமைப்பை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதும் தம்மை நியாயப்படுத்த பொய்யிற்குமேல் பொய்களை கூறிவருகின்றனர். எதைச் சொல்லியும் சமாளிக்க முடியாத நிலையில் அவசர அவசரமாக கடிதம் ஒன்றினை எழுதி மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளது பிரதிநிதிகளுக்கு அனுப்பியதன் மூலம் தமிழ் மக்கள்மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பலையை சமாளிக்க முயன்றுள்ளனர்.
இந்தக் கடிதம் எழுதுவதில் த.தே.கூ ற்கு இருந்த சிக்கல் என்னவென்றால் ஒரு புறம் தமிழ் மக்களை சமாளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் மறுபுறம் ஐ.நா வில் சிறீலங்கா தொடர்பாகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை வரவேற்பதாகவும் இருக்க வேண்டும். அவர்களது கடிதத்தில் தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் முயற்சியாக பின்வருமாறு குறிப்பிடுகின்றனர். 'பொறுப்புக்கூறும் கடப்பாடு அவசரமானதென்று நாம் கருதுகின்றோம். பாதிக்கப்பட்ட சமூகங்கள் மன அவஸ்த்தைகளில் இருந்து மீண்டும் தங்கள் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு அது அவசியமானதாகும்.
தனிப்பட்ட துக்கங்களை கூட்டாகக் கொண்டுவரவும், உண்மையான நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தவும் இலங்கையில் தண்டனையிலிருந்து விலக்குப்பெறும் வட்டத்தை உடைக்கவும் முக்கியமாக மீண்டும் வன்செயல் எழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும் பொறுப்புக்கூறும் கடப்பாடு மிகவும் முக்கியமானதாகும். இக்காரணங்களால்த்தான் கடைசி கட்ட யுத்தத்தில் இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட நம்பக்ககூடிய போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று சர்வதேசத்தை வற்புறுத்தியிருந்தோம்'.
அதேபோன்று இந்தத்தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ள சர்வதேச நாடுகளை திருப்பதிப்படுத்துவதற்காக பின்வருமாறு அக்கடிதம் முடிக்கப்படுகின்றது. 'ஜேனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் பொறுப்புக் கூறுதல் பற்றி விரிவாக ஆராயப்பட வேண்டுமென்றும் (உள்ளகரீதியாக) கூறும் பிரேரணை முன்வைக்கப்டபவிருப்பதாகவும் அறிகின்றோம்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து என்ற தனது உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகின்றது என்பதனை நீங்கள் அறீவீர்கள். பேரவையில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணை இலங்கை அரசாங்கத்தினால் திருப்;பத்திரும்ப கூறிவரும் உறுதிமொழிகளை-இன்று நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ள பரிந்துரைகளை-நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும் அதன் மூலமாக தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகள் பூர்த்திசெய்து கொள்ளப்படும்.'
எமது மக்கள் இங்கு மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கூட்டமைப்பினர் எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை என்ற விடயத்தை குறிப்பிடும்போது அந்தக்கோரிக்கை ஓர் கடந்தகாலக் கோரிக்கையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது (தற்போது தேவை என்று வலியுறுத்தவில்லை). மாறாக எல்.எல்.ஆர்.சி யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோருவதனையும்இ பொறுப்புக்கூறல் தொடர்பாக உள்ளகப் பொறிமுறையை உருவாக்குவதல் என்ற வகையில் தற்போது கொண்டுவரப்படும் தீர்மானத்தை வரவேற்பதனை தங்களது தற்போதய நிலைப்பாடு என்ற வகையில் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
இவ்வாறான குழப்பகரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளமையை நியாயப்படுத்துவதற்காக 'இராஐதந்திரமாக செயற்படுகிறோம், பக்குவமாக செயற்படுகிறோம், நிதானமாக செயற்படுகிறோம், பொறுப்புடன் செயற்படுகின்றோம்' என்று வார்த்தையாலங்களை கூறுவதானது சிறீலங்கா அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களில் இருந்து அரசாங்த்தை காப்பாற்றுவதற்கு துணைபுரிவதாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் மகிந்தசமரசிங்கா அவர்கள் கூட்டமைப்பு ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கெடுக்காததன் மூலம் அரசாங்கத்தின் சரியானபோக்கு நிரூபனமாகியிருப்பதாக கூறியிருப்பது கூட்டமைப்பினரது இராஐதந்திரத்தை கேலிக்குரியதாக்குவதுடன்இ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்படுகின்றனர் என்ற முடிவைத்தவிர வேறு முடிவுக்கு வரமுடியாதுள்ளது.
ஐநா நிபுணர்குழுவினர் 02.03.2012 ம் திகதி கூட்டாக எழுதிய கட்டுரையில் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் விதாமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பிரேரணை போதாதென்றும் தம்மால் தமது அறிக்கையில் முன்மொழியப்பட்டவாறு சர்வதேச விசாரணை ஒன்றினை நடாத்துவதற்கான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்த வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்துள்ளனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கு எழுதிய கடிதத்துடன் ஒப்பிடும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தளவுக்கு தமிழ் மக்களது அபிலாசைகளை வெளிப்படுத்துவதில் தவறிழைத்துள்ளது என்பது புலானாகின்றது.
இன்னுமொரு வகையில் கூறவதாயின் தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வேண்டுமென்றே கூறாது மறைத்த விடயத்தினை தமிழ் மக்களுடன் தொடர்பில்லாத ஓர் சர்வதேச நிபுணர்குழு ஒன்று சொல்லியிருப்பது எமது பிரதிநித்ததுவ அரசியலின் வங்குரோத்துத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. ஐ.நா நிபுணர்குழு மற்றும் சர்வதேச ஆர்வலர்கள் அனைவரும் எடுத்துவரும் முயற்சிகளையும் மலினப்படுத்தி செயலற்றதாக்குவதாக கூட்டமைப்பினரது அறிக்கை அமைந்துள்ளது. இதுதான் கூட்டமைப்பினர் கூறும் இராசதந்திரம்.
நன்றி - தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment