ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தால் அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும் என்று சிறிலங்கா அமைச்சர்கள் புலம்பியுள்ளனர்.
சிறிலங்காவின் வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் பலர் தமக்கு ஆதரவளித்த போதும், பின்னர் பலமிக்க நாடுகளின் அழுத்தம் காரணமாக தம்மைக் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் எமக்கு கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமைச்சர் தினேஸ் குணவர்தன-
தீர்மானத்தின் முக்கியத்துவத்தை பாராமல், அரசியல் நோக்கங்களுக்காகவே பல நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பல நாடுகள் ஆதரித்தன.
மோதலுக்குப் பின்னர் சிறிலங்கா முன்னெடுத்திருக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் குறித்து தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.
மனிதஉரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட சிறிலங்கா அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றை, தீர்மானித்தை ஆதரித்த நாடுகள் கவனத்தில் கொள்ளவில்லை.
சிறிலங்காவுக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. மொத்தமாக 23 நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாக உள்ளன.
47 நாடுகளில் 23 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லை. இது சிறியதொரு வித்தியாசம் தான்.
இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவான நிலையை எடுத்திருக்காவிட்டால் அது வாக்கெடுப்பை சமப்படுத்தியிருக்கும்.
சிறிலங்கா அரசாங்கம் எதிர்காலத்தில் பல்வேறு நாடுகளுடன் நீண்டகால மற்றும் குறுகியகால அடிப்படையில் நட்புறவுகளைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க -
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கு பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை, ஜெனிவாவில் தங்கியிருந்த சிறிலங்கா குழுவினர் இறுதிநேரத்தில் கூட முயற்சியெடுத்திருந்தனர்.
ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தமது பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளுக்கு எதிராக அழுத்தங்களைக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பல நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்தன.
இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்காது போனால், பல நாடுகள் இந்தியாவைப் பின்பற்றியிருக்கும்.
இந்த நிலையில் அனைத்துலக நாடுகளுடன் சிறிலங்கா எதிர்காலத்தில் உறவுகளைப் பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சிறிலங்காவின் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன கருத்து வெளியிடுகையில்,
அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான வாக்கெடுப்பு, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.
அரசியல் ரீதியான கூட்டு மற்றும் இராஜதந்திர அரசியலை அடிப்படையாகக் கொண்டே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பில் அனைத்துலக நாடுகள் மத்தியில் தவறான தகவல்களை வழங்குவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சிறிலங்கா அமைச்சர் விமல் வீரசன்ச-
சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் நாட்டு மக்களுக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை.
இந்தச் செயற்பாடு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் ஒட்சிசன் வழங்குவதைப் போன்றே அமைந்துள்ளது,
0 கருத்துரைகள் :
Post a Comment